ஆன்மாக்களை கை கொண்டு குளிர்விக்கலாம்!

20 Nov, 2023 | 05:10 PM
image

எத்தனையோ கோயில்களுக்குச் சென்று வருகிறோம், ஆனால், கோயில்களின் கோபுர அளவுக்கு ஏன் மூலஸ்தான மூர்த்தி இல்லை? என்று என்றாவது சிந்தித்திருக்கிறீர்களா? அதற்குக் காரணம் இருக்கிறது.

ஒரு கோயிலைத் தாபிப்பவர், அந்தக் கோயிலின் மூல மூர்த்தியின் விக்கிரகத்துக்கு உயரத்துக்கு நிகரான படியில் – அதாவது எடையில் – சாதம் வைத்துப் படைத்து வணங்க வேண்டும் என்பது நியதி. இதனால்தான், கோயிலோ, கோபுரமோ உயரமானதாக இருந்தாலும் மூர்த்தி சிறிதாகவே இருப்பார். 

மூர்த்தி எந்தளவு சிறிதாக இருந்தாலும் அந்தளவு படி சாதம் வைத்துப் படைத்து வணங்காவிட்டால், அந்தக் கோயிலைத் தாபித்தவர்களின் குடும்பம் கஷ்டத்துக்கு உள்ளாகும் என்றும் கோயில் நியதிகள் கூறுகின்றன. அதிலிருந்து தப்பவே அந்தக் காலங்களில் கோயிலைக் கட்டிவைத்த மன்னர்களோ, பிரபுக்களோ, நிலச்சுவான்தார்களோ கோயிலுக்கென்று சில விளைநிலங்களையும் எழுதிவைத்து, அவற்றில் இருந்து மானியம் கோயிலுக்குச் செல்வதை உறுதிப்படுத்திக் கொண்டார்கள்.

பரமாத்மாவுக்கு இவ்வளவு என்றால், ஜீவாத்மாவுக்கும் ஒரு கணக்கு இருக்கிறது.

ஆடி அமாவாசை அன்று கடற்கரைகளில் பார்த்தால், பல்லாயிரக்கணக்கானோர் தம் பெற்றோர்களுக்கு தர்ப்பணம் செய்வதைக் காணலாம். இப்படிச் செய்வதன் மூலம், உடலை உகுத்து வெளியேறிய ஜீவாத்மா, சுகப்படும் என்பது நம்பிக்கை.

ஆனால், முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது கூட, எல்லோராலும் முடிந்த காரியமில்லை, அதுவும் தற்போதைய நிலையில்! இவ்வாறான சூழலில் சிக்கியிருப்பவர்களுக்கு, அதிலிருந்து விடுபட ‘விஷ்ணுபுராணம்’ என்ற நூல் ஒரு வழி சொல்கிறது.

அமாவாசையன்று, இளங்காலைப் பொழுதில், வெள்ளை வேட்டி மற்றும் துண்டும் கட்டி, ஒரு கடற்கரை அல்லது ஒரு வெட்டவெளியில் நின்றபடி, சூரியனைப் பார்த்து, “என் முன்னோர்களின் ஆன்மாக்களைச் சுகப்படுத்தவோ, பிதுர்க்களுக்கு சிரார்த்தம்‌ செய்யவோ வசதியில்லை. எனவே, கையுயர்த்திக் கொடுக்கிறேன், இதுவே என் தர்ப்பணம்” என்று, இரண்டு கைகளையும் வானை நோக்கித் தூக்கி மனதாரப் பிரார்த்தித்தால், முன்னோர் ஆன்மாக்கள் இரங்கிவிடும்.

என்றபோதும் போதிய பணவசதி இருந்தும் இப்படிச் செய்து ஆன்மாக்களின் அருள் பெறலாம் என்று மட்டும் எண்ணிவிடாதீர்கள். அது உங்கள் மீதான ஆன்மாக்களின் கோபத்தை மென்மேலும் அதிகரித்து விடலாம்.

- தொகுப்பு: ஜாம்பவான் சுவாமிகள்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right