நியூயோர்க்கின் இறைச்சித் தொழிற்சாலை ஒன்றில் இருந்து தப்பியோடிய காளை மாடு ஒன்று, பொலிஸாரின் இரண்டு மணிநேரத் துரத்தலுக்குப் பின் கொன்று பிடிக்கப்பட்டது.

இறைச்சித் தொழிற்சாலையில் பாதுகாப்புக் குறைபாடுகள் காரணமாகத் தப்பியோடிய இந்தக் காளை மாடு, நியூயோர்க் நகர வீதிகளில் ஓடியபடியே அங்கிருந்த மக்களைத் தாக்கவும் முயற்சித்தது. 

இந்த விடயம் குறித்து கிடைக்கப்பெற்ற தகவலின் பேரில் உடனடியாக அங்கு வந்த பொலிஸார் காளை மாட்டைப் பிடிக்கத் திணறினர். ஐந்து பொலிஸ் வாகனங்களில் சுமார் பதினைந்து பொலிஸார் வந்த போதும், மாட்டுக்கு அருகில் சென்று அதைத் தொடவும் தயங்கினர். இதனால் மயக்க ஊசி அடங்கிய ஊசிகளை மாட்டின் மீது ஏவினர்.

முதுகில் ஊசிகள் குத்தப்பட்ட நிலையிலும் கூட தனது ஓட்டத்தைக் கைவிடாத அந்தக் காளை, கடைசியில் ஒரு வீட்டின் பின்புறம் சென்று ஒளிந்துகொண்டது. பொலிஸார் அதைக் கண்டுபிடித்துவிட்டாலும், அதைத் தொட யாரும் துணியவில்லை.

கடைசியில், மயக்க மருந்தின் வீரியம் அதிகமாக இருந்ததால் அந்தக் காளை உயிரிழந்தது. பின்னர், பொலிஸார் சிலர் சேர்ந்து மாட்டின் உடலை அப்புறப்படுத்தினர்.