சௌண்டு பார்ட்டியா நீங்கள்?

20 Nov, 2023 | 03:05 PM
image

பண்டிகைகள், விழாக்களின் போது, ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்படுவது பரவலாகி வருகிறது. இது சாதாரணமானதாகத் தெரிந்தாலும் இதன் ஆபத்துக்கள் பற்றியும் அறிந்திருப்பது அவசியமாகிறது.

ஒலி மாசு என்ற ஒரு அம்சம் தற்போது நாட்டில் எங்கும் கடைப்பிடிக்கப்படுவதாகத் தெரியவில்லை. இளைஞர்கள் இரு சக்கர வாகனத்தில் பயணிக்கும்போது, விசேடமாக உருவாக்கப்பட்ட ஒலிப்பான்களைப் பயன்படுத்துகின்றனர். மேலும் தமது வாகனம் பிரத்தியேகமாகத் தெரியவேண்டும் என்பதற்காக, இரு சக்கர வாகனத்தின் என்ஜினின் ஒலியையும் மாற்றியமைக்கின்றனர்.

மூலம் எதுவாக இருந்தாலும் அதீத ஒலி, நமது ஆரோக்கியத்துக்குப் பாதிப்பானதாகவே அமையும்.

சாதாணமாக, எழுபது டெசிபல் அளவு வரையான ஒலியை மட்டுமே நமது காதுகள் தாங்கிக்கொள்ளும். அதற்கு மேலான ஒலியைத் தொடர்ந்து கேட்டால் காதுகள் கேட்பது பாதிக்கப்படும்.

இதுகூடப் பரவாயில்லை. நாம் மேலே குறிப்பிட்டது போல, பண்டிகைகளின்போது பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கிகளின் சத்தம் மற்றும் இளைஞர்கள் பயணிக்கும் வாகனங்கள் எழுப்பும் ஒலியானது, 100 டெசிபலுக்கு மேலாக இருந்தால், செவிப்பறை வெடிப்பு மற்றும் தலை சுற்று ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது. 

இதைவிட அபாயகரமானது என்னவென்றால், மேற்படி ஒலியானது, செவிகள் மூலம், இதயத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் செவிப்புலத்தைத் தூண்டுகிறது. திடீரென்ற இந்த அதீத ஒலி செவிப்புலம் ஊடாக இதயத்தைத் தொடும்போது மாரடைப்பு ஏற்பட்டு மரணம் சம்பவிக்கும் நிலைகூட உருவாகலாம்.

இதற்கு உதாரணமாக, இந்தியாவில் இவ்வாண்டு கொண்டாடப்பட்ட விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின்போது, இரண்டு இளைஞர்கள் மாரடைப்பால் சம்பவ இடத்தில் உயிரிழந்தமையைக் குறிப்பிடலாம். இவ்விளைஞர்களுக்கு மாரடைப்பு ஏற்படக் காரணம், அந்த விழாவில் பயன்படுத்தப்பட்ட அளவுக்கு மீறிய ஒலிபெருக்கிகளின் ஒலியமைப்புத்தான்.

அதீத ஒலியின் முதல் பாதிப்பு கேட்கும் திறன் பாதிப்பதுதான். அதிலும் தொடர்ச்சியாக நீண்ட காலம் இவ்வாறான ஒலியைக் கேட்பது உறுதியாக செவித்திறனைப் பாதிக்கும். பல்வேறு தொழிற்சாலைகளில் பணியாற்றுவோர், போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி, அதீத ஒலிக்கு மத்தியில் வேலை செய்வது செவித்திறன் பாதிப்பு மட்டுமன்றி, ஹோர்மோன் கோளாறுகள், மனப் பாதிப்புகளையும் ஏற்படுத்தும்.

அதீத ஒலியால் ஏற்படும் ஒலி மாசு காரணமாக, தமனியின் இரத்த அழுத்தம் சடுதியாக உயரலாம். இதனால் பல ஆரோக்கியக் குறைபாடுகள் ஏற்படும். மாரடைப்பு, பக்கவாதம் என்பன இவற்றுள் மிக ஆபத்தான விளைவுகளுக்கு உதாரணம்.

எனவே, கூடியவரையில் சத்தத்தைக் குறைத்துப் பயன்படுத்துவோம். அதன்மூலம், நமது ஆரோக்கியத்தையும் நம்மைச் சூழவுள்ளவர்களின் ஆரோக்கியத்தையும் பாதுகாப்போம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right