நாடு பெரும் பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ள நிலையில் அடுத்த ஆண்டுக்கான வரவு–செலவுத்திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு 2ஆம் வாசிப்பு மீதான குழுநிலை விவாதம் இடம்பெற்று வருகின்றது. வரவு–செலவுத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் எதிரணியினர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வரவு–செலவுத்திட்டத்தில் நம்பக்கத்தன்மை இல்லை என்று குற்றம்சாட்டியிருக்கின்றார். அடுத்த வருடத்துக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு–செலவுத்திட்டம் நடப்பாண்டுக்கான வரவு–செலவுத்திட்டத்தில் முன்வைக்கப்பட்ட பிரேரணைகள் மற்றும்வேலைத்திட்டங்களில் முன்னேற்றங்கள் தொடர்பாக மீளாய்வு செய்யாமலேயே சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் வரவு–செலவுத்திட்ட நம்பகத்தன்மை குறித்து சிக்கல்கள் உள்ளன என்று அவர் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
இதேபோன்றே வரவு–செலவுத்திட்ட விவாதத்தில் உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரட்ண, இந்த திட்டத்தை சமர்ப்பித்து ஒட்டுமொத்த மக்களையும் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க சுவிட்சர்லாந்துக்கு சுற்றுப்பயணம் அழைத்து சென்றிருக்கின்றார். கனவு உலகத்தை வரையறுத்து வரவு–செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. சமூக கட்டமைப்பில் நிலவும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் யோசனைகள் முன்வைக்கப்படவில்லை. சிறந்த யோசனைகளை நாங்கள் முன்வைக்கின்றோம். முடிந்தால் செயற்படுத்துங்கள் என்று வலியுறுத்தியிருக்கின்றார்.
இந்த வரவு–செலவுத்திட்டம் தொடர்பில்கருத்து தெரிவித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற நிதியியல் குழுவின் தலைவருமான ஹர்ஷ டி சில்வா பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் ஜனாதிபதி இந்த திட்டத்தை சமர்ப்பித்துள்ளார் என்பதை ஏற்றுக்கொள்கின்றோம். ஆனால் சமூக கட்டமைப்பில் காணப்படும் அடிப்படைப்பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வகையில் வரவு–செலவுத்திட்டம் அமையவில்லை என்று அவர் தெரிவித்திருக்கின்றார்.
இவ்வாறு எதிரணியினர் வரவு–செலவுத்திட்டம் தொடர்பில் விமர்சனங்களை முன்வைத்து வருகின்ற நிலையில் ஆளும் தரப்பானது பொருளாதார மீட்சியை நோக்கமாகக் கொண்டு இந்த திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு சகலரும் ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என்றும் கோரிவருகின்றனர்.
பாராளுமன்றத்தில் வரவு–செலவுத்திட்டத்தை கடந்த 13ஆம் திகதி சமர்ப்பித்த ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான ரணில்விக்கிரமசிங்க நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு சகலரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட முன்வரவேண்டும் எனவும் அழைப்பு விடுத்திருந்தார். அரசியலைவிடுத்து இனியாவது நாம் அனைவரும் நாடு குறித்து சிந்திக்கவேண்டுமென்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியிருந்தார்.
இதேபோன்றே வரவு–செலவுத்திட்டத்தை சமர்ப்பித்த பின்னர் மறுநாள் ஜனாதிபதி செயலகத்தில் ஊடக பிரதானிகளை சந்தித்து கலந்துரையாடிய ஜனாதிபதி நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுப்பதே தனது முதற்பணி என்று தெரிவித்திருந்தார். அடுத்த வருடம் முதல் சில மாதங்கள் சவால்களை சந்திக்கவேண்டியுள்ளதாகவும் அதன் பின்னர் படிபடியாக பொருளாதாரத்தில் முன்னேற்றம் காண முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியை ஒரே வரவு–செலவுத்திட்டத்தின் ஊடாக தீர்க்கவோ, அல்லது புறக்கணிக்கவோ முடியாது. அந்த நிலையை எதிர்கொள்ள அரசாங்கம் நாட்டை தயார் படுத்தவேண்டும். தற்பொழுது அந்த பணியையே அரசாங்கம்மேற்கொண்டு வருகின்றது என்றும் ஜனாதிபதி கடந்த 15ஆம் திகதி இடம்பெற்ற கொழும்பு பல்கலைக்கழக பட்டப்பின்படிப்பு பட்டதாரிகள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த வரவு–செலவுத்திட்டம் தொடர்பான கலந்துரையாடலில் உரையாற்றியபோது தெரிவித்திருந்தார்.
இவ்வாறு வரவு–செலவுத்திட்டத்தை விமர்சிக்கும் வகையில் எதிரணியினரும் அதிலுள்ள சாதக விடயங்களை எடுத்துக்கூறும் வகையில் ஆளும் தரப்பினரும் செயற்பட்டு வருகின்றனர்.
வங்குரோத்து நிலையை அடைந்திருந்த நாடு தற்போது படிப்படியாக ஓரளவுக்கு முன்னேற்றம் கண்டு வருகின்றது. பொருளாதார ரீதியில் தீர்க்கமான முன்னேற்றத்தை நோக்கி நாடு நகர்கின்றது. இதனடிப்படையில்தான் அடுத்த ஆண்டுக்கான வரவு–செலவுத்திட்டத்தை அரசாங்கம் சமர்ப்பித்திருக்கின்றது. இந்த திட்டத்தில் அரசாங்க ஊழியர்களுக்கு 10ஆயிரம் ரூபா கொடுப்பனவு அதிகரிப்புக்கான யோசனை முன்வைக்கப்பட்டிருக்கின்றது. ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு 2500 ரூபா கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளது. சிரேஷ்ட பிரஜைகளுக்கான கொடுப்பனவு 3000 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க ஊழியர்களுக்கு 10ஆயிரம் ரூபா அதிகரிப்பு வழங்கப்பட்டுள்ள போதிலும் தனியார் துறையினருக்கு சம்பள உயர்வு தொடர்பிலான பரிந்துரைகள் வரவு–செலவுத்திட்டத்தில் இல்லை என்ற விமர்சனம் முன்வைக்கப்படுகின்றது.
வடக்கு, கிழக்கு மற்றும் மலையக பகுதிகளின் அபிவிருத்திக்கு போதியளவு திட்டங்கள் உட்படுத்தப்படவில்லை என்று விமர்சனம் முன்வைக்கப்படுகின்ற நிலையில் வடக்கு, கிழக்கில் மீள்குடியேற்றத்தை மேற்கொள்வதற்காக வீடமைப்புத் திட்டத்துக்கு 200 கோடி ரூபா ஒதுக்கப்பட்டிருக்கின்றது. இதனைவிட காணாமல்போனோர்களுக்கான இழப்பீட்டுத் தொகையை தொடர்ந்தும் வழங்குவதற்கு 1000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருக்கின்றது.
இதேபோன்று மலையக மக்களுக்கு காணி உரித்து வழங்கும் செயற்பாட்டை ஆரம்பிப்பதற்காக ஆரம்பகட்டமாக 400கோடி ரூபா ஒதுக்கப்பட்டிருக்கின்றது. அத்துடன் உட்கட்டமைப்பு வசதிகளுக்காகவும் 1000 மில்லியன் ரூபா ஒதுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கின்றது. வறிய மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் அஸ்வெசும திட்டத்தை மேலும் விருத்தி செய்யும் வகையில் 250 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
இவ்வாறு பல்வேறு திட்டங்கள் தொடர்பில் அறிவிக்கப்பட்டிருக்கின்ற போதிலும் இந்த முன்மொழிவுகள் உரியவகையில் நடைமுறைப்படுத்தப்படுமா? அதற்கான செயற்றிட்டங்கள் என்ன என்பது தொடர்பில் தற்போது எதிரணியினர் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
உண்மையிலேயே நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில் மக்கள் பெரும் கஷ்டங்களை அனுபவித்துவருகின்றனர். பொருட்கள், சேவைகளின் விலைகள் பன்மடங்கு அதிகரித்துள்ளன. இவ்வாறு செலவீனம் அதிகரித்துள்ள நிலையில் வருமானம் போதியளவின்றி மக்கள் திண்டாடி வருகின்றனர். செலவீனங்களை கட்டுப்படுத்த முடியாது மக்கள் துன்பப்படுகின்றனர்.
இவ்வாறு தமது வாழ்வாதாரத்தை கொண்டுநடத்த முடியாது பெரும் இன்னல்படும் மக்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கவேண்டியதன் அவசியம் காணப்படுகின்றது ஆனால் வங்குரோத்து அடைந்துள்ள ஒருநாட்டை மீளக்கட்டியெழுப்பி பொருளாதாரத்தை மீட்சிஅடைய செய்த பின்னரே மக்களுக்கான. உரிய நிவாரணங்களை வழங்குவது என்பது சாத்தியமாகும்.
இதனால்தான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வரவு–செலவுத்திட்டத்தை சமர்ப்பித்த பின்னர் அந்த திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு சகல தரப்பினரதும் ஒத்துழைப்புக்களை .கோரியிருந்தார்.
கடந்த வருடம் ஜூலை மாதம் அவர் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கு ஒன்றிணையுமாறு எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தார். அதேபோன்றுதான் தற்போ வரவு–செலவுத்திட்டத்தை சமர்ப்பித்த பின்னரும் அரசியலைப்பற்றி சிந்திக்காது நாட்டைப்பற்றி சிந்தித்து ஒத்துழைப்பு வழங்குமாறு அழைப்பு விடுத்திருக்கின்றார்.
கடந்த ஆண்டு நாடு பெரும் நெருக்கடிக்குள் சிக்கியிருந்தது. அத்தியாவசியப் பொருட்களைக்கூட கொள்வனவு செய்ய முடியாத நிலைமை நீடித்து வந்தது. ஆனல் தற்போது அந்த நிலைமை மாற்றம் கண்டுள்ளது. அதனையும் தனது வரவு–செலவுத்திட்ட உரையின் போது ஜனாதிபதி சுட்டிக்காட்டியிருந்தார்.
தற்போது சர்வதேச நாணய நிதியத்துடன் மேற்கொள்ளப்பபட்ட உடன்படிக்கைக்குஅமையவே வரவு–செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோன்றே வரி அதிகரிப்பு உட்பட பல்வேறு செயற்றிட்டங்களின் மூலம் நாட்டின் வருமானத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கையும் முன்னெடுக்கப்படுகின்றது. இத்தகைய நடவடிக்கைகள் நாட்டு மக்களை பாதிக்கும் வகையில் அமைந்திருக்கின்றன.
ஆனாலும் சில மாதங்களுக்கு இத்தகைய சவால்களை சந்தித்தே மீட்சிபெற வேண்டி உள்ளதாக ஜனாதிபதி தெரிவித்து வருகின்றார். இந்த சூழ்நிலையில் பொருளாதார மீட்சியை ஏற்படுத்தும் வகையில் சகல தரப்பினரும் ஒத்துழைப்புக்களை வழங்கவேண்டியது அவசியமாக உள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் உதவியினை தொடர்ச்சியாக பெறுவதற்கும் வெளிநாட்டு முதலீடுகளை உள்ளீர்ப்பதற்கும் சுற்றுலாத்துறையினை அபிவிருத்தி செய்வதற்கும் தொடர்ச்சியான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டியுள்ளது. எனவே தற்போதைய நிலையில் அரசியல் சுயநலன்களை விடுத்து நாட்டின் மீட்சிக்காக ஆளும் கட்சியினரும், எதிர்க்கட்சியினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM