2023 உலகக் கிண்ண தொடரில் இந்தியா முதல் தடவையாக சகல விக்கெட்களையும் இழந்தது : அவுஸ்திரேலியாவின் வெற்றி இலக்கு 241

19 Nov, 2023 | 06:19 PM
image

(அஹமதாபாத்திலிருந்து நெவில் அன்தனி)

அஹமதாபாத், நரேந்த்ர மோடி விளையாட்டரங்கில் தற்போது நடைபெற்றுவரும் 13ஆவது உலகக் கிண்ண கிரிக்கெட் சம்பியனைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியாவுக்கு 241 ஓட்டங்களை இந்தியா வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

அவுஸ்திரேலியா பதிலுக்கு துடுப்பெடுத்தாடும்போது பந்துவீச்சு, களத்தடுப்பு ஆகியவற்றில் இந்தியா மிகவும் அற்புதமாக செயற்பட்டால் மாத்திரமே மூன்றாவது உலக சம்பியன் பட்டத்தை சுமக்கும் அதன் கனவு நனவாகும். அல்லது அவுஸ்திரேலியா சாதனைமிகு 6ஆவது தடவையாக உலக சம்பியன் பட்டத்தை சுமந்து செல்லும்.  

மந்தகதி ஆடுகளத்தில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இந்தியா 50 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 240 ஓட்டங்களைப் பெற்றது. இம்முறை உலகக் கிண்ணப் போட்டியில் சகல விக்கெட்களையும் இந்தியா இழந்தது இதுவே முதல் தடவையாகும்.

அவுஸ்திரேலிய அணித் தலைவர் பெட் கமின்ஸ் பந்துவீச்சில் பிரயோகித்த சிறப்பான வியூகங்கள், வீரர்களின் மிகத் துல்லியமான பந்துவீச்சு, நினைத்துப்பார்க்க முடியாத அதி சிறந்த களத்தடுப்பு என்பவற்றால் இந்திய துடுப்பாட்ட வீரர்களால் சுதந்திரமாக ஓட்டங்களைப் பெற முடியாமல் போனது.

லீக் சுற்றில் ஒரு போட்டியைத் தவிர்ந்த மற்றைய எல்லா போட்டிகளிலும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்தியாவின் துடுப்பாட்டம் இறுதிப் போட்டியில் சோபிக்கவில்லை.

இந்தியாவின் ஆரம்பம் ஓரளவு சிறப்பாக இருந்தபோதிலும் பின்னர் அதன் ஓட்ட வேகம் வெகுவாக குறைந்தது.

முதல் 10 ஓவர்களில் 80 ஓட்டங்களைப் பெற்ற இந்தியா, அடுத்த 40 ஓவர்களில் 160 ஓட்டங்களையே பெற்றது. இதன் காரணமாக ஆயிரக்கணக்கில் அரங்கில் குழுமியிருந்த இந்திய இரசிகர்கள் ஏமாற்றம் அடைந்ததுடன் அவர்களது ஆரவாரங்களும் முதல் 10 ஓவர்களுடன் மட்ப்படுத்தப்பட்டுவிட்டது.

ரோஹித் ஷர்மாவும் ஷுப்மான் கில்லும் 18 பந்துகளில் 30 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது மிச்செல் ஸ்டார்க்கின் பந்துவீச்சில் அடம் ஸம்ப்பாவிடம் பிடிகொடுத்து கில் 4 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

மொத்த எண்ணிக்கைக்கு மேலும் 36 ஓட்டங்கள் சேர்ந்தபோது மெக்ஸ்வெலின் பந்தை ரோஹித் ஷர்மா கவனக் குறைவாக ஓங்கி அடித்தபோது சுமார் 10 யார் தூரம் ஓடிய ட்ரவிஸ் ஹெட் அருமையான பிடி ஒன்றை எடுக்க இந்தியாவின் 2ஆவது விக்கெட் சரிந்தது.

ரோஹித் ஷர்மா 47 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். இந்த உலகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் ரோஹித் ஷர்மா 40களில் 5ஆவது தடவையாக ஆட்டம் இழந்தமை குறிப்பிடத்தக்கது.

அவரைத் தொடர்ந்து ஷ்ரேயாஸ் ஐயர் 4 ஓட்டங்களுடன் களம்விட்டு வெளியேறினார். அவர் கமின்ஸின் பந்துவீச்சில் விக்கெட் காப்பாளர் இங்க்லிஸிடம் பிடிகொடுத்து ஆட்டம் இழந்தார். (81-3 விக்)

இதனைத் தொடர்ந்து உலகக் கிண்ண சாதனை நாயகன் விராத் கோஹ்லியும் கே. எல். ராகுலும் மிகவும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 3ஆவது விக்கெட்டில் 67 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு ஆறுதலைக் கொடுத்தனர்.

ஆனால், பெட் கமின்ஸ் வீசிய பந்து விராத் கோஹ்லியின் துடுப்பில் பட்டு விக்கெட்டைப் பதம்பார்க்க அவர் பெரும் ஏமாற்றத்துடன் வெளியேறினார்.

இந்த சுற்றுப் போட்டியில் 6ஆவது அரைச் சதத்தைப் பூர்த்திசெய்த விராத் கோஹ்லி 54 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார்.

இந்த உலகக் கிண்ணத்தில் விராத் கோஹ்லி 3 சதங்கள், 6 அரைச் சதங்களுடன் 765 ஓட்டங்களை மொத்தமாக குவித்தார்.

அடுத்து களம் புகுந்த ரவிந்த்ர ஜடேஜா ஓட்ட வேகத்தை அதிகரிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஹேஸ்ல்வூடின் பந்துவீச்சில் இங்க்லிஸிடம் பிடிகொடுத்த ஜடேஜா 9 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

இந் நிலையில் கடைசி சிறப்பு துடுப்பாட்ட வீரரான சூரியகுமார் யாதவ் களம் புகுந்து ராகுலுடன் ஜோடி சேர்ந்து பொறுமையுடன் துடுப்பெடுத்தாடினார்.

ஆனால், மொத்த எண்ணிக்கை 203 ஓட்டங்களாக இருந்தபோது மிச்செல் ஸ்டாக்கின் பந்துவீச்சில் இங்கிலிஸிடம் பிடிகொடுத்த கே.எல். ராகுல் 66 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். 107 பந்துகளை எதிர்கொண்ட அவர் ஒரே ஒரு பவுண்டறியையே அடித்திருந்தார்.

அவரைத் தொடர்ந்து ஸ்டாக்கின் பந்துவீச்சில் இங்க்லிஸிடம் பிடிகொடுத்து ஷமி 6 ஓட்டங்களுடனும் அடம் ஸம்ப்பாவின் பந்துவீச்சில் ஜஸ்ப்ரிடம் பும்ரா எல்பிடபிள்யூ முறையில் ஒரு ஓட்டத்துடனும் ஆட்டம் இழந்தனர். (217-8 விக்.)

நெருக்கடிகளின்போது அதிரடி ஆட்டத்திற்கு பெயர் பெற்ற சூரியகுமார் யாதவ் இந்தப் போட்டியில் பிரகாசிக்கத்தவறினார்.

அவர் 18 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது ஹேஸ்ல்வூடின் பந்துவீச்சில் இங்க்லிஸிடம் பிடிகொடுத்து களம் விட்டகன்றார். விக்கெட் காப்பாளர் இங்க்லிஸ் எடுத்த 5ஆவது பிடி இதுவாகும்.

குல்தீப் யாதவ் கடைசிப் பந்தில் 10 ஓட்டங்களுடன் ரன் அவுட் ஆனார். மொஹமத் ஷமி 9 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் மிச்செல் ஸ்டாக் 55 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் பெட் கமின்ஸ் 34 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஜொஷ் ஹேஸ்ல்வூட் 60 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

றினோன் கால்பந்தாட்டப் பயிற்சியகத்தின் 'கால்பந்தாட்டம் மூலம்...

2025-01-14 19:24:40
news-image

டிசம்பர் மாதத்தின் அதிசிறந்த ஐசிசி வீரர்...

2025-01-14 18:34:07
news-image

மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா...

2025-01-14 17:02:04
news-image

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பெத்தும்...

2025-01-14 14:24:06
news-image

வட மாகாணத்தில் மேசைப்பந்தாட்டப் பயிற்சித் திட்டம்

2025-01-14 14:11:23
news-image

19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக்...

2025-01-13 22:15:59
news-image

தனது பதவியை இடைநிறுத்தியதற்கு நியாயம் கோரி...

2025-01-13 15:21:48
news-image

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் ஆரம்ப...

2025-01-13 10:05:18
news-image

மெல்பேர்ன் டெஸ்டுடன் டெஸ்ட் போட்டிகளில் இருந்து...

2025-01-13 10:05:39
news-image

24H சீரிஸ் கார் ஓட்டப் பந்தயத்தில்...

2025-01-13 04:59:17
news-image

மென்செஸ்டர் SA ஏற்பாட்டில் அழைப்பு கால்பந்தாட்ட...

2025-01-12 22:09:08
news-image

பெத்தும், குசல், ஜனித் ஆகியோர் அரைச்...

2025-01-11 17:55:14