கிளிபர்ட் கிண்ணத்திற்கான றகர் அரையிறுதிப் போட்டியில் சீ.ஆர்.என்ட். எப்.சி. அணியை வெற்றிகொண்ட கண்டி அணி எதிர்வரும் 26 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ள கிளிபர்ட் கிண்ண இறுதிப் போட்டியில் விளையாட முதல் அணியாக தெரிவாகியுள்ளது.

இந்நிலையில், கண்டி அணி 26 ஆம் திகதி இடம்பெறும் இறுதிப்போட்டியில் இலங்கை கடற்படை அணி அல்லது ஹவலொக் அணியை சந்திக்கவுள்ளது.

கண்டி  நித்தவலை மைதானத்தில் நேற்று மாலை இடம்பெற்ற அரையிறுதிப் போட்டியில் 56;16 என்ற புள்ளி அடிப்டையில் சீ.ஆர்.என்ட். எப்.சி. அணியை வெற்றிகொண்டதன் மூலம் இறுதிப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றுள்ளது.

கண்டி அணி இடைவேளையின் போது 27:9 என்ற புள்ளி அடிப்டையில் முன்னிலை வகித்தது. கண்டி அணி மொத்தம் 9 ட்ரைகள், 4 ட்ரைகளுக்கான மேலதிகப் புள்ளிகள், ஒரு பெனால்டி ஆகியன மூலம் 56 புள்ளிளைப் பெற்றது.

சீ.ஆர்.என்ட். எப்.சி. அணி ஒரு ட்ரையும் அதற்கான மேலதிகப் புள்ளியும் 3 பெனால்டியையும் பெற்று 16 புள்ளிளை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது.

கண்டி அணி சார்பாக தனுஷ்க ரஞ்சன் 3 ட்ரை, விஸ்வமித்ர ஜயசிங்க, தனுஸ்தயான், புனேக உடன்கமுவ, யாக்கூப் அலி, ரிசார்ட் தர்தபால, சுகிறு அந்தனி ஆகியோர் தலா ஒவ்வொரு ட்ரைகளையும் திலின விஜேசிங்க 3 கொண்வேசன் மற்றும் ஒரு பெனல்டி, நைஜில் ரத்வத்தை ஒரு கொண்வேசன் என்பன மூலம் புள்ளிகளைப் பெற்றுக் கொடுத்தனர்.

சீ.ஆர்.என்ட். எப்.சி. சார்பாக ஒமல்கா குனரத்ன, அசான் டிகொஸ்தா, நளின் குமார ஆகியோர் புள்ளிளைப் பெற்றுக் கொடுத்தனர். 

இலங்கை றகர் சம்மேளனத்தின் அதிகாரி ரொகான் குனரத்ன, கண்டி விளையாட்டுக் கழகத் தவிசாளர் நிகால் ரத்வத்தை, சீ.ஆர்.என்ட். எப்.சி. விளையாட்டுக் கழக தவிசாளர் அம்சா அலி ஆகியோர் அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.