(அஹமதாபாத்திலிருந்து நெவில் அன்தனி)
பதின்மூன்றாவது உலகக் கிண்ண கிரிக்கெட் அத்தியாயத்தில் தோல்வி அடையாமல் இருக்கும் வரவேற்பு நாடான இந்தியாவுக்கும் ஐந்து தடவைகள் உலக சம்பியனான அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான உலகக் கிண்ண இறுதிப் போட்டி அஹமதாபாத், நரேந்த்ர மோடி விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (19) நடைபெறவுள்ளது.
இந்த உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் தொடர்ச்சியாக 10 வெற்றிகளை ஈட்டிய இந்தியா, 3ஆவது தடவையாக உலக சம்பியனாகும் குறிக்கோளுடன் இறுதிப் போட்டியை எதிர்கொள்ளவுள்ளது.
லீக் சுற்றில் இரண்டு அணிகளும் தமது ஆரம்பப் போட்டியில் ஒன்றையொன்று எதிர்த்தாடியபோது இந்தியா 6 விக்கெட்களால் அவுஸ்திரேலியாவை வெற்றிகொண்டிருந்தது. அதனைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பங்களாதேஷ், நியூஸிலாந்து, இங்கிலாந்து, இலங்கை, தென் ஆபிரிக்கா, நெதர்லாந்து ஆகிய அணிகளை மிகவும் இலகுவாக இந்தியா வீழ்த்தியிருந்தது.
அரை இறுதிப் போட்டியில் நியூஸிலாந்திடம் ஓரளவு சவாலை எதிர்கொண்ட இந்தியா 70 ஓட்டங்களால் வெற்றிபெற்று இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது.
இதேவேளை, தனது முதல் இரண்டு போட்டிகளில் இந்தியாவிடமும், தென் ஆபிரிக்காவிடமும் தோல்வி அடைந்த அவுஸ்திரேலியா அதன் பின்னர் இலங்கை, பாகிஸ்தான், நெதர்லாந்து, நியூஸிலாந்து, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான். பங்களாதேஷ் ஆகிய அணிகளை வெற்றிகொண்டிருந்தது.
தொடர்ந்து மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய தென் ஆபிரிக்காவுடனான அரை இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியா 3 விக்கெட்களால் வெற்றியீட்டி இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை உறுதிசெய்துகொண்டது.
1983, 2011 ஆகிய வருடங்களில் உலக சம்பியனான இந்தியா 4ஆவது தடவையாக இறுதிப் போட்டியில் விளையாடவுள்ளது.
ஜொஹானெஸ்பேர்கில் 2003இல் நடைபெற்ற உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இந்தியாவும் அவுஸ்திரேலியாவும் விளையாடியபோது அவுஸ்திரேலியா 125 ஓட்டங்களால் வெற்றிபெற்றிருந்தது.
அவுஸ்திரேலியா 8ஆவது தடவையாக இறுதிப் போட்டியில் விளையாடவுள்ளதுடன் 1987, 1999, 2003, 2007, 2015 ஆகிய வருடங்களில் சம்பியனாகியது. 1975இலும் 1996இலும் இறுதிப் போட்டிகளில் அவுஸ்திரேலியா தோல்வி அடைந்தது.
இம் முறை இறுதிப் போட்டியில் விளையாடும் இந்த இரண்டு அணிகளில் இந்தியா சற்று பலம்வாய்ந்த அணியாகத் தென்படுகிறது.
இந்திய அணியில் சாதனை வீரர் விராத் கோஹ்லி, ரோஹித் ஷர்மா, ஷுப்மான் கில், ஷ்ரேயாஸ் ஐயர், கே. எல். ராகுல், மொஹமத் ஷமி, ஜஸ்ப்ரிட் பும்ரா, குல்தீப் யாதவ், ரவிந்த்ர ஜடேஜா, மொஹமத் சிராஜ் ஆகிய அனைவரும் திறமையை வெளிப்படுத்தியுள்ளனர்
அவுஸ்திரேலிய அணியில் டேவிட் வோர்னர், ட்ரவிஸ் ஹெட், மானுஸ் லபுஷேன், மிச்செல் மார்ஷ், அடம் ஸம்ப்பா, மிச்செல் ஸ்டாக், ஜொஷ் ஹேஸ்ல்வூட், பெட் கமின்ஸ் ஆகியோர் சிறப்பாக விளையாடியுள்ளனர்.
ஒரு இலட்சத்து 30,000 இரசிகர்கள்
இன்றைய இறுதிப் போட்டியின்போது ஒரு இலட்சத்து 30,000 ஆசனங்களைக் கொண்ட நரேந்த்ர மோடி விளையாட்டரங்கு இந்திய இரசிர்களால் நிரம்பி வழியும் என்பதில் சந்தேகம் இல்லை.
இரசிகர்கள் முற்பகல் 11.00 மணியிலிருந்தே விளையாட்டரங்கை நோக்கி படை எடுக்க ஆரம்பித்துவிட்டனர்.
இறுதிப் போட்டி நடைபெறும் நிலையில் அஹமதாபாத்திற்கான உள்ளூர் விமான டிக்கெட்டின் விலை இலங்கை நாணயப்படி ஒரு இலட்சத்து 85,000 ரூபாவரை உயர்ந்துள்ளதுடன் ஹோட்டல் அறைகளின் விலைகளும் வெகுவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மூன்று நட்சத்திர ஹோட்டல்களில் அறை ஒன்றின் விலை 2,500 ரூபாவிலிருந் 40,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டடுள்ளது.
இதேவேளை, இறுதிப் போட்டிக்கான நாணய சுழற்சி பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெற்றதும் இந்திய விமானப்படையினரின் ஆகாய சாகசங்கள் இடம்பெறுவதுடன் பிரபல கலைஞர்களின் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
பணப்பரிசுகள்
இறுதிப் போட்டியில் சம்பியனாகும் அணிக்கு 4 மில்லியன் அமெரிக்க டொலர்களும் இரண்டாவது இடத்தைப் பெறும் அணிக்கு 2 மில்லியன் அமெரிக்க டொலர்களும் பணப்பரிசாக கிடைக்கும். இதனைவிட உலகக் கிண்ணப் போட்டியில் பங்குபற்றிய 10 அணிகளுக்கும் பங்குபற்றுதல் மற்றும் ஒவ்வொரு வெற்றிக்கான பணப்பரிசுகளும் வழங்கப்படும்.
அணிகள்
இந்தியா: ரோஹித் ஷர்மா (தலைவர்), ஷுப்மான் கில், விராத் கோஹ்லி, ஷ்ரேயாஸ் ஐயர், கே. எல். ராகுல், ரவிந்த்ர ஜடேஜா, சூரியகுமார் யாதவ் அல்லது ரவிச்சந்திரன் அஷ்வின், குல்தீப் யாதவ், மொஹமத் ஷமி, ஜஸ்ப்ரிட் பும்ரா, மொஹமத் சிராஜ்.
அவுஸ்திரேலியா: டேவிட் வோர்னர், ட்ரவிஸ் ஹெட், மிச்செல் மார்ஷ், ஸ்டீவன் ஸ்மித், மானுஸ் லபுஷேன், க்லென் மெக்ஸ்வெல், ஜொஷ் இங்லிஸ், மிச்செல் ஸ்டாக், பெட் கமின்ஸ், அடம் ஸம்ப்பா, ஜொஷ் ஹேஸ்ல்வூட்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM