ஆமை புகுந்தால் அவ்வளவுதானா!

Published By: Nanthini

17 Nov, 2023 | 12:28 PM
image

தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் வேண்டி பாற்கடலை கடைந்தபோது, மத்தாக இருந்த மந்திரமலையை தாங்கி நின்றது மாயவன் அவதாரமான ஆமை.

வாசுகி பாம்பை கயிறாகக் கொண்டு தேவர்களும் அசுரர்களும் வேக வேகமாக பாற்கடலைக் கடைய, மத்தைத் தாங்கி நின்ற ஆமைக்கு அகோரப் பசி உண்டாயிற்று.

எனவே, கடல் ஆழத்தில் வாழ்ந்திருந்த கடல்வாழ் உயிரினங்களைத் தின்று தீர்த்தது. அப்படியும் அதன் பசி ஆறவில்லை. போதாத குறைக்கு அதீத தாகம். முழுக் கடலைக் குடிக்க முயன்றும் அதன் தாகம் தீரவில்லை. 

ஆமையின் அகோர நிலை கண்டு சந்திரனும் சூரியனும் பதைபதைத்துப் போயினர். நிலைமை கைமீறிப் போவதற்கு முன், கைலாயம் சென்ற அவர்கள், நந்தியெம்பெருமானிடம் சிவனருள் வேண்டினர்.

நந்தியின் வேண்டுகோளுக்கு இரங்கிய சிவன், பாற்கடலுக்கு வந்து, தன் சூலத்தால் ஆமையின் உடலைப் பெயர்த்து, அதன் இறைச்சியைக் குடைந்தெடுத்தார். 

அப்படியிருந்தும் மத்தைத் தாங்கிய மாபெரும் பணி செய்த அந்த ஆமைக்கு விமோசனம் தரவேண்டும் என்று எல்லோரும் சிவனிடம் வேண்டினர். 

அதன்படி, அந்த ஆமையை தன் மார்பில் அணிகலனாக அணிந்து விமோசனம் அளித்தார் சிவபெருமான்.

ஆமை, அது புகுந்த கடல் நீரையே வற்ற வைத்தது போல, அது புகும் வீட்டுக்கும் இதே நிலைதான் என்பதை ‘உத்திரகாலாமிர்த‘த்தின் 14வது சுலோகம் விளக்கிக் கூறுகிறது.

ஆமை புகுந்த வீட்டில் இருப்பவர்கள் 21 வாரங்கள் ஞாயிற்றுக்கிழமை தோறும் சிவனுக்கு பாலாபிஷேகம் செய்து, மாலை சாற்றி, பஞ்சாமிர்தம் நெய்வேத்தியம் செய்து, வீட்டில் உள்ளவர்கள் பெயர், நட்சத்திரத்தில் அர்ச்சனை செய்தால் கஷ்டம் நீங்க இறைவன் உதவி செய்வார். 

இந்த பரிகாரங்களை 21 பிரதோஷங்கள் செய்தாலும் கஷ்டங்கள் விலகியோடிவிடும்.

தொகுப்பு : ஜாம்பவான் சுவாமிகள்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right