Women in Management (WIM) அல்லது முகாமைத்துவத்தில் பெண்கள் மற்றும் உலக வங்கி குழுமத்தின் ஒரு உறுப்பினரான IFC என்பன இணைந்து 2017 ஆம் ஆண்டுக்கான மகளிர் நிபுணத்துவ மற்றும் தொழிற்சார் விருதுகளின் கீழ் ‘Top 50’ (மிகச்சிறந்த 50) தெரிவுகளுக்கான விண்ணப்பங்களை கோரியுள்ளன.

இந்த விருதுகள் ஏழாவது தடவையாக வழங்கப்படவுள்ளன. தமது தொழில்துறை, வர்த்தகம் மற்றும் அன்றாட வாழ்வு என்பனவற்றில் மற்றவர்களை ஈர்ந்த மகளிருக்கான ஒரு அங்கீகாரமாக இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.

இலங்கையில் சிறிய மற்றும் நுண் வர்த்தகத் துறைகளில் பங்கேற்று தலைமை தாங்கும் பெண்களுக்குத் தேவையான ஆற்றல் கட்டமைப்பு மற்றும் பயிற்சி வாய்பபுக்கள் என்பனவற்றை வழங்குவதில் IFC மற்றும் WIM என்பன இணைந்து பணியாற்றுகின்றன. மகளிருக்கான இந்த விருதுகளை வழங்குவதில் IFC தொடர்ந்து மூன்றாவது தடவையாக WIM உடன் கைகோர்த்துள்ளது.

WIM இன் ஸ்தாபகரும் தலைவியுமான சுலோச்சனா செகேரா இது பற்றிக் குறிப்பிடுகையில்,

“2017 ஆம் ஆண்டுக்கான தொனிப்பொருள் ‘சமச்சீர் நிலைக்கு அப்பால் - நாளைய பெண் தலைமைகளை அபிவிருத்தி செய்தல்’ என்பதாகும். இது மிகவும் பொருத்தமான ஒரு தலைப்பாகும். இலங்கையில் உள்ள பல கம்பனிகள் புதியதோர் சமத்துவ சந்தர்ப்ப யுகத்தில் புதிய தலைமைத்துவத்துவங்களுக்காக காத்திருக்கின்றன.

தற்போது இந்த ஏழாவது பதிப்பில் இலங்கையின் மிகவும் கீர்த்திமிக்க ஒரு பெண்ணின் சாதனைகளை வெளிச்சம் போட்டுக் காட்டுவதில் நாம் தொடர்ந்து ஈடுபட்டுள்ளோம். இது அடுத்த தலைமுறை பெண் தலைமைத்துவத்தையும் கவருவதற்கு பெரிதும் உதவும்” என்றார்.

இந்த கீர்த்திமிக்க விருதுகளுக்கான விண்ணப்பங்கள் பெப்ரவரி 25 முதல் 30 மே 2017 வரை ஏற்றுக்கொள்ளப்படும். ஜுலை மாதம் 14 ஆம் திகதி கொழும்பு சின்னமன் கிராண்ட் ஹோட்டலில் இந்த விழா கோலாகலமான முறையில் இடம்பெறும்.

பல்வேறு பிரிவுகளில் சுமார் 50 பெண்களுக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளன. இதற்கான விண்ணப்ங்களை www.womeninmanagementawards.org என்ற இணையவழியாகவும் பெற்றுக் கொள்ளலாம்.

2017 நடுவர் குழு உறுப்பினர்களுள் ஒருவரான இலங்கை கூட்டுறவு மொத்த விற்பனை நிலைய (சதொச) தலைவர் டொக்டர் றோஹான்த அதுகோரள இது பற்றி கூறுகையில்,

“WIM இன் Top50 தொழிற்சார் விருது இலங்கையில் மிகவும் கௌரவம் மிக்க ஒரு நிகழ்வாக மாறிவருகின்றது. அதிகளவான விண்ணப்பங்கள் கிடைத்து வருவதோடு கீர்த்திமிக்க உயர் தரம் கொண்ட நடுவர் குழுவொன்றையும் அது கொண்டுள்ளது” என்றார்.

IFC இன் அமீனா ஆரிப், சிங்கர் நிறுவனத்தின் குமார் சமரசிங்க, Lowe LDB இன் லைலாமணி, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸின் நதீஜா தம்பையா, ஹெல்மைன் வேர்ள்ட் வைல்ட் லொஜிஸ்டிக்ஸின் தனியா பொலனோவிட்ட வெத்திமுனி, ஜனாதிபதி சட்டத்தரி பர்ஸானா ஜெமீல் ஆகியோர் இம்முறை நடுவர்களாக பணியாற்றுகின்றனர்.

பொருளாதார அபிவிருத்திக்கும் வளர்ச்சிக்கும் மிக முக்கியமான உந்து சக்தியாக மகளிர் வேலைவாய்ப்பு அமைந்துள்ளது. ஆனால் உலகளாவிய மட்டத்தில் தொழில் சந்தையில் பங்கேற்பதற்கான பெண்களுக்குரிய வாய்ப்பு ஆண்களை விட பெரும்பாலும் 27 வீதம் குறைவாகவே காணப்படுகின்றது.

‘எந்தவொரு நாடும் தனது தொழில் திறன் ஆற்றலில்; அரைவாசியை இழந்து விட முடியாது. பெண் ஊழியர்கள் தமது முழு அளவிலான பொருளாதார ஆற்றலையும் ஏனைய வளங்களையும் முழுமையாக புரிந்து கொள்ளாத நிலையில் சமூக பொருளாதார அபிவிருத்திகள் பாதிப்படையும்’ என்று கூறினார்.

IFC இன் பால்நிலை செயலக தலைவர் ஹென்ரிட் கோல்ப். ‘இலங்கையில் பெண்களுக்கு புதிய வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் இந்த விருதுகள் தொடர்பான WIM இன் தொடர் ஆதரவு மற்றும் அவர்களின் ஏனைய பயிற்சி செயற்பாடுகளைப் பார்த்து நாம் பெருமை அடைகின்றோம’ என்று அவர் மேலும் கூறினார்.

தனியார் துறையில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பதில் IFC உலகளாவிய மட்டத்தில் பணியாற்றுகின்றது. இது கம்பனிகளும் பொருளாதாரங்களும் தமது செயற்பாடுகளை மேம்படுத்திக் கொள்ள வழிவகுக்கின்றது. தீர்மானங்களை எடுப்பதிலும், தொழில்வாய்ப்பு மற்றும் தொழில்முயற்சி என்பனவற்றிலும், தலைமைத்துவத்திலும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சரியான வாய்ப்புகள் அளிக்கப்பட்டால்தான் சமூகங்கள் தமது முழுமையான பொருளாதார ஆற்றல் மட்டத்தை அடைந்து கொள்ள முடியும்.