(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணாமல் போனோருக்கு நிவாரணம் வழங்குவதை போன்று தென்னிலங்கைக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்.
வடக்கு மற்றும் கிழக்கில் மாத்திரமல்ல தெற்கு மாகாணத்திலும் பலர் காணாமல் போயுள்ளார்கள் என்பதை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிந்துக் கொள்ள வேண்டும் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (16) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
பொருளாதார நெருக்கடிக்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன பொறுப்புக் கூற வேண்டும் என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.
இவ்வாறான நிலையில் அந்த அரசாங்கத்தில் அமைச்சு பதவி வகித்தவர்கள் அனைவரும் பொறுப்புக் கூற வேண்டும் என்று குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
பொருளாதார பாதிப்பு தொடர்பில் நாங்கள் அமைச்சரவையில் பல முறை குறிப்பிட்டோம்.இதற்கு தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சு பதவியில் உள்ள சிரேஷ்ட அமைச்சர்கள் சாட்சியமாக உள்ளார்கள்.
வெளிநாட்டு கையிருப்பு பற்றாக்குறையால் ஏற்பட போகும் நெருக்கடிகளை மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என அப்போதைய ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவிடம் நான் பலமுறை எடுத்துரைத்தேன்.
எமது ஆலோசனைகளுக்கு அவர் செவிசாய்த்த போது அப்போதைய நிதியமைச்சர் அதற்கு தடையாக செயற்பட்டார்.
அமைச்சரவையில் பேசி பயணில்லாத காரணத்தால் உண்மையை நாங்கள் மக்கள் மத்தியில் எடுத்துரைத்தோம்.அதன் பிரதிபலனாக அமைச்சு பதவியில் இருந்து நீக்கப்பட்டோம்.
அமைச்சரவையில் நாங்கள் குறிப்பிட்ட எதிர்வு கூறல்கள் நடைமுறையில் சாத்தியமானதை தொடர்ந்து மக்கள் போராட்டம் தோற்றம் பெற்றது, ஆட்சியாளர்கள் பதவி விலகினார்கள்.நெருக்கடிகளை சாதகமாக கொண்டு ரணில் விக்கிரமசிங்க ஆட்சிக்கு வந்தார்.தற்போது 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் கற்பனை உலகை வரையறுத்ததாக காணப்படுகிறது.2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் முன்மொழிவுகள் மீண்டும் முன்மொழியப்பட்டுள்ளன.
அரச வருமானத்தையும் தேசிய உற்பத்திகளையும் மேம்படுத்த எவ்வித திட்டங்களும் அறிமுகப்படுத்தப்படவில்லை.போலியான வாக்குறுதிகள் மாத்திரம் மிதமிஞ்சியுள்ளன.
காணாமல் போனோருக்கு நட்டஈடு வழங்க அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.காணாமல் போனோரது உறவுகளுக்கு நட்டஈடு அல்லது இழப்பீடு வழங்குவதை நாங்கள் எதிர்க்கவில்லை.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணாமல் போனோருக்கு வழங்கப்படும் நிவாரணம் தெற்கு மாகாணத்துக்கும் வழங்கப்பட வேண்டும்.
ஏனெனில் 1987 மற்றும் 1989 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் இடம்பெற்ற கலவரங்களினால் தென்னிலங்கையில் பலர் காணாமல் போயுள்ளார்கள். ஆகவே தென்னிலங்கையிலும் காணாமல் போனோரது உறவுகள் இன்றும் உள்ளார்கள் என்பதை ஜனாதிபதி விளங்கிக் கொள்ள வேண்டும்.
நாட்டின் பொருளாதார பாதிப்பை ஆட்சியாளர்கள் விளங்கிக் கொள்ளாமல் இருப்பதை போன்று தொழிற்சங்கங்களும் அறியாமல் இருப்பது கவலைக்குரியது.தற்போதைய நிலையில் 20 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு கோரி போராட்டத்தில் ஈடுபடுவது முறையற்றது.
இவர்களின் கோரிக்கைக்கு அமைய நாணயம் அச்சிட்டு சம்பளம் அதிகரித்தால் அது சமூக கட்டமைப்பில் பாரிய நெருக்கடிகளை ஏற்படுத்தும்.ஆகவே அரச வருமானத்தை அதிகரிக்கவும், வரி செலுத்தாமல் உள்ளவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM