(எம்.ஆர்.எம்.. வசீம், இராஜதுரை ஹஷான்)
அடுத்த வருடத்துக்காக ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட வரவு செலவு திட்டம் 2023 வரவு செலவு திட்டத்தில் முன்வைக்கப்பட்ட பிரேரணைகள் மற்றும் வேலைத்திட்டங்களின் முன்னேற்றங்கள் தொடர்பாக மீளாய்வு செய்யாமலே முன்வைக்கப்பட்டிருக்கிறது.
அதனால் வரவு செலவுத் திட்ட நம்பகத்தன்மை குறித்து சிக்கல்கள் உள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (14) நிலையியற் கட்டளை 27/ 2இன் கீழ் கேள்வி எழுப்பி குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
எந்தவொரு அரசாங்கமும் ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை முன்வைப்பதில் மட்டும் திருப்தியடைய முடியாது. இதில் குறிப்பிடப்பட்டுள்ள முன்மொழிவுகள் மற்றும் விடயங்களை நிறைவேற்றுவது அரசாங்கம் மற்றும் அரச அதிகாரிகளின் பொறுப்பாகும்.
முன்மொழிவுகள் முன்மொழிவுகள் செயற்படுத்தப்படுகின்றதா இல்லையா மற்றும் அதன் முன்னேற்றம் குறித்து ஆராய்ந்து அறிக்கையிடப்பட வேண்டும். அத்துடன் கடந்த வருட வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை கண்காணிப்பதற்காக காரியாலயம் ஒன்று அமைப்பதாக அரசாங்கம் தெரிவித்திருந்தது. அதனைக்கூட அமைக்கவில்லை.
வெரிட் ஆய்வு நிறுவனத்தின் அறிக்கையின் பிரகாரம்,2023 இக்கான வரவுசெலவு திட்டத்தில் குறிப்பிட்ட 50 திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஏற்பாடு மூலம் 97 சதவீதம் எதற்காக ஒதுக்கப்பட்டது என்பது குறித்த முழுமையான தகவல்கள் இல்லை.
அவ்வாறே,கடந்த வருடம் அதிகளவு நிதி ஒதுக்கப்பட்ட 25 பிரேரணைகளில் 17 பிரேரணைகள் குறித்த தகவல்கள் இல்லை அல்லது அது குறித்து தகவல்களை கண்டறிய முடியாதுள்ளன. அதனால் இந்த வரவு செலவுத் திட்ட நம்பகத்தன்மை குறித்து சிக்கல்கள் உள்ளன.
அத்துடன் 2017 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டம் தொடர்பான தரவுகள் இன்மை 17 வீதமாக காணப்பட்டது 2023 ஆம் ஆண்டு 97 வீதமாக காணப்படுவது எவ்வாறு? இது தொடர்பில் பொறுப்புக்கூற வேண்டியவர் யார் என கேட்கிறோம். இந்த பொறுப்புக்கூறல் இல்லை என்றால் அடுத்த வருட வரவு செலவுத் திட்டம் குறித்து நம்பிக்கை கொள்ள முடியாது.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தின் ஆய்வுப் பிரிவின் பொருளாதார நிபுணர்கள் குழு இணைந்து மேற்கொண்ட ஆய்வின் பிரகாரம்,
2023 வரவு செலவு திட்ட முன்மொழிவுகளின் 77 அம்சங்கள் குறித்த பகுப்பாய்வில் 69 முன்மொழிவுகளின் தகவல்கள் முழுமையடையவில்லை என்றும்,அவற்றில்,12 முன்மொழிவுகளின் தகவல்கள் வெளியிடப்படவில்லை
16 வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படவே இல்லை ,29 திட்டங்களின் முன்னேற்றம் 50 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது. 12 திட்டங்களின் முன்னேற்றம் 50 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. இவ்வாறு இருக்கையில் எவ்வாறு 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட யோசனைகள் மீது நம்பிக்கை வைக்க முடியும்.
அத்துடன் மாகாண சபைகளுக்குட்பட்ட 139 பாடசாலைகளுக்கும், 23 தேசிய பாடசாலைகளுக்கும் சுகாதார வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதாக 2023 வரவு செலவு திட்ட முன்மொழிவுகளின் பிரகாரம் 200 மில்லியன் ரூபா ஒதிக்கியிருந்த போதிலும் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. தகுதியின் அடிப்படையில் பல்கலைக்கழக ஆட்சேர்ப்பு நடைபெறவில்லை .பல்கலைக்கழக பட்டதாரிகளின் நிலைமை குறித்து ஆராய்வதற்கான சபை தொடர்பான சட்ட மூலம் இன்னும் நிறைவேற்றப்படவில்லை.
வெளிநாட்டு புலமைப்பரிசில் திட்டம் இன்னும் கலந்துரையாடல் மட்டத்திலே உள்ளது, உலகளாவிய காலநிலை மாற்ற பல்கலைக்கழகம் ஆரம்பிப்பதாக கூறினீர்கள் அது இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை. இலங்கையின் வரலாறு தொடர்பாக ஆராய்வதற்கான நிறுவனம் ஆரம்பிக்கப்படும் என கூறுனீர்கள், அதுவும் இன்னும் செயற்படுத்தப்படவில்லை. இதன் காரணமாக 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட யோசனைகள் மீது நம்பிக்கை வைக்க முடியாது.
2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட யோசனைகளுக்கு ஆதரவு வழங்குவதாயின் 2023 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிட்ட விடயங்கள் பூர்த்தியாகி இருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு பூரணப்படுத்தவில்லை.
அத்துடன் இம்முறை முன்வைக்கப்பட்டிருக்கும் சில முன்மொழிவுகள் 2023 ஆம் ஆண்டிலும் முன்வைக்கப்பட்டு,நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டபோதும் அது நடைமுறைப்படுத்தப்பட வில்லை. இம்முறையும் குறித்த முன்மொழிவுகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM