"உங்களுடைய ஆபத்து காரணிகளை அறிந்து கொள்ளுங்கள்" ; இன்று உலக நீரிழிவு நோய் தினம்

Published By: Digital Desk 3

14 Nov, 2023 | 10:21 AM
image

2021 ஆம் ஆண்டு சுகாதார அமைச்சினால் நடத்தப்பட்ட (STEPS) கணக்கெடுப்பின்படி, இலங்கையில் 18 முதல் 69 வயதுக்கு இடைப்பட்டவர்களில் இரத்தத்தில் சாதாரண அளவை விட சர்க்கரை 14.6% அதிகமாக இருப்பதாக அடையாளம் காணப்பட்டது. இரத்தச் சர்க்கரையின் அதிகரிப்பு மக்கள்தொகையில் நீரிழிவு நோயைக் குறிக்கும் ஒரு முக்கியமான ஆபத்து காரணியாகக் கருதப்படுகிறது.

உலக சுகாதார நிறுவனம் (WHO) 2019 ஆம் ஆண்டளவில் 940,000 இலங்கையர்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

நீரிழிவு நோயில் இரண்டு வகைகள் உள்ளன, அவை நீரிழிவு நோய் I மற்றும் நீரிழிவு நோய் II ஆகும். நீரிழிவு நோய் வகை I இல், உடலில் உற்பத்தியாகும் இன்சுலின் ஹார்மோன் குறைவதால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது, நீரிழிவு நோய் வகை II இல் நோயாளிக்கு, உடலில் இன்சுலின் உற்பத்தி சாதாரணமாக இருக்கும், ஆனால் அதன் செயல்பாடு குறைவாக இருப்பதால் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது.

நீரிழிவு நோயில், மிகவும் பொதுவானது வகை II ஆகும். சாதாரணமாக 95% நீரிழிவு நோயாளிகள் வகை II சாா்ந்தவா்களாவா்.

நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான காரணிகளைத் தவிர்ப்பது மற்றும் அதை முறையாக நிர்வகிப்பது முக்கியமாகும், இதனால் அதன் சிக்கல்களைக் குறைக்க முடியும்.

நீரிழிவு நோயை தவிர்க்கக்கூடிய பொதுவான ஆபத்து காரணிகள் பின்வருமாறு:

1. அதிக உடற்செயற்பாடுகளற்ற வாழ்க்கை முறை 

2. எண்ணெய் அதிகம் உள்ள உணவுகளை உண்பது

3. மாவுச்சத்து மற்றும் சர்க்கரையின் அதிகப்படியான பயன்பாடு

4. காய்கறிகள் மற்றும் பழங்களை குறைவாக உட்கொள்வது

5. மது அருந்துதல் மற்றும் புகைத்தல்

6. அதிக எடை மற்றும் பருமனாக இருப்பது

7. இடுப்பு சுற்றளவு மற்றும் தொப்பை அதிகரிப்பு

இந்த ஆபத்து காரணிகள் பெரும்பாலும் ஒருவரின் சொந்த நடத்தைகள் மற்றும் பழக்கவழக்கங்களைப் பொறுத்தது. அதாவது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு உடலில் ஏற்படும் பாதகமான விளைவுகளால் நீரிழிவு நோய் வகை II பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது. குழந்தை பருவத்திலிருந்தே சரியான உணவு மற்றும் நடத்தை முறைகளில் கவனம் செலுத்துவது முக்கியம். 

இந்த ஆண்டு உலக நீரிழிவு தினத்திற்கான கருப்பொருள் "உங்களுடைய ஆபத்து காரணிகளை அறிந்து கொள்ளுங்கள்" என்பதாகும். அதற்கு இணையாக, உலக சுகாதார நிறுவனத்தின் இலங்கை அலுவலகம், குழந்தைகளை நீரிழிவு நோயிலிருந்து காப்பாற்றுவதற்காக, "நலமாய் இரு! இலங்கை - உடனே ஆரம்பிப்போம்” என்ற உப கருப்பொருளின் கீழ் ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டத்தை  ஆரம்பித்துள்ளது.

ஆபத்து காரணிகளை அறிந்து கொள்வதன் முக்கியத்துவம் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக சுகாதார அமைச்சகம் தொழில்முறை உரையாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த முயற்சியை ஆதரிப்பதற்காக  உலக சுகாதார நிறுவனத்தின் இலங்கை அலுவலகம், தடுப்பு நடவடிக்கைகளில் முன்கூட்டியே தொடங்குவதற்கான தலையீடுகளில் கவனம் செலுத்துவதற்கும் மேலும் தொழில்முறை உரையாடலை உருவாக்குவதற்கும், நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.

நீரிழிவு நோயினால் பிற்காலத்தில் ஏற்படும் சிக்கல்களைத் தடுக்க குழந்தைப் பருவத்திலேயே நல்ல பழக்கவழக்கங்களைத் தொடங்குவதன் முக்கியத்துவத்தை பெற்றோர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கல்வி அதிகாரிகள் உணர வேண்டியது அவசியமாகும். குழந்தைகளை சரியான பழக்கவழக்கங்களைக் கடைப்பிடிக்க வழிவகுப்பதன் மூலமும், குருட்டுத்தன்மை, சிறுநீரகக் கோளாறுகள், நரம்பு பாதிப்பு, மாரடைப்பு, கைகால்களை துண்டித்தல் போன்றவற்றைக் குறைக்கலாம்.

பொருளாதாரச் சரிவு, அதிக மாவுச்சத்து கொண்ட தரம் குறைந்த உணவு வகைகளை எடுத்துக்கொள்வதற்கு வழிவகுக்கும், இது நீரிழிவு நோய் வகை II ஐ மேலும் மோசமாக்கும் என்று கருதப்படுகிறது. நீரிழிவு நோய் வகை II சிறுவயதிலேயே தோன்றி, இளம் வயதினரை அதிகம் பாதிக்கிறது என்று உலகளாவிய ஆராய்ச்சி காட்டுகிறது.

எனவே, இந்நிலையிலிருந்து மக்களை விடுவிப்பதற்காக, குழந்தைப் பருவ நடத்தைகள் மற்றும் அதைத் தீர்மானிக்கும் காரணிகளை நிவர்த்தி செய்வதில் ஆரம்பகாலத் தலையீடுகள் இடம்பெறுவது முக்கியம் என்றும் இந்த முயற்சியில் பயனுள்ள தகவல் தொடர்பு ஆதரவு இன்றியமையாதது என்றும் உலக சுகாதார நிறுவனத்தின் இலங்கை அலுவலகம் கூறுகிறது.

உலக சுகாதார நிறுவனம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right