கந்த சஷ்டி வரலாறு....!

Published By: Digital Desk 3

14 Nov, 2023 | 09:25 AM
image

கந்த சஷ்டி என்பது முருகக் கடவுள் சூரனை சம்ஹாரம் செய்த பெருமையை சைவ சமயத்தவர்கள் கொண்டாடும் ஒரு பெரு விரத விழாவாகும். சஷ்டி என்றால் ஆறு ஆகும். ஐப்பசி மாதம் சுக்கிலபட்ச பிரதமை முதல் சஷ்டி ஈறாக உள்ள ஆறு நாட்களும் கந்த சஷ்டி விரத காலமாகும். இந்த ஆறு நாட்களிலும்  சைவர்கள் கந்தப்பெருமானின் இன்னருள் வேண்டி விரதம் இருப்பர். சூரனால் சிறைபிடிக்கப்பட்டு பல இன்னல்களை அனுபவித்த அமரர்களான தேவர்கள்,முழு முதற் கடவுளான ஈசனை வேண்டி தவமிருந்தனர். அவர்களின் தவத்தால் இன்புற்ற சிவபெருமான் தன்னுடைய ஆறு திருமுகங்களான சத்யோஜாதம், தற்புருஷம்,வாமதேவம், ஈசானம், அஹோரம், திருவதனம் ஆகிய முகங்களிலிருந்து ஆறு தீப்பொறிகளை சரவணப்பொய்கை எனும் பொய்கையில் ஆறு பொற்றாமரைகளில் ஒளிரச் செய்தார். அதன் பயனாக ஆறு தாமரை மலர்களில் ஆறு குழந்தைகள் அவதரித்தன. அத்தினமே முருகப்பெருமான் அவதரித்த "வைகாசி விசாகம்" எனும் சிறப்பு பெருவிழா ஆறு குழந்தைகளையும் வளர்க்க நிதர்த்தனி, அபரகேந்தி, மேகேந்தி, வர்யேந்தி, அம்பா, துலா என திருநாமங்களைக் கொண்ட ஆறு திருக்கார்த்திகைப் பெண்கள் தோன்றினர். ஈசன் குறிப்பிட்ட நந்நாளில் சக்தியாகிய பார்வதி தேவி ஆறு குழந்தைகளையும் ஒன்றாக கட்டியணைக்க அது ஒரு குழந்தையாக அவதாரம் எடுத்தது.

அக்குழந்தையே கந்தப் பெருமானானது. திருக்கார்த்திகை பெண்களால் வளர்க்கப் பட்டதால் கந்தனுக்கு "திருக்கார்த்திகேயன்" என்ற பெயரும் உண்டானது. ஆறு முகங்களுடன் காட்சி அளித்ததால்"ஆறுமுகன்"என்றும் ஸ்ரீமுருகன் அழைக்கப்படுகின்றார். யௌவனப் பருமாகிய வாலிப வயதை கந்தப் பெருமான் அடைகின்ற தருணத்தில் சக்தியானவள் தன் சக்தி அனைத்தையும் ஒன்று திரட்டி "சக்திவேல்"எனும் வேலாயுதத்தை கந்தனுக்கு வழங்குகின்றாள்.அன்றிலுந்து கந்தனுக்கு "சக்திவேலவன்"என்ற திருநாமமும் உண்டாயிற்று.நாரதர் செய்த மாம்பழ கழகத்தால் சினம் கொண்ட கந்தன் ஆண்டிக் கோலத்தில் தண்டாயுதத்துடன் மலை மீதமர்ந்தார்.அம் மலையே "பழனி"என பெயர்ப் பெற்றது.இதனால் கந்தனுக்கு "பழனியாண்டவன்"என்றொரு பெயரும்,"தண்டபாணி"என்ற நாமமும் உண்டானது.ஓம் எனும் பிரவணப்பொருளின் தத்துவத்தை தந்தையாகிய சிவனுக்கு உபதேசம் செய்து "சுவாமிநாதன்"என்றும் அழைக்கப்பட்டார் ஸ்ரீ முருகன்....!

சூரனுடன் போர் தொடுக்க ஐப்பசித் திங்கள் பிரதமையன்று  நாள் குறிக்கப்பட்டது. சக்தி வேலுடன்,தேவர்களை காக்கும் நோக்குடன் சமருக்கு புறப்பட்டார் கந்தன். இதனால் "தேவசேனாபதி"(தேவர் படைக்கு சேனாதிபதி) என்றும் போற்றப்பட்டார்.முருகனுக்குத் துணையாக சிவனின் அம்சத்தில் அவதரித்த வீரவாகுவும் சில வீரர்களும் கந்தனுடன் போருக்குச் சென்றனர். ஆறு நாட்கள் நடைபெற்ற சூரசம்ஹாரத்தின் முடிவில் முருகன் மாமர வடிவில் நின்ற சூரபத்மனை தன் சக்திவேலினால் இரண்டாகப் பிளந்தார்.

பிளவுபட்ட மாமரம் சேவலும் மயிலுமாக வடிவம் கொண்டது. சேவலை கொடியாகவும் மயிலை வாகனமாகவும் முருகன் ஏற்றுக்கொண்டார். இச்சம்பவத்திற்குப் பின் முருகனுக்கு "சேவற்கொடியோன்","மயில் வாகனன்"என்ற பெயர்களும் உண்டானது. கந்தபுராணத்தில் வரும் சூரபத்மன், சிங்கமுகன், தாரகாசுரன் ஆகியோர் முறையே சைவ சித்தாந்தத்தில் பேசப்படும் ஆணவம்,கன்மம்,மாயை என்னும் மும்மலங்களைக் குறிப்பதாகக் கருதப் படுகின்றது. 

ஆன்மாவைத் துன்புறுத்தும் மலங்களின் கெடுபிடியில் இருந்து ஆன்மாவுக்கு விடுதலை அளிப்பதோடு ஆணவமலத்தின் பலத்தைக் குறைத்து அதனைத் தன் காலடியில் இறைவன் வைத்திருப்பதை உணர்த்துவதே சூரசம்ஹார தத்துவம். இந்த ஆறு நாட்களும் சைவர்கள் விரதமிருந்து அதிகாலையில் எழுந்து நீராடி பூரண கும்பம் வைத்து விளக்கேற்றி பூசை வழிபாடு செய்வர். பகற்பொழுதில் உணவருந்தாமல், இரவில் பால், பழம் மட்டும் அருந்தி ஏழாம் நாள் உணவருந்தி விரதத்தை நிறைவேற்றுவர். 

சஷ்டியின் மகத்துவத் தினையும்,முருப்பெருமான் ஆற்றிய லீலை ளையும், கந்தபுராண ஆசிரியரான கச்சியப்ப சிவாச்சாரியார் மிக அழகாக வடித்துள்ளார். மேலும், முத்தமிழ்ச் சங்கத்தின் தலைமைப் புலவர் நக்கீரர் பெருமான் திருமுருகாற்றுப்படையிலும், கந்தர் கலி வெண்பா பாடிய குமரகுருபரரும், திருப்புகழ் பாடிய அருணகிரிநாதரும் அறுபடை வேலவனின் பெரும் புகழை அருமையாக ஆற்றியுள்ளனர். இவைகளில் திருமுருகாற்றுப்படை எழுதிய நக்கீரர் திருமுருகன் ஆற்றிய அருட் பெரும் சம்பவங்களை ஆறாக தொகுத்து வழங்கிய ஆற்றல் தனி நிகர் கொண்டது.திருமுருகன் ஆற்றிய அற்புதங்களை ஆறாகப் பிரித்து அதற்கு "திருமுருகாற்றுப்படை" என நாமம் சூட்டி கந்தன்... மணந்தது,எழுந்தது, நின்றது,அமர்ந்தது,புரிந்தது,தந்தது என அறுவகையாக வகுத்து, முதலாம் படை வீடாக தேவயாணியை "மணந்தது"என அமைந்த

"திருப்பரங்குன்றம்,இரண்டாம் படை வீடாக சூரனை வதம் செய்ய வீறு கொண்டு "எழுந்தது", எனப்போற்றப்படும் கடல் கொஞ்சும் "திருச்செந்தூர்" எனவும், சுவாமிநாதனாக தந்தைக்கு உபதேசம் செய்ய "அமர்ந்தது" சுவாமிமலை" மூன்றாம் படை வீடாகவும், கனி கிடைக்காமல் ஆண்டிக்கோலத்தில் பாலதண்டாயுத பாணியாக "நின்றது"என கூறப்படும் "பழனி"நான்காம் படை வீடாகவும், குறமகள் வள்ளியை காந்தர்வ மணம் "புரிந்தது"என அறியப்படும் "திருத்தணி" ஐந்தாம் படை வீடாகவும்,வள்ளி தேவயாணி சமேதராய் காட்சி "தந்தது "என்பதற்கமைய தோன்றிய "பழமுதிர்சோலை "ஆறாம் படை வீடாகவும் மிக அற்புதமாக தொகுத்து வழங்கினார்...!

மேலும், குமாரசம்பவம் என்பது முருகன் காவியத்தை காளிதாசர்  சமஸ்கிருத மொழியில் இயற்றிய காவியக் கவிதையாகும். வசந்த காலத்தின் போது இயற்கையின் அழகை கவிதைகளால் விளக்கும் பாணி வியப்புக்குரியது.

குமாரசம்பவம் நாடகக் கவிதை சிவசக்தி அருளால் உருவான குமரனின் பிறப்பின் வரலாற்றை விளக்குகிறது. இந்நூல் கி.பி ஐந்தாம் நூற்றாண்டில் காளிதாசரால் இயற்றப்பட்டது.வால்மீகி இராமாயணத்தின் பாலகாண்டத்தில் குமாரசம்பவம் கதை இடம்பெற்றுள்ளது. விஸ்வாமித்திரர் இராமரையும்,இலட்சுமணரையும் தனது யாக வேள்வியின் காவலுக்கு அழைத்துச் செல்லும்போது, சிவசக்திக்கு பிறந்த குமரனின் வரலாற்றை இருவருக்கும் கூறுகிறார்.

இராமாயணத்தில் வரும் இவ்வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு,காளிதாசன் குமாரசம்பவம் எனும் காவியக் கவிதையை நவரசங்களில் எழுதியுள்ளார். இந்நூலில் குமரனின் பிறப்பு மற்றும் தேவர்களின் படைத் தலைவராக இருந்த  முருகன்..... சூரபத்மன், சிங்கமுகன் மற்றும் தராகாசூரன் ஆகிய அரக்கர்களை போரில் முருகன் வென்று, இந்திரன் முதலான தேவர்களை அரக்கர்களிடமிருந்து விடுவிக்கும் சம்பவங்களை காளிதாசர் ஆழகுற எடுத்தியம்பிய விதம் மிக அற்புதம்.....!

முருகப் பெருமானின் சஷ்டி விரதத்துடன்  தொடர்புடைய கந்த சஷ்டி கவசம் உருவான வரலாற்றையும் அவசியம் காணலாம்....!

முருகப்பெருமான் புகழ்பாடும் பாடல்கள் எத்தனையோ நூறாயிரம் இருந்தாலும், தனது தனித்தன்மையால் உயர்ந்து நிற்கிறது "கந்த சஷ்டி கவசம்". பாலதேவராய சுவாமிகள் கந்த சஷ்டி கவசத்தை உருவாக்கிய சூழ்நிலை  உணர்ச்சிப் பூர்வமானது. ஒருசமயம் அவர் கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டார். எவ்வளவோ சிகிச்சைகள் மேற்கொண்டும் அவரது வயிற்றுவலி குணமாகவில்லை.

வாழ்க்கையே வெறுத்துப் போனவர் கடலில் விழுந்து தற்கொலை செய்து கொள்ளும் முடிவோடு திருச்செந்தூருக்கு வந்தார். அவர் அங்கு வந்த நேரம் கந்த சஷ்டி விழா ஆரம்பித்திருந்தது. ஏற்கனவே பாலதேவராய சுவாமிகள் தீவிர முருக பக்தர் என்பதால் அந்த திருவிழாக் காட்சிகளைப் பார்த்து சற்று மனம் மாறினார். திருவிழா முடிந்த பிறகு தற்கொலை முடிவை எடுத்துக் கொள்ளலாமே என்று எண்ணியவர், முருகப் பெருமானை வேண்டி சஷ்டி விரதம் இருக்கத் தொடங்கினார். முதல் நாள் திருச்செந்தூர் கடலில் புனித நீராடி முருகனை வழிபட்ட பிறகு, கோயில் மண்டபத்தில் கண்களை மூடி தியானத்தில் அமர்ந்தார். அவருக்கு முருகப்பெருமான் காட்சி தந்து அருள் புரிந்ததோடு தனக்காக ஷஷ்டி கவசம் பாடும் திறனையும் அவருக்கு அளித்தார். இவ்வாறே சஷ்டிக் கவசம் அருளப்பட்டது.

ஷஷ்டி விரத காலங்களில் தமிழகம், இலங்கை,மலேஷியா,சிங்கப்பூர், மொரீஷியஸ் போன்ற தழிழர்கள் செரிந்து வாழும் தேசங்களில் இவ்விரத தினம் பக்திப் பூர்வமாக மிகக் கோலாகலமாக  அனுஷ்டிக்கப்படுகின்றது. குறிப்பாக தமிழகத்தில் செந்திலாண்டவராக அருள் புரியும் "திருச்செந்தூரி"ல் சஷ்டி விழா இலட்சக்கணக்கான முருகன் அடியார்கள் மிகுந்த பக்தியுடன் காப்புக்கட்டி விரதம் மேற்கொள்வர்.இலங்கையில் மலையகம்,வடக்கு,கிழக்கு மாகாணங்களில் இவ்விரதம் வெகு நேர்த்தியாக அனுஷ்டிக்கப்படும்.

கலியுக வரதனாகிய கந்தப்பெருமானின் பேரருள் வேண்டி  சஷ்டி விரத நந்நாளில் அறுபடை வேலவனை சரணம் செய்து நற்பேறு காண்போமாக...!

எஸ்.கணேசன் ஆச்சாரி சதீஷ் கம்பளை 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தில்ஷா - மோஹித்ஷால் சகோதரர்களின் வீணை,...

2025-03-14 16:37:54
news-image

மகத்தில் தேர் ஏறும் மகமாயி  

2025-03-13 11:01:51
news-image

ஓவியர் மாற்கு மாஸ்டர் பற்றி சில...

2025-03-11 12:24:46
news-image

தந்தையின் 10ஆவது ஆண்டு நினைவுநாளில் சமர்ப்பணமான...

2025-03-05 13:37:38
news-image

எனக்கு கர்நாடக இசையை கற்பித்து நல்லிணக்கத்தை...

2025-02-22 11:52:08
news-image

தெட்சண கைலாயம் திருக்கோணேஸ்வரம் மாதுமை அம்பாள்...

2025-02-22 11:53:38
news-image

வடக்கில் கலைத்துறையில் சாதித்து வரும் இளைஞன் 

2025-02-21 19:24:07
news-image

“நாட்டிய கலா மந்திர்” நடனக் கலாசாலை...

2025-02-20 14:39:18
news-image

தைப்பூசத் திருநாளில் கமலஹார சித்திரத்தேரில் வலம்...

2025-02-11 10:28:27
news-image

கனவுத் தேசம் - அனுபவப் பகிர்வு

2025-02-07 19:09:06
news-image

வாசுகி ஜெகதீஸ்வரனின் நெறியாள்கையிலான 150ஆவது அரங்கேற்றத்தில்...

2025-02-07 10:25:38
news-image

“கலாசூரி” வாசுகி ஜெகதீஸ்வரனின் நெறியாள்கையில் சஹானா...

2025-01-24 12:07:15