ஏழை குடும்பத்தில் பிறந்து சாதித்த தமிழ் மகனின் கண் கலங்க வைக்கும் கதை ( காணொளி இணைப்பு )

By Priyatharshan

22 Feb, 2017 | 11:21 AM
image

சாப்பாட்டிற்கே ரொம்ப கஷ்டமான சூழ்நிலை. எனது குடும்பம் வறுமையானது. கிடைத்த வாய்ப்புக்களைப் பயன்படுத்தி எல்லோருக்கும் நான் முன்னுதாரணமாக இருப்பதை எண்ணி பெருமைப்படுகின்றேன் என ஐ.பி.எல். ஏலத்தில் 3 கோடி இந்திய ரூபாவுக்கு எடுக்கப்பட்ட உள்ளூர் கிரிக்கெட் வீரரான சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த டி.நடராஜன் தெரிவித்தார்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்காத உள்ளூர் கிரிக்கெட் வீரரான சேலம் மாவட்டத்தை சேர்ந்த டி.நடராஜன் இம் முறை நடைபெற்ற ஐ.பி.எல். ஏலத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக ரூ.3 கோடிக்கு இந்திய ரூபாவுக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டமையானது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.


குறிப்பாக சர்வதேச கிரிக்கெட் புாட்டியில் விளையாடாத உள்ளூர் கிரிக்கெட் வீரர் ஒருவர் இவ்வளவு அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டதை யாருமே எதிர்பார்க்கவில்லை. இது நடராஜனுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியாகத்தான் இருந்திருக்கும்.

பஞ்சாப் அணிக்காக அவர் களமிறங்கப்போகின்றார் என்பதால் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான மொகாலியில் அவர் தனது திறமையை மேலும் பட்டை தீட்டிக்கொள்ள அடிக்கடி வாய்ப்பு கிடைக்கும் என்பது அவரின் கூடுதல் மகிழ்ச்சிக்கு காரணம்.

டி.நடராஜன் என்று அறியப்படும் இடது கை வேகப்பந்து வீச்சாளரின் முழுப்பெயர் தங்கராசு நடராஜன். இளமை காலங்களில், கிராம அளவில் டென்னிஸ் பந்து போட்டிகளில் பங்கேற்று வந்தார். டென்னிஸ் பந்தை கொண்டே துடுப்பாட்ட வீரர்களை திணறடிக்கும் திறமை அவருக்குள் இருந்த கிரிக்கெட் ஆசையை சுடர்விடச் செய்தது.

சொந்த ஊரிலேயே இருந்தால் கிரிக்கெட்டில் சோபிக்க முடியாது என்பதை அறிந்து கொண்ட நடராஜன் சென்னை வந்தடைந்தார். சென்னையில்தான் அவருக்கு சர்வதேச கிரிக்கெட்டில் பயன்படுத்தப்படும் கார்க் பந்து வீசும் வாய்ப்பு கிடைத்தது. தமிழ்நாடு லீகில் ஜாலி ரோவர்ஸ், விஜய் சிசி ஆகிய அணிகளுக்காக விளையாடி தனது திறமையை நிரூபித்தார்.

இரண்டு ஆண்டுகள்தான். அதற்குள்ளாக நடராஜனின் திறமை காட்டுத் தீ போல பரவியது. இதையடுத்து நடராஜன் முதல் தர கிரிக்கெட்டுக்கு தேர்வு செய்யப்பட்டார். 2015-16- இல் பெங்கால் அணிக்கு எதிராக தமிழ்நாடு அணிக்கு முதல்முறையாக அறிமுகமானார். ஆனால் இவர் பந்தை எறிவதாக சந்தேகம் எழுப்பப்பட்டது. எனவே பந்து வீச்சுப் பாணியை கொஞ்சம் மாற்றி மீண்டும் முதல்தர கிரிக்கெட்டுக்குள் நுழைந்தார்.

சோதனையான அந்த காலகட்டத்தில் பந்து வீச்சுப் பாணியை மாற்றி சிறப்பாக பந்து வீச நடராஜனுக்கு உதவியது முன்னாள் தமிழ்நாடு இடது கை பந்துவீச்சாளர் சுனில் சுப்ரமணியம் என்பவராவார். அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட தமிழ்நாடு பிரிமியர் லீக் இருபதுக்யிகு-20 போட்ல்டியில்  திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடினார். முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் எல்.பாலாஜி இவரது பந்து வீச்சிற்கு திட்டங்களை கொடுத்து மெருகேற்றினார்.

தற்போது ரஞ்சியிலிருந்து மற்றொருபடி முன்னேறி ஐ.பி.எல். 2017 இல் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக இவர் ஆட உள்ளார். சர்வதேச துடுப்பாட்ட வீரர்களுக்கு பந்து வீச வேண்டிய சூழ்நிலை அப்போது ஏற்படும், சர்வதேச தரம்வாய்ந்த பந்து வீச்சாளர்களுடன் பழகும் வாய்ப்பும் இவருக்கு கிடைக்கும். இதன் மூலம் நடராஜனின் ஆட்டத் திறன் மேலும் மெருகேரும் என நம்பலாம்.

இதுகுறித்து நடராஜன் கூறுகையில்,

“ எனது வாழ்க்கையே கிரிக்கெட் தான். இதை விட்டால் வேறு வழி தெரியாது. படிப்பிலும் கவனம் செலுத்தவில்லை. எனது குடும்பம் வறுமையானது. அப்பா நெசவு செய்து தான் குடும்பத்தை கவனித்து வந்தார். அம்மா வீதியோரத்தில் கோழிக்கடை வைத்திருக்கிறார். எமது குடும்பத்தில் 5 பேர். எனக்கு கீழே 3 சகோதரிகள். அதன் பின்னர் ஒரு சகோதரன். படிக்கவே ரொம்ப கஷ்டப்பட்டோம். அப்பா, அம்மா இருவரும் வேலைக்கு சென்றாலும் அவர்களால் படிக்க வைக்க வசதியில்ல. எங்களை படிக்க வைப்பதற்கு ரொம்ப கஷ்டப்பட்டார்கள்.

சொல்லப்போனால் சாப்பட்டிற்கே ரொம்ப கஷ்டமான சூழ்நிலை இருந்தது. அந்தளவுக்கு ரொம்ப வறுமையில் இருந்தோம். 5 பேரும் அரச பாடசாலையில் தான் படித்தோம். எப்படியிருந்து ரொம்ப கஷ்டப்பட்டு படிக்க வைத்தார்கள் எனது பெற்றோர். ஆனால் கட்டணம் செலுத்த வழியில்லை. ஜெயப்பிரகாஷ் அண்ணா என்பவர்தான் இப்போது எங்களை பார்த்துக்கொள்வார். நான் கிரிக்கெட் விளையாடுவதற்கும் ஐ.பி.எல். இல் இடம்பிடிப்பதற்கும் அவர் தான் காரணம்.

நான் ஐபிஎல் தொடரில் ஆட உள்ளது பற்றிதான் யோசித்துக்கொண்டுள்ளேன். கிடைத்துள்ள பணத்தை பற்றியல்ல. உண்மையை சொன்னால் 3 கோடிக்கு எத்தனை பூஜ்யம் என்பது எனக்கு தெரியாது. ஐபிஎல் தொடரில் ஆடுவதன் மூலம் எனது கிரிக்கெட் திறமை மேம்படும் என்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

கிடைக்கின்ற வாய்ப்புகளை வைத்து நான் நிறைய பயன்படுத்தியிருக்கின்றேன். ஆனால் இங்கு பெரியளவில் வாய்ப்புக்கள் இல்லை. பாடசாலை மைதானத்திலும் பெரிய வசதிகள் இல்லை. ஆனாலும் அந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி நிறைப்பேர் முன்னுக்கு வந்துள்ளார்கள், வந்து கொண்டுள்ளார்கள். அவர்களுக்கெல்லாம் நான் ஒரு முன்னுதாரணமாக இருப்பதை எண்ணி பெருமைப்படுகின்றேன் எனத் தெரிவித்தார். இது தொடர்பில் அவரது தாயார் தெரிவிக்கையில்,

நமது குடும்பம் வறுமையில் வாழ்க்கை நடத்தியது. 6 ஆவது தரத்தில் படிக்கும் போது துடுப்பு மட்டையை எடுத்து கிரிக்கெட் விளையாடுவான். அவனை நாங்கள் தடுப்பதில்லை. 12 ஆவது தரத்தை படித்து முடித்த பின்னர் கல்லூரிக்கு இணைவதற்கு சென்றான். ஜெயப்பிரகாஷ் என்ற ஒரு பையைன் இருந்தான். அவன் இவர்களுடன் பிறக்காதவன். அவன் தான் எல்லாமே உதவி செய்தான். நல்லா விளையாடி இவ்வளவு தூரத்திற்கு வாருவான் என்று தெரியும். ஆனால் இந்த தொகைக்கு எடுபடுவான் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. நாம் நல்லா கஷ்டங்களை அனுபவித்து விட்டோம். நாங்கள் கஷ்டப்பட்டதற்கு பலன் கிடைத்து விட்டது. பெற்றெடுத்தமைக்கு மகிழ்சியை வாங்கி கொடுத்துவிட்டான் மகன்.ஊருக்கும் பெருமை சேர்த்து விட்டான் எங்கள் மகன் என தாயார் பெருமையாகத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவரது தந்தையார் தெரிவிக்கையில்,

நாங்கள் இப்போது நல்ல சந்தேஷமாக இருக்கின்றோம். அவன் விளையாடப்போகும் போது கூட ஒரு பந்து வேண்டிகொடுக்க முடியாத சூழ்நிலை. ரொம்ப ஏழ்மையாக இருந்தோம். ஓரளவு படிக்க வைத்துள்ளோம். விளையாடப் போவதற்கெல்லாம் நாங்கள் தடை விதிக்க மாட்டோம். ஜெயப்பிரகாஷ் என்பவருடனேயே உள்ளுர் போட்டிகளில் விளையாடப் போவார். உங்கள் பையனைப் பற்றி கவலைப்படவேண்டாம். நான் உங்களது பையனை பார்த்துக்கொள்கின்றேன் என அவரே எம்மிடம் தெரிவித்தார். பணத்தை நாங்கள் எதிர்பார்க்க வில்லை. ஐ.பி.எல்.இல் விளையாட வேண்டுமென்ற எண்ணமே இருந்தது. எமக்கு நிறை நம்பிக்கை இருந்தது மகன் ஐ.பி.எல்.இல் விளையாடுவான் என்று என அவரது தந்தையார் தெரிவித்தார்.

நடராஜனின் தந்தை நெசவாலையில் தினக்கூலி செய்யும் தொழிலாளியாவார். தாயார் வீதியோரத்தில் கோழிக்கடை மற்றும் சிற்றுண்டி கடை வைத்துள்ளார். 5 உடன்பிறப்புகளில் நடராஜன்தான் மூத்தவர். எனவே இளைய சகோதர, சகோதரிகளின் படிப்பு, திருமண செலவுகளை 25 வயதாகும் நடராஜனே கவனித்துள்ளார். கிரிக்கெட் விளையாடி வந்த வருமானத்தை கொண்டே இதை பூர்த்தி செய்துள்ளார். ஒரு சகோதரிக்கு திருமணம் முடித்துக் கொடுக்கப்பட்டுள்ளது. 2 சகோதரிகள் மற்றும் ஒரு சகோதரன் கல்லூரியில் படித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right