(எம்.எப்.எம்.பஸீர்)

மத நிகழ்வு ஒன்றின் பொருட்டு திருச்செரூபம் ஒன்றினை சுமந்து பேருவளையில் இருந்து கடலுக்குள் சென்ற சுமார் 20 படகுகளைக் கொண்ட ஊர்வலத்தில் களுத்துறை, கட்டுகுறுந்தை கடலில் வைத்து ஒரு படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காணாமல் போனோரை தேடும் பணிகள் இன்று மூன்றாவது நாளாகவும் தொடர்ந்தன.

இந் நிலையில் குறித்த விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை இன்று 12 ஆக உயர்வடைந்துள்ளது. குறித்த விபத்தில் காயமடைந்து நாகொட வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த 41 வயதுடைய  திஸ்னா காந்தி குமாரி எனும் பெண் உயிரிழந்தையடுத்தே இவ்வெண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.

அத்துடன் படகு விபத்துக்குள்ளான போது அதில் இருந்தவர்கள் என கூறப்படும் இரு சிறுவர்கள் உட்பட நால்வரைக் காணவில்லை என பேருவளை களுத்துறை தெற்கு மற்றும் பயாகல ஆகிய பொலிஸ் நிலையங்களுக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக பிரதேசத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் உபுல் நில்மினி ஆரியசிங்க தெரிவித்தார்.

இந் நிலையில்  காணாமல்போனோரைத் தேடும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது. இந் நிலையில் காணாமல் போனோரைத் தேடும் பணியில் தொடர்ந்தும் இரு டோரா படகுகள், 3 டிங்கி படகுகள் 15 கடற்படை சுழியோடிகள் உள்ளிட்ட பெரும் தொகை கடற்படை வீரர்கள் ஈடுபடுத்தப்ப்ட்டுள்ளதாக  கடற்படையின் ஊடகப் பேச்சாளர் லெப்டினன் கொமான்டர் சமிந்த வலாகுலுகே தெரிவித்தார்.