ஒரே மாதத்தில் இரண்டு முறை மாதவிடாயா?

Published By: Nanthini

09 Nov, 2023 | 06:09 PM
image

பெண்களுக்கு மாதவிடாய் நாட்கள் ஒவ்வொரு மாதமும் முன், பின் என மாறிவருவது இயல்பு. அதுவே 10 நாட்களுக்கு மேல் தள்ளிப்போதல், ஒரே மாதத்தில் இரண்டு முறை வருதல் போன்ற பிரச்சினைகளை உடனே கண்டறிந்து உரிய சிகிச்சை பெற்றுக்கொள்ளுதல் அவசியம். அப்படி ஒரே மாதத்தில் இரண்டு முறை மாதவிடாய் வர என்ன காரணம் என்று பார்க்கலாம்.

முதலில் ஒரே மாதத்தில் இரண்டாவது முறையும் வருவது மாதவிடாய்தானா அல்லது அது இரத்தக் கசிவா எனக் கண்டறிவது அவசியம். 

மாதவிடாய் போன்று உதிரப்போக்கு வந்துகொண்டிருந்தால் அது மாதவிடாய்தான். அவ்வாறு அல்லாமல் சிறிது உதிரம் மட்டுமே வந்து, நெப்கின் முழுமையாக பயன்படுத்தவில்லை எனில், அது இரத்தம் கசிவதாக இருக்கலாம்.

பிறப்புறுப்பிலிருந்து இரத்தக் கசிவு என்பது உடலுறவு கொள்ளுதல், கருக்கலைதல் அல்லது பிரசவ காலத்திலோதான் பெரும்பாலும் நிகழும். இதுதான் காரணம் என்றால் உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுதல் அவசியம்.

உங்களுக்கு மாதவிடாயாக இருக்கும் பட்சத்தில் அது ஒவ்வொரு மாதமும் தொடர்கதையானால் சில பிரச்சினைகள் காரணமாக இருக்கலாம். உங்களுக்கு தைரொய்ட் அதிகம் சுரந்தாலோ அல்லது குறைவாக சுரந்தாலோ இந்தப் பிரச்சினை வரலாம்.

ஒருவேளை நீங்கள் மாதவிடாய் நிற்கும் தருவாயில் இருக்கிறீர்கள் என்றாலும் இந்தப் பிரச்சினை வரலாம்.

நீங்கள் அதிகம் கருக்கலைப்பு மாத்திரைகளை உட்கொள்கிறீர்கள் என்றாலும் இரண்டு முறை மாதவிடாய் வரலாம். மன அழுத்தம் காரணங்களால் சரியான உணவின்மை, தூக்கமின்மை காரணங்களாலும் மாதவிடாய் இரண்டு முறை வரலாம்.

திடீரென உடற்பருமன் குறைந்தாலும் கூடினாலும் இந்த பிரச்சினை இருக்கலாம்.

மேலே குறிப்பிட்ட விடயங்கள் உங்கள் வாழ்க்கை முறையோடு ஒத்துப்போவதாகக் கருதினால், இதை சாதாரணமாக கடந்து செல்லாமல் மருத்துவரை அணுகி உரிய சிகிச்சைப் பெறுவது அவசியம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right