கணவனும் மனைவியும் கருத்தொருமித்து வாழ வழிகாட்டும் கேதார கௌரி விரதம்

09 Nov, 2023 | 05:17 PM
image

(எம்.பி அருளானந்தன்)

க்தி விரதங்களில் மகத்துவமானது கேதார கௌரி விரதம். கௌரி விரதம் புரட்டாசி மாதம் சுக்கிலபட்ச தசமியில் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. ஐப்பசி மாத கிருஷ்ணபட்ச தீபாவளி அமாவாசை வரைக்கும் இருபத்தொரு நாட்கள் பிரதி தினமும் இந்த விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும் என்பது நியதி.

அம்பிகை அனுஷ்டித்த விரதம்

கேதார கெளரி விரதத்தை விரும்பி கடைப்பிடிப்பவர்களுக்கு பரமேஸ்வரன் சகல செல்வங்களையும் அனுக்கிரகிப்பார் என்பது இந்துக்களின் நம்பிக்கை. ஐகன்மாதா பார்வதி தேவியே இந்த கேதார கௌரி விரதத்தை கடைப்பிடித்து சிவனிடம் வாம பாகத்தை பெற்றுக்கொண்டவர்.

விரத மகத்துவத்தை உணர்த்தும் கதை!

திருக்கைலாயத்தில் நவரத்தினங்களால் இழைத்த சிம்மாசனத்தில் பரமேஷ்வரனும் பார்வதியும் வீற்றிருப்பார்கள். பிரம்மா, விஷ்ணு, தேவேந்திரன் முதலான முப்பத்து முக்கோடி தேவர்களும், அஷ்டதிக்கு பாலகர்களும் தினமும் இருவரையும் பிரதட்சண நமஸ்காரம் செய்துகொண்டு போவார்கள். 

ஒரு நாள் பிருங்கி முனிவர் என்பவர் பரமேஸ்வரனை மட்டும் வணங்கிவிட்டு பார்வதி தேவியை வணங்காமல் சென்று விடுகிறார். 

அவரின் இந்த செயலை கண்டு கோபமுற்ற பார்வதி தேவி, பரமேஸ்வரனிடம் காரணம் கேட்க, பரமேஸ்வரனோ "பிருங்கி முனிவர் செல்வங்களை கேட்பவரல்ல, மோட்சத்தை கேட்பவர். அதனால்தான் என்னை மட்டும் வணங்கினார்" என்று கூற, பார்வதி தேவி பிருங்கி முனிவருக்கு "நிற்க முடியாமல் போகக் கடவாய்" என்று சாபம் கொடுத்துவிடுகிறார். 

பிருங்கி முனிவர் நிற்க முடியாமல் போய்விடுகிறார். ஆனாலும், அந்த நிலையிலும் அவர் பரமேஸ்வரனை மட்டும் வணங்கி அவரிடமிருந்து ஓர் ஊன்றுகோலைப் பெற்று, கோலால் ஊன்றிக்கொண்டு நடந்து ஆச்சிரமத்துக்கு போய்ச் சேர்ந்துவிடுகிறார்.

பூலோகம் வந்த பார்வதி தேவி

தன்னை பிருங்கி முனிவர்தான் அவமதித்தார் என்றால் ஈஸ்வரனும் கூட அவமதித்ததாக எண்ணி "கைலாயத்தில் இனி எனக்கென்ன வேலை, நான் பூலேகம் சென்றுவிடுகின்றேன்"  என்று புறப்பட்டு பூலோகத்தில் வால்மீகி மகரிஷியின் பூங்காவனத்தில் உள்ள ஒரு மரத்தினடியில் வந்து தங்கிவிட்டார்.

பன்னிரெண்டு ஆண்டுகள் மழையில்லாமல் அந்த பூங்காவில் மரம், செடி, கொடிகள் எல்லாம் காய்த்து வாடி வதங்கிப் போயிருந்தன. 

பார்வதி தேவி அந்தப் பூங்காவில் வந்து அமர்ந்ததும் மரம், செடி, கொடிகள் எல்லாம் புத்துயிர் பெற்று, துளிர்த்துத் தளைத்து நாலாபக்கமும் மணம் வீசுவதைக் கண்டு அதிசயித்த வால்மீகி, தன் பூங்காவனத்தை நோக்கிச் சென்று பார்க்கிறார்.

பூலோகத்தில் பார்வதி தேவி

அங்கே ஒரு வில்வ மரத்தினடியில் பார்வதிதேவி, அமர்ந்திருப்பதை கண்டு ஆச்சரியப்பட்டு, "மூவருக்கு முதன்மையான தாயே! முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் ஒப்பற்ற தெய்வமாய் விளங்கும் பராசக்தியே! தாங்கள் பூலோகம் வந்து என் பூங்காவனத்தில் எழுந்தருளி இருப்பதற்கு நான் என்ன தவம் செய்தேனோ" என்று மெய்சிலிர்த்து, தொழுது வணங்கி "தாயே! தாங்கள் பூலோகம் வந்த காரணத்தை நான் தெரிந்துகொள்ளலாமா என்று கேட்டார். பார்வதிதேவியார் பிருங்கி முனிவரின் அலட்சியத்தாலும் பரமேஸ்வரரின்  அலட்சியத்தாலும் இங்கு வந்தேன்" என்று கூறுகிறார்.

வால்மீகி முனிவர் அம்பாளை தன் ஆசிரமத்துக்கு அழைத்துச் சென்று, ஒரு நவரத்தின சிம்மாசனம் அமைத்து, அதில் அம்பாளை அமரச் செய்து, தினமும் தொழுது வணங்கி வருகிறார். 

அப்போது "முனிவரே, இந்தப் பூலோகத்தில் இதுவரை யாரும் அனுஷ்டிக்காத ஒரு விரதத்தை  அனுஷ்டித்து, ஆறுதல் காண விரும்புகிறேன்.  அப்படிப்பட்ட விரதம் எது" என்று கேட்க, அதற்கு "தாயே, நான் சொல்வதைக் கோபமில்லாமல் கேட்பதென்றால், இந்த பூலோகத்தில் யாரும் அனுஷ்டிக்காத  கேதாரீஸ்வர விரதத்தை நீங்கள் அனுஷ்டித்தால் இஷ்ட சித்தியாகும்" என்று சொல்ல, 

அதன்படியே அம்பாளும் புரட்டாசி மாதம் சுக்கில, பட்சம் தொடங்கி ஜப்பசி மாதம் கிருஷ்ண பட்சம் தீபாவளி அமாவாசை வரைக்கும் 21 நாட்கள் உபவாசமிருந்து கேதாரீஸ்வர பூசை செய்யத் தொடங்கினார், அம்பாள்.

இடப்பாகம் பெற்றார்

பரமேஸ்வரியின் விரதத்தால் மகிழ்ந்த ஈஸ்வரன் இருபத்தோராம் நாள் தீபாவளி அமாவாசை தினத்தில் தேவகணங்கள் புடைசூழ ரிஷப வாகனத்தில் பூலோகத்துக்கு வந்து, பரமேஷ்வரிக்கு காட்சியளித்து தனது இட பாகத்தை ஈஸ்வரிக்கு கொடுத்து அர்த்தநாரீஸ்வரராக திருக்கைலாயம் சென்றடைந்தார். 

இத்தகைய மகத்துவம் நிறைந்த கேதார கெளரி விரத்தை நாமும் அனுஷ்டித்து வாழ்வாங்கு வாழ்வோமாக!

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்