திருப்பங்கள் தரும் அரசு – வேம்பு திருமணம்

09 Nov, 2023 | 01:07 PM
image

விநாயகர் கோயில்களில் அரசும் வேம்பும் சேர்ந்திருப்பதை நீங்கள் கண்டிருக்கலாம். உண்மையில் இவை, சிவ-சக்தி சொரூபமே! என்றாலும், இவற்றுக்கு உரிய முக்கியத்துவம் கொடுப்பதில்லை. இவை இரண்டுக்கும் மணமுடி நடத்தப்படுவதில்லை.

இப்படி அரசுக்கும் வேம்புக்கும் மணமுடி நடத்தப்படாத தலங்களில் அவை சிவ-சக்தி இணை சொரூபமாக வழிபடவோ அல்லது அவற்றின் அளவற்ற சக்தியினால் உண்டாகும் பலனோ பக்தர்களுக்கு கிடைக்க வாய்ப்பிருக்காது. 

“புல்லாகிப் பூண்டாய் புழுவாய் மரமாகி…” என்கிறது சிவபுராணம். ஆனால், போன ஜென்மத்தில் பிரம்மச்சரிய விரதத்தை சரியான முறையில் பிழைபடாமல்‌ காத்து, சிறந்து விளங்கிய ஆண்மகனே அரச மரமாக பிறக்கின்றான் ‌என்று வேத சாஸ்திரம்‌ கூறுகிறது.

மரமாகவே இருந்தாலும் பிரம்மச்சரியம் காத்த ஒரு ஆன்மா, ஒரு பெண் அருகிலேயே இருந்தாலும் அவளை திருமணம் செய்யாமல் மனைவியாக ஏற்றுக்கொள்ள மாட்டான். 

கோயில்களில் இருக்கும் இவ்விரு மரங்களையும்‌ இணைத்து மங்கலநாண் பூட்டி, முறைப்படி வேதம் ‌ஓதி, திருமணம் ‌செய்து வைக்காவிட்டால்‌, அந்த மரத்தை நட்டுவைத்தவர் குடும்பத்தில் ‌குழந்தை இருக்காது. அந்த குடும்பத்தில் ‌கல்யாணம்‌ நடக்காது.

நட்டவர்கள்‌ தெரியவில்லை என்றாலோ, நட்டவர்கள் உயிருடன் இல்லை என்றாலோ, அந்தக் ‌கோவிலின் ‌தலைமைப் பொறுப்பில் ‌இருப்பவர்‌ அல்லது அந்தக்‌ கோவிலில் ‌பூஜை செய்பவர்‌ இதைச் செய்து வைக்க வேண்டும்‌. அப்படி ‌செய்யாவிட்டால் ‌மேலே சொன்ன பாவம் ‌இவர்களையும்‌ சேரும்‌.

மாறாக, அரசுக்கும் வேம்புக்கும் முறைப்படி திருமணம் செய்து வைத்தால், கோடி பிராமணர்களுக்குத் திருமணம் செய்து வைப்பதால் என்னென்ன பலன்கள் கிடைக்குமோ, அவை அத்தனையும் அரசு-வேம்பு கல்யாணம்‌ செய்து வைக்கும் ‌குடும்பத்துக்கு சித்திக்கும்‌.

அரசையும் வேம்பையும் நட்டு வைத்தவர்கள் அவற்றுக்கு திருமணம் செய்து வைக்காமல் இருப்பவர்கள் வீட்டில் குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை என்றால், இவ்விரு விருட்சங்களுக்கும் திருமணம் செய்து வைத்த பின், வேம்புக்கு இடது புறத்தில்‌ நாக பிரதிஷ்டை செய்தால்‌ குடும்பக் கஷ்டம்‌, குழந்தையின்மை என்பன நீங்கும். சுப காரியங்கள்‌ நடைபெறும்‌.

முதலில்‌ அசுவத்த பிரதிஷ்டையும்‌, அசுவத்த உபநயனமும் ‌மூன்றாவது அசுவத்த விவாகமும்‌ முறையே சாஸ்திர விதிப்படி செய்வது உத்தமம்‌. இவ்விருட்சத்தின்‌ அடிப்பகுதி பிராமணராகவும்‌, கிளைகள் ‌விஷ்ணு பகவானாகவும்‌, இலைகள்‌ ரிக்‌ வேதமாகவும்‌, பழங்கள் ‌யக்ஞமாகவும் ‌மும்மூர்த்திகளையும்‌ நினைத்து பூஜை செய்ய வேண்டும்‌ என சாஸ்திரங்கள்‌ கூறுகின்றது.

தொகுப்பு : ஜாம்பவான் சுவாமிகள்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right