தங்கமுட்டைக்கு ஆசைப்பட்டு அதிசய வாத்தின் வயிற்றை அறுத்துவிட வேண்டாம்!

10 Nov, 2023 | 12:38 PM
image

ஆர்.பி.ரி.ஷி 

தங்கமுட்டைக்கு ஆசைப்பட்டு அதிசய வாத்தின் வயிற்றை அறுத்துப் பார்த்த பேராசைக்காரனின் கதை நமக்கு நன்கு பரிச்சயமானது. எளிதில் மறந்து போகக்கூடிய கதையும் அல்ல. அந்த பேராசைக்காரனைப் போலவே அரசாங்கம் அற்ப வருமானத்திற்கு ஆசைப்பட்டு  வரலாற்றுச் சின்னமாக பொக்கிஷமாக இருக்கும் பாரம்பரிய கட்டிடங்களை காவுகொடுக்கும் பேராசைத்தனமான முடிவை எடுத்திருக்கிறது என்ற குற்றச்சாட்டு பரவலாக முன்வைக்கப்படுகிறது. 

நாட்டின் பொருளாதார நிலையை சமாளிக்க பாரம்பரிய கட்டிடங்களை தனியாருக்கு குத்தகைக்கு கொடுக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக நுவரெலியா, கண்டி தபால் நிலைய கட்டிடங்களை தாரைவார்க்கும் முடிவுக்கு பல்வேறு தரப்புகளிலிருந்து கடுமையாக ஆட்சேபம் எழுந்து வருகிறது. நேற்று முன்தினம் ஐக்கிய தபால் தொழிற்சங்க முன்னணி 48 மணிநேர பணிப்பகிஸ்கரிப்பு போராட்டத்தை அறிவித்தது. நுவரெலியா தபால்நிலைய ஊழியர்களோடு பொதுமக்களும் சுற்றுலாப்பயணிகளும் தமது எதிர்ப்புகளை பல்வேறு வடிவங்களில் வெளிப்படுத்தி வருகிறார்கள்.

தபால் நிலையத்தை வேறொரு இடத்திற்கு மாற்றி இக்கட்டிடத்தை வேறொரு சாத்தியமான திட்டத்திற்கு பயன்படுத்துவதன் மூலம்,   மக்களுக்கு புதிய வருமான வழிகள் மற்றும் வேலை வாய்ப்புகள் கிடைக்கும். சுற்றுலாத்துறையை மேம்படுத்த உதவும் என்று நேற்று முன்தினம் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்திருக்கிறார்.

அமைச்சர் சொல்வதைப் போல இதனால் நாட்டுக்கு இலாபம் கிடைக்குமா? மக்களுக்கு என்ன நன்மை கிடைக்கும் ? சுற்றுலாத்துறையில் பெரும் உயர்வு ஏற்படுமா? நுவரெலியா தபால் நிலையத்தை விற்பதை விட இதனால் கிடைக்கும் சில இலட்சம் ரூபாவை திரட்ட அரசாங்கத்திற்கு வேறு வழிகள் இல்லையா? இந்தக் கேள்விகளுக்கு முன்னர் நுவரெலியா தபால்நிலையம் எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது என்று பார்த்து விடுவோம். 

குட்டி லண்டனில் செல்வச்செழிப்பின் அடையாளமாக திகழும் நுவரெலியா தபால் அலுவலகம் 

நுவரெலியா தபால் அலுவலகம் இலங்கையின் மிகவும் வழமை வாய்ந்த கட்டிடங்களில் ஒன்று. இது டியூடர் (ஆங்கில உள்நாட்டு கட்டிடக்கலை ) பாணியில் அமைந்தது, "டியூடர் கட்டிடக்கலை 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் அமெரிக்காவில் தோற்றம்பெற்று இரண்டாம் உலகப் போர் வரை தொடர்ந்து பிரபலமடைந்தது. அதிக மழை மற்றும் பனியுடன் கூடிய குளிர்ந்த காலநிலைக்கு ஏற்றாற் போல் வடிவமைக்கப்பட்ட ஒரு பாணியை இது பிரதிபலிப்பதால், அவை அமெரிக்காவின் வடக்குப் பகுதியில் பிரபலமானது. டியூடர் ஸ்டைல் கட்டுவதற்கு விலை உயர்ந்தவை. அதனால் அவை செல்வச் செழிப்பின் அடையாளமாக பார்க்கப்படுகின்றன " என்று பிரபல கட்டிடக் கலை வல்லுநரான பீட்டர் பென்னோயர் குறிப்பிடுகிறார். 1920 களில் இக்கட்டிட உரிமையாளர்கள் “ஸ்டொக் ப்ரோக்கர்ஸ் டியூடர்ஸ்” என்று செல்லப்பெயர் பெற்றனர்.

அத்தகைய பெருமை பெற்ற கட்டிட வடிவமைப்போடு கடிகார கோபுரம், சிவப்பு நிற சுவர்கள் கோபுர வடிவ கூரையுடன் கூடிய 2 மாடிக்கட்டிடம் சுற்றிலும் பசுமை நிறைந்த அழகிய புல்வெளி என நுவரெலியா நகரத்திற்கு அழகும் பெருமையும் சேர்க்கிறது நுவரெலியா தபாலகம்.   

1894 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் காலனித்துவத்தின் அஞ்சலைக் கையாளும் நோக்கத்திற்காக கட்டப்பட்ட நூற்றாண்டு பழமையான தபால் அலுவலகம் முக்கிய சுற்றுலாத்தலமாகவும் இலங்கையின் காலனித்துவ பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் அம்சமாகவும், இலங்கையின் முக்கிய இன்ஸ்டாகிராம் ஹொட்ஸ்பொட்களில் ஒன்றாகவும் விளங்குகின்றது. இந்த அற்புதமான கட்டிடத்தை பார்க்க விரும்புவதால் பிரித்தானியர்கள் இலங்கையை ஒரு பயண இடமாக தேர்ந்தெடுப்பதாகவும் கூறப்படுகிறது.

'யுனைடெட் கிங்டமின் ஒரு பகுதி இந்த தபால் நிலையத்தில் உள்ளது,  பழைய தபால் அலுவலகத்தின் அசல் பகுதிகள் உள்ளன. இது நுவரெலியாவின் முக்கிய இடங்களில் ஒன்றாகும். என பிரித்தானிய பயணி ஒருவர் தபால் அலுவலகம் பற்றி சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்துள்ளார்.  

சர்வதேச மற்றும் உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் இந்த கட்டிடத்தின் அழகை ரசிக்க மட்டுமின்றி, அதன் உட்புறத்தை பார்க்கவும் இங்கு வருகிறார்கள். அவர்களுக்கு இது ஒரு அற்புதமான அனுபவம்.

அதுமட்டுமல்ல 2012 இல் சுற்றுலா விடுதியாக மாற்றப்பட்ட தபால் நிலையத்தின் மேல் தளத்தில் உள்ள போஸ்ட் மாஸ்டரின் குடியிருப்பு  விருந்தினர்கள் தங்கி அதன் அழகை அனுபவிக்க வழிசமைக்கிறது. அதன் மூலம் பெரும் வருமானமும் கிடைக்கிறது. தங்குமிடத்தை முன்பதிவு செய்ய வாய்ப்பு இல்லாதவர்கள், தரை தளத்தில் உள்ள தபால் நிலையத்தில் கிடைக்கும் அழகான அஞ்சல் அட்டைகளில் ஒன்றை நினைவுப் பொருட்களாக வாங்கிச் செல்கிறார்கள்.

சுற்றுலாத்துறைக்கு இவ்வாறு நீண்ட நெடுங்காலம் பங்களிப்புச் செய்த இத்தபாலகத்தை சுற்றுலாத்துறை அபிவிருத்தி என்ற பெயரில் அரசாங்கம் (இந்தக் கட்டிடத்தை) நீண்டகால குத்தகைக்கு ஒரு தனியார் தொழில் முனைவோருக்கு - ஹோட்டல் அமைக்க வழங்க முன்வந்துள்ளது.

130 ஆண்டுகளுக்கும் மேலாக  இயங்கும் இத்தபாலகத்தை மூடி 7 நாட்களுக்குள் தபால் அலுவலகம் வேறு இடத்திற்கு மாற்றப்பட வேண்டும் என்று அரசாங்கம் அறிவுறுத்தியிருகிறது.

அரசின் இந்த முடிவு எதிர்கால சந்ததியினருக்கு மற்றொரு மதிப்புமிக்க பொது சொத்தை மறுப்பதாக இருக்கும். நுவரெலியா தபால் நிலையத்தை இல்லாதொழிக்கும் யோசனைக்கு எதிராக அனைத்து குடிமக்களும் ஒன்று திரள வேண்டும் அஞ்சல் தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன. 

இந்த முடிவு நாட்டின் சுற்றுலா மதிப்புக்கு தீங்கு விளைவிக்கும்.  சுற்றுலா பயணிகள் கட்டிடத்தின் வெளிப்புறத்தை மட்டுமல்ல, உள்ளேயும் பார்க்க விரும்புகிறார்கள். கட்டிடம் தபால் நிலையமாக இருந்தால் மட்டுமே அவர்களால் சுதந்திரமாக இதைச் செய்ய முடியும்.

கட்டிடம் ஒரு ஹோட்டலாக மாற்றப்பட்டதும் அதன் உள் அமைப்பு நிரந்தரமாக மாற்றப்படும். மிகச் சிலரே - அதுவும் பணக்காரர்களே இங்கு செல்ல முடியும். ஆக அரசு தனது தவறான முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பலரும் வலியுறுத்துகிறார்கள்.

மறுபுறம் 'முதலீடு பெறுவது மிகவும் முக்கியம். கிடைக்கும் நிலத்தைப் பயன்படுத்தாமல், அந்த நிலத்தில் வருமானம் ஈட்டாவிட்டால், நாட்டின் பொருளாதாரத்தை எவ்வாறு புதுப்பிக்க முடியும்? என்று கேள்வியெழுப்பியிருக்கும் அமைச்சர் பந்துல குணவர்தன நுவரெலியா நாட்டின் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். குறிப்பாக இந்திய சுற்றுலாப் பயணிகள் இந்த இடத்திற்கு சிறப்பு ஈர்ப்பைக் காட்டுகிறார்கள். எனவே, ஹோட்டல் அமைப்பதன் மூலம், அந்தப் பகுதி மக்களின் வருமான நிலையும் உயரும்.  வேலை வாய்ப்புகளையும் உருவாக்க முடியும் என்றும் நுவரெலியா தபால் நிலையம் பாழடைந்த நிலையில் காணப்படுவதோடு, அதனை பராமரிப்பதற்கும், திருத்தியமைப்பதற்கும் கடினமாக உள்ளதாகவும், அந்த இடத்தை பொருளாதார ரீதியில் இலாபகரமான திட்டத்திற்கு பயன்படுத்துவதே சிறந்தது என்றும் அரசின் திட்டத்தை நியாயப்படுத்தியிருக்கிறார். 

பாரம்பரிய அம்சங்களை பாதுகாக்கவும் மேம்படுத்தவும் பல நாடுகள் அதிக கவனம் செலுத்திவரும் இன்றைய நிலையில் பாரம்பரிய அம்சங்களை பணத்தேவைக்காக அழிப்பது நியாமற்றது. 

நுவரெலியாவின் அடையாளமாக, பாரம்பரிய சொத்தாக இருக்கும் இந்த தபாலகத்தை தனியார்மயத்திலிருந்து மீட்க மலையக அரசில் சக்திகளும் குரல்கொடுக்க வேண்டும்.

125 ஆண்டுகளுக்கும் மேலாக சுற்றுலாத்துறையின் ஆதாரமாக பாரம்பரிய சின்னமாக இருக்கும் இந்த கட்டிடத்தை தனியாருக்கு கொடுப்பது சுற்றுலாத்துறைக்கே பாதிப்பாக அமையும். நுவரெலியா தபால் நிலையத்தை விற்பதை விட அதன்மூலம் கிடைக்கும் சில இலட்சங்களை திரட்ட அரசாங்கம் வேறு வழிகளை தேடவேண்டும். அதுவே நாட்டுக்கு நன்மை தரும் விவேகமான முடிவாக இருக்கும். தங்க முட்டைக்கு ஆசைப்பட்டு வாத்தின் வயிற்றை அறுத்துவிட வேண்டாம் என்பதே அரசுக்கு பலரும் கூறும் செய்தியாக இருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வடக்கு, கிழக்கில் சுதந்திரமான ஆலய வழிபாட்டுக்கும் ...

2024-02-28 18:04:16
news-image

பத்தாயிரம் வீட்டுத்திட்டமும் பத்து பேர்ச் காணி...

2024-02-28 13:52:19
news-image

பூமியின் நுரையீரலில் மிக பெரிய அனகொண்டா

2024-02-28 11:03:34
news-image

அடையக்கூடிய எல்லைக்கு நல்லிணக்கத்தைக் கொண்டுவருதல்

2024-02-27 14:27:33
news-image

இலங்கையில் பெண் கைதிகள் சடுதியாக அதிகரிப்பு…!

2024-02-27 13:50:28
news-image

இனி என்னை அப்பா என்று யார்...

2024-02-27 12:10:48
news-image

வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலை மோசடிகளால் அழிகிறதா?

2024-02-27 16:00:41
news-image

ரஃபா எல்லைக் கடவையும் எகிப்து மற்றும்...

2024-02-26 16:15:11
news-image

அதிகாரத்துக்காக மக்கள் ஆணையைப் பறித்தல்

2024-02-26 15:48:00
news-image

ஆடி அடங்கிய பின் பிறக்கின்ற ஞானம் 

2024-02-26 15:36:27
news-image

விலகும் புதைகுழி மர்மம்

2024-02-26 15:15:32
news-image

சிங்கள இனவாதிகளின் தெரிவு

2024-02-26 15:06:18