இருளகற்றி ஒளியேற்றும் நன்னாளே தீபத்திருநாள்!

08 Nov, 2023 | 12:41 PM
image

ரணிவாழ் இந்துக்களால் மிகக் கோலாகலமாக கொண்டாடப்படும் பண்டிகை தீபாவளியாகும்.

இன்றைய கணினி யுகத்தில் மேலை நாடுகளில் இந்துக்களுடன் இணைந்து பல இன மக்களும் இப்பண்டிகையை கொண்டாடுவது வரவேற்கவேண்டிய விடயம். 

தீபாவளி தினத்தன்று இல்லங்களிலும் வீதிகளிலும் ஆலயங்களிலும் வரி வரியாக விளக்குகளை ஏற்றி வழிபடப்படும். 

'தீபம்' என்றால் 'விளக்கு', 'வளி' என்றால் 'வரிசை' என்று பொருள் கொள்ளலாம். அகத்தில் இருக்கும் இருள் எனும் தீய எண்ணங்களை நீக்கி, தூய்மை எனும் ஒளியை அடைவதே இதன் தத்துவமாகும்.

இவ்வுலகில் அநீதி, அதர்மம் தலைவிரித்தாடும் தருணங்களில் இறைவன் தோன்றி தர்மத்தை நிலைகொள்ளச் செய்வதே இதன் விளக்கமாகும்.

ஒரு முறை ஸ்ரீ விஷ்ணு பகவான் வராக அவதாரம் கொண்டு கடலில் மூழ்கிய பூமியை மீட்டெடுத்தார். அத்தருணத்தில் பூமாதேவிக்கும் வராக மூர்த்திக்கும் பிறந்தவன்தான் நரகாசூரன்.

எக்காலத்திலும் தனது மகனுக்கு இறப்பு நேரக் கூடாது என்ற வரத்தினை நரகாசூரனின் தாயான பூதேவி விஷ்ணு பகவானிடம் வேண்டவே, அதற்கு விஷ்ணு பகவான், "சாகா வரத்தை யாருக்கும் வழங்க முடியாது. ஆனால், உன் மகனை என்னைத் தவிர வேறு யாராலும் அழிக்க முடியாது. அச்சமயம் நீயும் என்னுடன் இருப்பாய்" என்றார்.

அவ்வாறு ஸ்ரீ விஷ்ணு வழங்கிய வரத்தின்படி கிருஷ்ணா அவதாரத்தில் பூமாதேவி சத்யபாமாவாகத் தோன்றி ஸ்ரீ கிருஷ்ணனுக்கு மனைவியானாள்.

படைப்புக் கடவுளான நான்முகனை நோக்கி நரகாசூரன் கடுமையாக தவமிருந்து, எந்த நிலையிலும் தனக்கு மரணம் நேரக்கூடாது என்ற வரத்தினைக் கேட்டான். அதற்கு பிரம்மன் "புவனத்தில் பிறக்கும் அனைவரும் என்றோ ஒரு  நாள் மரணிப்பது விதி. இதை யாராலும் மாற்ற முடியாது. எனவே, வேறு வரம் கேள்" என்றார்.

பின்னர், ஆழ்ந்த சிந்தனைக்குப் பின் நரகாசூரன் "நான்முகனே! என் தாயாரினால்தான் எனக்கு மரணம் நிகழவேண்டும்" என்ற வரத்தை வேண்டிக்கொண்டான்.

பிரம்மனும் அவ்வாறே வரத்தை வழங்கினார். எந்தத் தாயும் தான் ஈன்ற பிள்ளையை கொல்லத் துணிய மாட்டாள் என்ற நம்பிக்கையில் இருந்தான் நரகாசூரன். 

வரம் கிடைத்த நாளிலிருந்து மூவுலகத்தையும் ஆக்கிரமித்து அனைவருக்கும் பல இம்சைகளை கொடுக்க ஆரம்பித்தான்.

பாரத தேசத்தில் வட நிலத்தில் இருக்கும் பிரக்ஜோதிஷபுரம் எனும் நகரினை தலைமை இடமாகக் கொண்டு கொடுங்கோல் ஆட்சி புரிந்தான்.

இவனின் கொடுமைகளால் பெருந்துயரம் கொண்ட தேவர்கள் ஸ்ரீ கிருஷ்ணனின் பாதங்களில் சரணடைந்தனர். நரகாசூரனை அழித்து தங்களைக் காக்கும்படி வேண்டிக்கொண்டனர். அவர்களின் வேண்டுதலுக்கமைய, பகவான் ஒரு நாள் சத்யபாமாவை தன் தேரின் சாரதியாக அமர்த்திக்கொண்டு பிரக்ஜோதிஷபுரம் நோக்கி சென்றார்.

நரகாசூரனுக்கு எதிராக போர் செய்ய ஆயத்தமாகி, தனது சங்கினை ஊதி முழக்கம் செய்தார். சங்கின் ஓசை கேட்டு நரகாசூரனும் போருக்குத் தாயாரானான். தனது பெரும் படைகளுடன் மூர்க்கத்தனமாக போரிட்டான் நரகாசூரன். 

ஒரு முறை நரகாசூரன் ஏவிய கணையின் வலிமை தாங்காமல் மூர்ச்சையுற்று தேர் இருக்கையில் சாயந்தது போல் கிருஷ்ணர் பாவனை செய்யவே, அதுவரை தேரோட்டியாக இருந்த சத்யபாமா கடும் கோபம் கொண்டு நரகாசூரன் மீது அம்பு மழைகளை பொழிய ஆரம்பித்தாள்.

சத்யபாமா ஏவிய வலிமை மிக்க அஸ்திரங்களால் தாக்குண்ட நரகாசூரன் முடிவில் மரணத்தை தழுவிக்கொண்டான். சூரனை வதம் செய்த பின்னரே, அவன் தன் மகன் என அறிந்துகொண்ட பூமாதேவியின் அம்சமான சத்யபாமா மகனின் நிலை கண்டு துயரடைந்தாள்.

அவனது இறப்பால் தனக்கு மட்டுமே துயர். எனினும், இவனது இறப்பால் மூவுலகினருக்கும் பெரும் நன்மை ஏற்படும் எனக் கருதி தன் மனதை தேற்றிக்கொண்டாள்.

பின்னர், ஸ்ரீ கிருஷ்ணரிடம், "என் மகனை இழந்த வேதனை என்னுடன் இருக்கட்டும். ஆயினும் உலக மக்களுக்கு எவ்வித துயரமும் ஏற்பட்டு விடக்கூடாது. எனவே நரகாசூரன் இறந்த தினத்தில் எல்லோரும் கங்காஸ்நானம் செய்து, புத்தாடை அணிந்து, விருந்துண்டு மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்" என்ற வரத்தினைப் பெற்றாள். புராணத்தின்படி, தீபாவளி பண்டிகை இவ்வாறே உருவானது. 

தீபத்திருநாளில் அனைவரும் தீபமேற்றுங்கள்... தீப ஒளி உங்கள் வாழ்க்கையிலும் ஒளி வீசும்!

- எஸ்.கணேசன் ஆச்சாரி சதீஷ், கம்பளை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்