மெக்ஸ்வெல் இரட்டைச் சதம் குவித்து வரலாறு படைக்க ஆப்கானை வீழ்த்தியது அவுஸ்திரேலியா

07 Nov, 2023 | 11:09 PM
image

(இந்தியாவிலிருந்து நெவில் அன்தனி)

மும்பை வான்கடே விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (07) நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தானின் பலத்த சவாலுக்கு மத்தியில் க்ளென் மெக்ஸ்வெல் அதிரடியாக ஆட்டம் இழக்காமல் இரட்டைச் சதம் குவித்து அவுஸ்திரேலியாவுக்கு மிகவும் அவசியமான 3 விக்கெட் வெற்றியை ஈட்டிக்கொடுத்தார்.

இந்த வெற்றியடன் உலகக் கிண்ண அரை இறுதிச் சுற்றில் விளையாடும் தகுதியை இந்தியா, தென் ஆபிரிக்கா ஆகியவற்றைத் தொடர்ந்து 3ஆவது அணியாக அவுஸ்திரேலியா உறுதிசெய்துகொண்டது.

இதற்கு அமைய தென் ஆபிரிக்காவும் அவஸ்திரேலியாவும் கொல்கொத்தாவில் நடைபெறவுள்ள இரண்டாவது அரை இறுதியில் விளையாடுவது உறுதியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தான் சார்பாக முதலாவது உலகக் கிண்ண சதத்தைக் இப்ராஹிம் சத்ரான் குவித்து வரலாறு படைத்த போதிலும் மெக்ஸ்வெல் குவித்த இரட்டைச் சதம் அதனை விஞ்சிவிட்டது.

மெக்ஸ்வெல் பெற்ற இரட்டைச் சதமானது 48 வருட உலகக் கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் குவிக்கப்பட்ட முதலாவது இரட்டைச் சதமாகும். அத்துடன் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அவுஸ்திரேலியா சார்பாக இரட்டைச் சதம் குவித்த முதலாவது வீரர் என்ற சாதனைக்கும் மெக்ஸ்வெல் உரித்தானார்.

போட்டியின் 22ஆவது ஓவரில் மெக்ஸ்வெல் 27 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது  நூர் அஹ்மதின் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டம் இழந்ததாக மத்தியஸ்தர் தீர்ப்பளித்தார். ஆனால் மீளாய்வில் அவர் ஆட்டம் இழக்கவில்லை என அறிவிக்கப்பட்டது.

அதே ஓவரில் 33 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது   மெக்ஸ்வெல் கொடுத்த இலகுவான பிடியை முஜீப் உர் ரஹ்மான் தவறிவிட்டார். இந்த இரண்டு வாய்ப்புகளை சாதகமாக்கிக்கொண்ட மெக்ஸ்வெல் இறுதியில் வரலாற்று நாயகனானார்.

பிடியைத் தவறவிட்டதால் ஏற்பட்ட வேதனையை முஜீப் உர் ரஹ்மான் தனது வாழ்நாளில் மறக்கமாட்டார் என்பது உறுதி.

ஆப்கானிஸ்தானினால் நிர்ணயிக்கப்பட்ட 291 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 46.5 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 293 ஓட்டங்களைப் பெற்று அபார வெற்றியீட்டியது.

எவ்வாறாயினும் அவுஸ்திரேலியாவின் துடுப்பாட்டம் சிறப்பாக அமையவில்லை.

19ஆவது ஓவரில் அவுஸ்திரேலியாவின் 7ஆவது விக்கெட் வீழ்த்தப்பட்டபோது அதன் மொத்த எண்ணிக்கை 91 ஓட்டங்களாக இருந்தது.

இதன் காரணமாக ஆப்கானிஸ்தான் மற்றொரு தலைகீழ் வெற்றியை ஈட்டும் என கருதப்பட்டது.

ஆனால், அதன் பின்னர் அதிரடியில் இறங்கிய மெக்ஸ்வெல் 128 பந்துகளை எதிர்கொண்டு 21 பவுண்டறிகள், 10 சிக்ஸ்கள் அடங்கலாக ஆட்டம் இழக்காமல் 201 ஓட்டங்களைக் குவித்து அவுஸ்திரேலியாவுக்கு மகத்தான வெற்றியை ஈட்டிக்கொடுத்தார்.

அவுஸ்திரேலியாவின் வெற்றிக்கு 5 ஓட்டங்கள் தேவைப்பட்டபோது மெக்ஸ்வெலின் இரட்டைச் சதத்திற்கும் 5 ஓட்டங்கள் தேவைப்பட்டது. அவர் வெற்றி ஓட்டங்களையும் இரட்டைச் சதத்தையும் சிக்ஸ் மூலம் பெற்றமை விசேட அம்சமாகும்.

ஸிம்பாப்வேக்கு எதராக 1983ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியில் அப்போதைய இந்திய அணித் தலைவர் கபில் தேவின் அதிரடி துடுப்பாட்டத்தை மெக்ஸ்வெலின் அதிரடி இரட்டைச் சதம் விஞ்சுவதாக அமைந்தது.

மெக்ஸ்வெல் பிரிக்கப்படாத 8ஆவது விக்கெட்டில் அணித் தலைவர் பெட் கமின்ஸுடன் சாதனை மிகு 202 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.

ஆனால், பெட் கமின்ஸின் பங்களிப்பு வெறும் 12 ஓட்டங்களாக இருந்தது.

நியூஸிலாந்துக்கு எதிராக ஸிம்பாப்வேயின் டேவிட் ஹூட்டன், இயன் புச்சார்ட் ஆகியோர் பகிர்ந்த 117 ஓட்டங்களே இதற்கு முன்னர் உலகக் கிண்ணப் போட்டியில் 8ஆவது விக்கெட்டுக்கான அதிசிறந்த இணைப்பாட்டமாக இருந்தது.

க்ளென் மெக்ஸ்வெல் 147 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது அவரது வலதுகாலில் தசைப் பிடிப்பு ஏற்பட்டது. இதனால் கடும் வேதனைக்குள்ளான மெக்ஸ்வெல், சிகிச்சைக்குப் பின்ன்ர் தொடர்ந்து துடுப்பெடுத்தாடினார். ஆனால், அதன் பின்னர் அவர் நின்ற இடத்தில் இருந்தவாறே பாதங்களை பெரிதாக அசைக்காமல் பவுண்டறிகளையும் சிக்ஸ்களையும் விளாசியமை அற்புதமாக இருந்தது.

அத்துடன் மெக்ஸ்வெலின் விடாமுயற்சியும், வைராக்கியமும் ஏனைய துடுப்பாட்ட வீரர்களுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இருந்தது.

பந்துவீச்சில் ரஷீத் கான் 44 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் நவீன் உல் ஹக் 47 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அஸ்மத்துல்லா ஓமர்ஸாய் 52 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் 50 ஓவர்களில் 5 விக்கெட்களை மாத்திரம் இழந்து 291 ஓட்டங்களைக் குவித்தது.

இப்ராஹிம் ஸத்ரான் மிகுந்த நம்பிக்கையுடன் துடுப்பெடுத்தாடி 143 பந்துகளை எதிர்கொண்டு 8 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் அடங்கலாக ஆட்டம் இழக்காமல் 129 ஓட்டங்களைக் குவித்தார்.

இரண்டாவது விக்கெட்டில் ரஹ்மத் ஷாவுடன் 83 ஓட்டங்களைப் பகிர்ந்த ஸத்ரான், 3ஆவது விக்கெட்டில் அணித் தலைவர் ஹஷ்மத்துல்லா ஷஹிதியுடன் 52 ஓட்டங்களையும் பிரிக்கப்படாத 6ஆவது விக்கெட்டில் ரஷித் கானுடன் 58 ஓட்டங்களையும் பகிர்ந்தார்.

ஆப்கானிஸ்தான் சார்பாக துடுப்பெடுத்தாடிய 7 வீரர்களும் இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றதுடன் உதிரிகளும் இரட்டை இலக்கமாக இருந்தது.

ஸத்ரானைவிட ரஹ்மானுல்லா குர்பாஸ் (21), ரஹ்மத் ஷா (30), ஹஷ்மத்துல்ல ஷஹிதி (26), அஸ்மத்துல்லா ஒமார்ஸாய் (22), மொஹமத் நபி (12), ரஷித் கான் (18 பந்துகளில் 2 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் உட்பட ஆட்டம் இழக்காமல் 35) ஆகியோர் இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.

பந்துவீச்சில் ஜொஷ் ஹேஸ்ல்வூட் 39 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

ஆட்டநாயகன்: க்ளென் மெக்ஸ்வெல்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஒரு நூற்றாண்டுக்கு முன் பாரிஸ் நகரில்...

2024-02-28 17:19:56
news-image

றோயல் செலஞ்சர்ஸுக்கு இலகுவான வெற்றி

2024-02-28 13:57:45
news-image

கெப், ராதா பந்துவீச்சிலும் லெனிங், ஷஃபாலி...

2024-02-27 17:50:51
news-image

சொந்த மண்ணில் தொடர்ச்சியாக வெற்றிகளைப்பெற்று அசத்தும்...

2024-02-27 16:51:10
news-image

நமிபியா வீரர் ஈட்டன் அதிவேக ரி20...

2024-02-27 16:54:52
news-image

பங்களாதேஷுடனான ரி20 தொடரில் அசலன்க தலைவராகிறார்

2024-02-27 12:52:21
news-image

டிசம்பரில் அங்குரார்ப்பண லங்கா ரி10 லீக்...

2024-02-26 21:34:26
news-image

இங்கிலாந்துடனான நான்காவது டெஸ்டில் 5 விக்கெட்களால்...

2024-02-26 17:08:28
news-image

ஸ்ரீலங்கா சுப்பர் சீரிஸ் 2024 மோட்டார்...

2024-02-26 13:50:22
news-image

மும்பை இண்டியன்ஸுக்கு இரண்டாவது வெற்றி

2024-02-26 12:02:40
news-image

நுவரெலியா குதிரை பந்தய திடலில் இடம்பெற்ற...

2024-02-26 01:52:13
news-image

இந்தியாவின் டெஸ்ட் தொடர் வெற்றிக்கு மேலும்...

2024-02-25 22:17:21