ஆர்.ராம்
வடக்கு - கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கம் ஆரம்பிக்கப்பட்டு, அதன் தொடர்ச்சியான செயற்பாடுகளின்போது ஏற்பட்ட முரண்பாடுகள் பொதுவெளிக்கு வந்துள்ள நிலையில், நிர்வாகப் பதவிகளில் இருந்தவர்கள் முக்கிய பொறுப்புக்களில் இருந்தவர்கள் தமக்கு கீழ்படியாது முரண்டுபிடித்தவர்களை களையெடுக்கும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டன என்பதை கடந்தவாரம் பார்த்திருந்தோம்.
களையெடுக்கும் முதலாவது அத்தியாயம் வவுனியாவில் அரங்கேற்றப்பட்டதோடு அதற்கு அடுத்தபடியாக முல்லைத்தீவு, மன்னார் மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலும் முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. இருந்தபோதும், முதலாவது முயற்சியே சந்தி சிரிக்கும் நிலையை அடைந்தமையால் இப்போது அடுத்தகட்டம் சம்பந்தமாக தற்போதைய நிர்வாகத்தினரும், அவர்களது புலம்பெயர் ஆதரவு அணியினரும் திட்டமிடல்களை மேற்கொண்டு வருகின்றார்கள்.
உண்மையில், வவுனியா கூட்டத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளிடையே கைகலப்பு இடம்பெறுவதற்கான பின்னணி என்னவென்பதை சுருக்கமாக பார்த்து விட்டு, இந்த உணர்வு ரீதியான விடயத்தினையும் அதுசார்ந்துள்ள அமைப்பையும் எவ்வாறு மீளமைக்கலாம் என்பதையும் இந்தப் பத்தியில் பார்க்கலாம்.
தற்போது வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவர் மற்றும் செயலாளர் பதவிகளில் உள்ளவர்கள் இருவரினதும் ஏகோபித்த தீர்மானத்துக்கு அமைவாக, வவுனியா மாவட்டத்தின் வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவிக்கு திடீரென ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பொன்று விடுக்கப்பட்டு, அவருடைய பொறுப்புக்களிலிருந்து நீக்கப்பட்டதாக கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, குறித்த வவுனியா மாவட்டத் தலைவி, அவ்வாறு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் தீர்மானம் எப்போது எடுக்கப்பட்டது, அவ்வாறு நடவடிக்கை எடுப்பதாக இருந்தால், தான் இழைத்த தவறுகள் என்ன என்று வினாக்களைத் தொடுத்துள்ளார். அதுமட்டுமன்றி அவருக்கு ஆதரவாக, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, திருகோணமலை மற்றும் அம்பாறை ஆகிய ஆறு மாவட்டங்களின் பிரதிநிதிகளும் இருந்துள்ளனர்.
இந்த நிலையில், வவுனியா மாவட்ட தலைமைப் பதவியில் உள்ளவரை பதவி நீக்கினால் ஏனையவர்கள் அதனை முன்மாதிரியாகக் கொண்டு முரண்டுபிடிக்க மாட்டார்கள் என்ற ஆலோசனை புலம்பெயர் தேசத்திலிருந்து தற்போதைய தலைமை நிர்வாகிகளுக்கு வழங்கப்படவும், அதனை ஏற்றுக்கொண்டவர்கள் திடீரென வவுனியா மாவட்டக் கூட்டத்திற்கான அழைப்பினை விடுத்தார்கள்.
இந்தக் கூட்டத்திற்கு வவுனியா மாவட்டத்தில் உள்ள வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டபோதும், தற்போது பதவியில் இருக்கின்ற தலைவருக்கு அழைப்பு விடுக்கவில்லை. இதனால், தற்போதைய தலைவருக்கு ஆதரவான அணியினர் கூட்டத்தில் பங்கேற்பதா இல்லையா என்ற குழப்பங்களுக்குள் உள்ளாகிய நிலையில், குறித்த கூட்டமன்று நேரில் சென்று நியாயம் கேட்பதென அவர்கள் தீர்மானித்தார்கள்.
இதனால் தான், கூட்டம் கூட்டப்பட்ட தருணத்தில் வவுனியா மாவட்டத்தின் தற்போதைய தலைவி மற்றும் அவர் சார்ந்து செயற்படுபவர்கள் நேரில் சென்று நியாயம் கேட்க முற்பட்ட சமயத்தில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியது. இறுதியில் பொலிஸாரின் கால்களில் விழும் நிலைமையும் ஏற்பட்டது.
இதன்பின்னரும் கூட, பரஸ்பர சாடல்களும், புலம்பெயர் தேசத்தில் உள்ளவர்களிடத்தில் முறைப்பாடுகளை தெரிவித்து அவர்களின் தலையீடுகளிலான உரையாடல்களும் இன்னமும் நீண்டுகொண்டிருக்கின்றன.
வவுனியா மாவட்டத் தலைவி தவறுகளை இழைத்தாரா இல்லையா என்பது வாதவிவாதங்களுக்கு உரியதொரு விடயமாக இருக்கையில், மாவட்ட நிர்வாகப்பதவியில் இருந்து அவரைத் தூக்கி எறிவது அனைத்துக்குமான தீர்வு அல்ல.
ஏனென்றால், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் பற்றிய அலுவலகத்தை நிராகரிக்கும் வவுனியா மற்றும் யாழ்ப்பாண போராட்டங்களிலும், இறுதியாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நல்லூர் போராட்டத்திலும் அவரது பங்களிப்பு கனதியானது.
வவுனியா மாவட்டத்தலைவி மட்டுமல்ல, நிர்வாகப் பதவிகளில் அல்லாத எந்தவொரு உறவையும் புறந்தள்ளி தீர்மானங்களை எடுப்பதற்கோ அல்லது தீர்மானங்களுக்கு இசையவில்லை என்பதற்காக அவர்களை ஒதுக்கி வைப்பதற்கோ வடக்கு - கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத்துக்கு எந்தவொரு அதிகாரமும் கிடையாது.
குறித்த சங்கமானது, நீதி, நியாயத்துக்கான தேடலுக்காக உணர்வுகளாலும், உறவுகளாலும் தாமாகவே உருவாகிய மக்கள் அமைப்பாகும். அது, தனிநபருக்கோ அல்லது குறிப்பிட்ட குழுவினருக்கோ,அல்லது குறித்தவொரு அமைப்பினருக்கோ மட்டும் சொந்தமானது அல்ல.
அவ்விதமான சங்கம், மலினப்பட்டுச் செல்வதானது, தமிழின விடுதலைக்கான பயணத்தின் உத்வேகத்தையும், சுயநிர்ணய அடிப்படையிலான நிரந்தரமான தீர்வுக்கான கோரிக்கையையும் நிச்சயமாக நீர்த்துப்போகச் செய்வதாகவே அமையும்.
ஆகவே, வடக்கு - கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினை பிரிக்கமுடியாத, பிளவுபடாத, அற்பசொற்ப சலுகைகளுக்காக சேரம்போகாத, தனிநபர்களினதோ அல்லது குழுவினர்களினதோ ஆதிக்கத்துக்கு உட்படாத அல்லது கைப்பாவை நிலைமைக்கு ஆளாகாதவாறு வலுவான கட்டமைப்பாக பேணிப்பாதுகாக்க வேண்டியது அவசியமாகின்றது.
அவ்விதமானதொரு அமைப்பாக வடக்கு - கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தை மேம்படுத்துவதாக இருந்தால் பின்வரும் மறுசீரமைப்புக்களை உடனடியாக மேற்கொள்ள வேண்டியது அவசியமாகின்றது.
முதலாவதாக, வடக்கு - கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவர், செயலாளர் மற்றும் மாவட்டங்கள் தோறும் காணப்படும் தலைவர், செயலாளர் பதவிகள் உடன் நீக்கப்பட வேண்டும். அதற்குப் பதிலாக, வடக்கு ,கிழக்கின் எட்டு மாவட்டங்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் 'வடக்கு - கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் தலைமைத்துவ சபை' என்ற கட்டமைப்பு தோற்றுவிக்கப்பட வேண்டும். இந்தக் கட்டமைப்பில் மாவட்டங்களை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் தலா ஒருவரோ அல்லது இருவரோ அங்கத்தவம் வகிக்க முடியும்.
எனினும், குறித்த சபையினது ஆயுட்காலம் என்பது இரண்டு ஆண்டுகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். அதன் பின்னர், புதிய உறவுகளே பதவிநிலைக்கு வருவார்கள். ஏலவே பதவிகளில் இருந்தவர்கள் அவர்களுக்கான செயற்பாட்டு வழிகாட்டிகளாக இருக்க முடியும்.
இந்த சபையே அனைத்துவிதமான தீர்மானங்களையும் இறுதி செய்யும் அதிகாரத்தைக் கொண்டதாக இருப்பதோடு அந்த தீர்மானங்கள் அனைத்தும் எட்டு மாவட்டங்களிலும் உள்ள வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் அனைத்து உறவுகளினது ஏகோபித்த ஆதரவைப் பெற்றதாக இருக்க வேண்டும்.
இரண்டாவதாக, உருவாக்கப்படும் மேற்படி 'வடக்கு - கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் தலைமைத்துவ சபையானது' வினைத்திறான செயற்படுவதற்காக, அரசியல்கட்சிகள் மற்றும் ஏனைய தொழிற்சங்க அமைப்புக்களுடன் தொடர்புபடாத வகையில் காணாமலாக்கப்பட்டவர்களின் விடயங்களுடன் அர்ப்பணிப்பாகவும், அதுசார்ந்த அனுபவங்கள் நிறைவாக காணப்படுவதோடு, வடக்கு, கிழக்கை மையப்படுத்தியும், புலம்பெயர் தேசங்களை மையப்படுத்தியும் பத்துப்பேருக்கு மேற்படாத வகையிலான 'வழிகாட்டல் சபை அல்லது ஆலோசனை சபையொன்றை' அமைக்க வேண்டும்.
மூன்றாவதாக, 'வடக்கு - கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் தலைமைத்துவ சபையில்' மாவட்டங்களை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் அங்கத்துவத்தினை கொண்டிருப்பவர்களின் தலைமையில் மாவட்டங்கள் தோறும் ஐவரைக் கொண்ட 'காணாமலாக்கப்பட்ட உறவுகளின் மாவட்டச் செயற்குழுவொன்றை' ஸ்தாபிக்க வேண்டும்.
இந்தக் குழுவானது, மாவட்ட ரீதியாக முன்னெடுக்கப்படுகின்ற செயற்பாடுகள் மற்றும், பரிந்துரைகள், கோரிக்கைகள் உள்ளிட்ட அனைத்துவிதமான விடயங்களையும் தலைமைத்துவ சபைக்கு கொண்டு செல்வதற்கும், தலைமைத்துவ சபையின் விடயங்களை சாதாரண உறவுகளிடத்தில் கொண்டு சேர்க்கும் பாலமாக செயற்பட வேண்டும்.
அத்துடன், மாவட்டங்கள் தோறும் உள்ள சிவில் அமைப்பின் பிரதிநிதிகள், மதத்தலைவர்கள், மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆகியோரையும் இணைத்துச் செயற்படுவதற்கான நிலைமைகளையும் பரந்துபட்ட வகையில் முன்னெடுத்தல் வேண்டும்.
அதேநேரம், அரசியல்வாதிகள், தொழிற்சங்க அமைப்பினரின் பங்கேற்பை நிராகரிக்காதிருப்பதோடு, அவர்களின் பங்கேற்பானது, அரசியல் சாயம் பூசப்படாதிருப்பதையும், நிகழ்ச்சி நிரலுக்குள் சிக்காதிருப்பதையும் உறுதி செய்துகொள்ள வேண்டும்.
நான்காவதாக, நிதி விடயத்தைக் கையாள்வதற்காக தனிநபர்களின் வங்கிக் கணக்கு இலக்கங்கள் பயன்படுத்தப்படுவது முழுமையாக நிறுத்தப்படுவதோடு, அதுபற்றிய உத்தியோகபூர்வமான அறிவிப்பை விடுக்க வேண்டும்.
அடுத்தபடியாக, மாவட்டங்கள் தோறும் தெரிவு செய்யப்பட்ட எட்டு அங்கத்தவர்களை உள்ளடக்கியதாக நிதிச் சபையொன்றை ஸ்தாபிப்பதோடு, அச்சபையின் அங்கத்தவர்களின் கூட்டில் வங்கிக் கணக்கொன்றை ஆரம்பிக்க வேண்டும். மேலும் வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்காக புலம்பெயர்ந்த தேசத்தில் நிதிச் சேகரிப்பில் ஈடுபவர்களின் பூரண விபரங்கள் அடங்கிய வகையில் நாடுகள் தோறும் நபர்கள் அடையாளப்படுத்தப்பட்டு பகிரங்கப்படுத்த வேண்டும்.
அதேபோன்று அவ்வாறு நிதிச் சேகரிப்பில் ஈடுபடுபவர்கள் நிதிகளை பெறுகின்றவர்களுக்கும், நன்கொடையாளர்களுக்கும் உரியவாறான சான்றிதழை வழங்க வேண்டும். அந்த நிதி, தாயகத்தில் உள்ள வடக்கு - கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் வங்கிக் கணக்கிற்கு வைப்பிலிடப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தவும் வேண்டியது அவியமாகின்றது.
ஐந்தாவதாக, கவனயீர்ப்புக்கள், ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள், அறிக்கைகள், உள்நாட்டு, வெளிநாட்டு இராஜதந்திரிகளுடனான சந்திப்புகள், ஜெனிவா அமர்வுகளில் பங்கேற்றல் உள்ளிட்ட அனைத்திலும் பங்கேற்பவர்கள் தலைமைத்துவ சபை, வழிகாட்டல் சபை, மற்றும் இணைந்து செயற்படும் சிவில் அமைப்பின் பிரதிநிதிகள் ஆகியோரின் கூட்டாக இருப்பது கூடுதல் பலமாகும்.
ஆகக்குறைந்தது இந்த விடயங்களை முன்னெடுப்பதன் ஊடாக, கறைபடிந்துள்ள, வடக்கு - கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கம் காத்திரமான பயணத்தை மேற்கொள்வதற்கான முதற்படியில் அடியெடுத்து வைக்க முடியும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM