* காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல் 27 நாட்களுக்கும் மேலாக தொடர்கின்ற நிலையில் இரு தரப்பிலுமாக 10ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
* இஸ்ரேல்- காஸா யுத்தம் அதன் "இரண்டாம் கட்டத்திற்கு" நுழைந்துள்ளதாகவும், தரைவழி தாக்குதல் நடந்து கொண்டிருப்பதாகவும் அதே நேரத்தில் இஸ்ரேலியர்களை ஒரு நீண்ட போருக்கு தயாராக இருக்க வேண்டும் என்றும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கேட்டுள்ளார்.
* காஸாவிற்கான மனிதாபிமான அணுகல் தடைப்பட்டுள்ளமை சர்வதேச சமூகத்தின் "பாரிய தோல்வி" என்று செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர் கண்டனம் வெளியிட்டுள்ளார் .
* காஸாவின் மொத்த தகவல் தொடர்பும் முடங்கியுள்ளது. இது அவசர கால மீட்பு நடவடிக்கைகளுக்கு இடையூறாக உள்ளது.
* இஸ்ரேலின் தாக்குதலை தொடர்ந்து காஸாவில் எந்தவொரு கட்டிடமும் , இடமும் பாதுகாப்பில்லை என்ற நிலையே தொடர்ந்து வருகிறது.
ஆர்.பி.என்.
காஸாவில் இஸ்ரேல் கடந்த நான்கு வார காலமாக மேற்கொள்ளும் பயங்கர தாக்குதல்கள் காரணமாக அப்பாவி பொதுமக்கள், குழந்தைகள் என ஆயிரக்கணக்கானவர்கள் பலியாகி வருவதுடன் படுகாயமடைந்தும் வருகின்றனர். கடந்த வியாழக்கிழமை மாலை வரை காஸாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒன்பதாயிரத்தை எட்டியுள்ளது. உயிரிழந்தவர்களில் 4500க்கும் அதிகமானோர் சிறுவர்களும் குழந்தைகளுமாவர். இதற்கப்பால் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள மேலும் 2000 பேரை மீட்க முடியாது என மீட்புப் பணியாளர்கள் கைவிரித்துள்ளனர்.
இஸ்ரேல் தன் வசமுள்ள எப் - 161 என்ற அதிநவீன விமானங்களையும், பால்டிக் ஏவுகணைகளையும் பயன்படுத்தி கண்மூடித்தனமாக குண்டுகளை வீசி கட்டிடங்களை அழித்தும், மக்களை கொன்று குவித்தும் கோரத்தாண்டவமாடி வருகிறது.
காஸாவில் ஹமாஸூக்கு எதிரான போர் என்ற பெயரில் தொடர்ந்து வரும் தாக்குதல்கள் அந்த பூமியை மயான பூமியாக்குவதை நோக்கமாகக் கொண்டது என்ற குற்றச்சாட்டுக்கள் இஸ்ரேல் மீது சுமத்தப்படுகின்றன. யுத்த நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறியுள்ள இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, தாக்குதல்களை நிறுத்தப்போவதில்லை என்றும் சூளுரைத்துள்ளார்.
இந்தவிதமான சூழலில் இஸ்ரேல் யுத்த தாங்கிகளும் காஸா எல்லைக்குள் ஊடுருவியுள்ளதுடன் வைத்தியசாலைகள்,அகதி முகாம்கள் என்று எதையும் விட்டு வைக்கவில்லை.
இஸ்ரேல் ஏற்படுத்தியுள்ள மனித அவலங்கள் இந்த நூற்றாண்டில் எந்த சக்தியாலும் இதுவரை ஏற்படுத்தப்படாத ஒன்றாகும் என சர்வதேச மனித உரிமை அமைப்புகள் வர்ணித்துள்ளன.
இஸ்ரேல் காஸாவில் எந்த ஒரு கட்டிடத்தையும் விட்டு வைக்கவில்லை என்றும் மனிதாபிமான நடவடிக்கைகள் தொடர்பில் எந்த கவலையும் கொள்ளவில்லை என்றும் தெரிவிக்கும் கண்காணிப்பாளர்கள், உணவு, குடிநீர், மருந்து எதுவுமின்றி மக்கள் உப்பு நீரைக் குடித்து வாழவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகக் குறிப்பிடுகின்றனர். மின்சாரம் முற்றாக துண்டிக்கப்பட்டுள்ள காஸாவில் இஸ்ரேல் இராணுவம் செயற்கை ஒளியைப் பாய்ச்சி இரவு பகலாக தாக்குதல் நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜபாலியா அகதிகள் முகாம் மீது தாக்குதல் !
வடக்கு காஸாவில் உள்ள ஜபாலியா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் இராணுவம் கடந்த செவ்வாய் மற்றும் புதன் ஆகிய தினங்களில் வான்வழித் தாக்குதலை நடத்தியது. இதனால் பல குடியிருப்பு கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. இந்த தாக்குதலில் குறைந்தது 145 பேர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் ஒரு சிரேஸ்ட ஹமாஸ் இராணுவத் தளபதியும், கட்டிடங்களுக்கு அடியில் உள்ள ‘நிலத்துக்கு அடியிலான பாதாள பதுங்கு குழிகளில்’ இருந்த ஏராளமான ஹமாஸ் போராளிகளும் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. எனினும் கொல்லப்பட்டவர்கள் அனைவரும் பொது மக்களே என ஹமாஸ் தெரிவித்துள்ளது.
இதனிடையே தாக்குதல்கள் மாதக்கணக்கில் தொடரும் என்று இஸ்ரேல் இராணுவம் கூறியுள்ளது. ஹமாஸ் அமைப்பினரும் இஸ்ரேல் இராணுவத்தை குறிவைத்து தாக்கி வருகின்றனர்.
தரை வழியாகவும் தாக்கும் இஸ்ரேல்
வான் தாக்குதல்கள் இடைவிடாது ஒரு புறம் தொடர, மறுபுறம் இஸ்ரேல் தரைப்படைகள் பல திசைகளில் இருந்து தொடர்ந்து முன்னேறி, ஜபாலியா உட்பட வடக்கு காசா பகுதியின் அதிக மக்கள் தொகை கொண்ட சில பகுதிகளை படிப்படியாக கைப்பற்றி வருகின்றனர்.
ஹமாஸை ‘அழிப்பதற்கு’மற்றும் பணயக்கைதிகளை மீட்பதற்காக தரைப்படைகளை காஸாவிற்குள் அனுப்பியுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, சர்வதேச சமூகத்திடம் கூறியுள்ளார். இந்த விதமான சூழலில் கடந்த
திங்களன்று இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (ஐனுகு) ஹமாஸ் அமைப்பினர் மறைந்திருப்பதாக கூறப்படும் ‘கட்டிடங்கள் மற்றும் சுரங்கங்களை விமானக் குண்டு வீச்சு மூலம் அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதுடன்’ 20க்கும் மேற்பட்ட ஹமாஸ் அமைப்பினரை கொன்றதாக தெரிவித்துள்ளது. வடக்கு காசாவில் உள்ள அல்-அஸ்ஹர் பல்கலைக்கழகத்திற்கு அருகிலும் விமான தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இஸ்ரேலிய கவச வாகனங்கள் காஸா பகுதியில் வடக்கிலிருந்து தெற்கே செல்லும் பிரதான வீதியில் அணிவகுத்து காணப்படுகின்றன. இஸ்ரேலிய இராணுவம் காசாவின் சுற்றுச்சுவர் வேலியில் பல்லாயிரக்கணக்கான இராணுவ வீரர்களை டாங்கிகள் மற்றும் பீரங்கிகள் சகிதம் நிலை நிறுத்தி உள்ளது. இது 160,000 இஸ்ரேலிய நிலையான படையுடன் சுமார் 300,000ரிசேர்வ் படையினரையும் கொண்டுள்ளது. ஹமாஸின் இராணுவ பிரிவில் சுமார் 25,000 உறுப்பினர்கள் இருப்பதாக கருதப்படுகிறது. இவ்வமைப்பு காஸா முழுவதும் நிலத்தடி சுரங்கப்பாதைகளினாலான வலையமைப்பையும் கொண்டுள்ளது. இது 500 கி.மீ (310 மைல்கள்) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று இஸ்ரேலிய தரப்பு கூறுகிறது.
செவ்வாயன்று காஸாவிற்குள் நுழைந்த போது இடம்பெற்ற மோதலில் இஸ்ரேலிய இராணுவத்தினர் 15 பேர் கொல்லப்பட்டதாகவும், அக்டோபர் 7 முதல் இதுவரை மொத்தம் 330 பேர் கொல்லப்பட்டதாகவும் கூறியுள்ளது. மேலும் காஸா நகரில் உள்ள அல்-குத்ஸ் வைத்தியசாலையைச் சுற்றி கடுமையான தாக்குதல்கள் இடம்பெற்றதாக ஞாயிற்றுக்கிழமை, சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் விபரித்துள்ளனர். இப் பகுதியில் 14,000 பேர் தங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டுப் பிரஜைகள் வெளியேற்றம்
பல வாரங்கள் எகிப்துடன் நடந்த தீவிர பேச்சுவார்த்தைகளின் விளைவாக ரஃபா கடவை திறக்கப்பட்டது. இதனையடுத்து ஒரு சிறிய எண்ணிக்கையிலான பாலஸ்தீனர்கள் மற்றும் வெளிநாட்டுப் பிரஜைகள் காஸாவை விட்டு கடந்த புதன்கிழமை வெளியேறினர். இஸ்ரேல், ஹமாஸ் மற்றும் எகிப்து இடையே கட்டார் ஏற்படுத்திய ஒப்பந்தத்தைத் தொடர்ந்து காயமடைந்த 76 பலஸ்தீனியர்களும் வெளிநாட்டு கடவுச் சீட்டு வைத்திருந்த சுமார் 335 பேரும் ரஃபா வழியாக காஸாவை விட்டு வெளியேறி எகிப்தைச் சென்றடைந்தனர். அதிகாரிகளின் கூற்றுப்படி, பிரித்தானிய மற்றும் அமெரிக்க கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் பிரதேசத்தை விட்டு வெளியேறியவர்களில் அடங்குவர்.
இஸ்ரேல்-காஸா போரின் முதல் சில வாரங்களுக்கு, ரஃபா எல்லை மூடப்பட்டது – எனினும் பாலஸ்தீனர்கள் இதனூடாக வெளியேற அனுமதிக்கப்படவில்லை. ஆனால் காஸாவிற்குள் குறைந்த எண்ணிக்கையிலான உதவி டிரக்குகளை அனுமதிக்கும் வகையில் அண்மையில் இது ஓரளவு திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த புதனன்று, அது மீண்டும் திறக்கப்பட்டு, காயமடைந்த நூற்றுக்கணக்கான பாலஸ்தீனியர்கள் மற்றும் வெளிநாட்டினரை வெளியேற்ற அனுமதித்தது. மேலும் வெளிநாட்டு கடவுச்சீட்டு வைத்திருக்கும் சுமார் 7,500 வெளிநாட்டவர்கள் இரண்டு வாரங்களில் காசாவை விட்டு வெளியேறுவார்கள் என்று தூதரக வட்டாரம் ஒன்று தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், இஸ்ரேல் மற்றும் எகிப்து எல்லைகளை மூடியதன் காரணமாக 2.2 மில்லியன் மக்களுக்குத் தேவையான பொருட்களில் ஒரு பகுதியே காசாவை அடைந்துள்ளதாக உதவிப் பணியாளர்கள் கூறியுள்ளனர்.
இதேவேளை, முக்கியமாக, கடந்த பல வாரங்களாக எந்த எரிபொருள் லொரிகளும் இந்த எல்லையை கடக்கவில்லை. ஹமாஸ் போருக்கான தயார்படுத்தல்களுக்காக எரிபொருளை திருடுவதாக கூறி இஸ்ரேல் தடுத்து வருகிறது.
உலக உணவுத் திட்டம் (WFP) உணவு, தண்ணீர், மின்சாரம் மற்றும் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக காஸாவின் நிலைமையை "பேரழிவு" என்று விவரித்துள்ளது, மேலும் அவசர உதவிகளை இப் பிரதேசத்திற்குள் அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.
போர் நிறுத்தக் கோரிக்கை!
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஒரு பிரசாரக் கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தபோது பெண் ஒருவர் குறுக்கிட்டு காஸாவில் போர் நிறுத்தம் வேண்டும் என்று கோரியதை அடுத்து, பைடன் 'மனிதாபிமான இடை நிறுத்தத்திற்கு' அழைப்பு விடுப்பதாக பதிலளித்தார். "எங்களுக்கு ஒரு இடைநிறுத்தம் தேவை என்று நான் நினைக்கிறேன். இடைநிறுத்தம் என்றால் கைதிகளை வெளியேற்றுவதற்கு நேரம் கொடுங்கள்” என்றார். பின்னர் வெள்ளை மாளிகை அவர் கூறியது, பணயக்கைதிகளை விடுவித்தல் மற்றும் மனிதாபிமான உதவி ஆகியவற்றையே குறிக்கிறது என்று தெளிவுபடுத்தியது.
இதேவேளை, ஐக்கிய நாடுகள் சபை உட்பட உலகின் பல நாடுகள் போர் நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன.
காஸாவில் மனிதாபிமான நிலை என்ன?
பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனிய அகதிகளுக்கு ஐ.நா. அதன் விநியோக மையங்களை அமைத்து கோதுமை மாவு மற்றும் சுகாதார பொருட்களை வழங்கி வருகின்றது. தற்போது குடிப்பதற்கு உப்பு கலந்த தண்ணீர் மட்டுமே கிடைப்பதாகவும் ஐ.நா.கவலை வெளியிட்டுள்ளது. மின்சாரம் மற்றும் மருத்துவப் பொருட்கள் பற்றாக்குறையால் காஸாவின் மருத்துவமனைகள் அரிதாகவே செயல்படுவதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. அதேவேளை கடந்த வாரம் உதவிப் பொருட்களை ஏற்றிக்கொண்டு சுமார் 500 லொறிகள் எகிப்தில் இருந்து ரஃபா எல்லை வழியாக காசாவிற்குள் நுழைந்தன. பொறுமை இழந்த மக்கள் கடந்த வாரம் ஐ.நா. களஞ்சியசாலைகளை உடைத்து பெருமளவு உணவுப் பொருட்களை எடுத்துச் சென்றதைக் காணக்கூடியதாக இருந்தது.
காஸாவுக்கான உதவிகள் கணிசமாக அதிகரிக்கப்பட வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இஸ்ரேலிடம் தெரிவித்துள்ளார். எனினும் மருத்துவமனைகள், தங்குமிடங்கள், பேக்கரிகள், நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் கழிவுநீர் அமைப்பு ஆகியவற்றுக்கு மின்சாரம் வழங்கப்படாமல் உள்ளதால் அவை தொழில் பட முடியாத நிலையில் உள்ளன.
ஹமாஸ் இராணுவ நோக்கங்களுக்காக மின்சாரத்தை பயன்படுத்தக்கூடும் என்று கூறும் இஸ்ரேல் எரிபொருள் விநியோகத்தை அனுமதிக்க மறுத்துவிட்டது. ஹமாஸ் நூறாயிரக்கணக்கான லிட்டர் எரிபொருளை பதுக்கி வைத்திருப்பதாகவும், தங்கள் சொந்தப் பாதுகாப்பிற்காக மக்களை கேடயமாகப் பயன்படுத்துவதாகவும் இஸ்ரேல் குற்றம்சாட்டியுள்ளது.
காஸாவின் வடக்கு பகுதியிலிருந்து வெளியேறுமாறு இஸ்ரேல் அறிவித்ததைத் தொடர்ந்து 1.4 மில்லியன் மக்கள் தெற்கே சென்றுள்ளனர். பொதுவாக 400,000 மக்கள் வசிக்கும் தெற்கு நகரமான கான் யூனிஸின் மக்கள் தொகை தற்போது சுமார் 1.2 மில்லியனாக அதிகரித்துள்ளது. பல குடும்பங்கள் வீடுகளைப் பகிர்ந்து கொள்கின்றன அல்லது கூடாரங்களில் வாழ்கின்றன.
ஏன் இப்படி நடக்கிறது?
ஒக்டோபர் 7 ஆம் திகதி அதிகாலையில் இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் தொடுத்தது. இஸ்ரேலை நோக்கி குறைந்தது 3,000 ராக்கெடகள்; சரமாரியாக ஏவப்பட்டன. நூற்றுக்கணக்கான ஹமாஸ் ஆயுததாரிகள் காசா பகுதியில் இருந்து பலத்த கோட்டையான சுற்றுச்சுவர் வேலியை தகர்த்து தெற்கு இஸ்ரேலுக்குள் கடல் வழியாகவும் பாராகிளைடர் களைப் பயன்படுத்தியும் தரையிறங்கி, திடீர் தாக்குதலை தொடுத்தனர். இஸ்ரேலின் பாதுகாப்பு கவசமான அயன் டோம் செயலிழந்தது. மற்றும் பாலஸ்தீனிய போராளிகள் அருகிலுள்ள நகரங்களான, கிப்புட்ஜிம், ரெய்ம் ஆகியவற்றுக்குள் நுழைந்தனர். ரெய்ம் அருகே ஒரு இசை விழாவில் பல நூற்றுக்கணக்கான இஸ்ரேல் மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.
இந்நிலையில் அவர்களை நோக்கி நூற்றுக்கணக்கான ஹமாஸ் அமைப்பினர் தாக்குதலை தொடுத்தனர். இதில் சுமார் 1,400 பேர் வரை பலியானார்கள், அவர்களில் பெரும்பாலோர் பொதுமக்கள் மற்றும் இராணுவ நிலைகளில் இருந்தவர்கள். மேலும் 200க்கும் அதிகமானவர்கள் பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்டு காசாவிற்குள் கொண்டு செல்லப்பட்டனர். அதில் 30 க்கும் அதிகமான குழந்தைகளும் அடங்குவர். இஸ்ரேலின் உளவுப் படையான மொஸாட் கூட அறியாத இந்த தாக்குதல், வரலாற்றில் இஸ்ரேல் சந்தித்த மிக மோசமான எல்லை தாண்டிய தாக்குதல் என வர்ணிக்கப்பட்டது. தாக்குதலுக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் ஹமாஸூடன் போரை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்த பிரதமர் நெதன்யாகு, ஹமாஸ் "முன் ஒருபோதும் இல்லாத விலையைக் கொடுக்கும்" என்று சபதம் செய்தார். இந்நிலையிலேயே இதற்குப் பழிவாங்கும் வகையில் இதுவரை 4 ஆயிரத்துக்கும் அதிகமான குழந்தைகள் உட்பட 9,000 பேர் கடந்த வியாழக்கிழமை வரை இஸ்ரேலின் தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேலிடமுள்ள பாதுகாப்பு வளங்களைப் பார்க்கும்போது, ஹமாஸின் தாக்குதலை எதிர்பார்க்காதது வியப்பளிக்கிறது என்று விமர்சிக்கப்படுகின்றது. இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள மேற்குக் கரையில் வாழும் பாலஸ்தீனியர்களுக்கு இந்த ஆண்டுதான் அதிக உயிரிழப்பு ஏற்பட்டது. இதுவே இஸ்ரேலைத் தாக்க ஹமாஸைத் தூண்டியிருக்கலாம் என்றும் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.
மேலும் ஹமாஸ் பாலஸ்தீனிய மக்களிடையே தனது பிரபலத்தை அதிகரிக்க ஒரு குறிப்பிடத்தக்க பிரசார வெற்றியைப் பெற முயன்றிருக்கலாம் என்றும் இஸ்ரேலிய பணயக்கைதிகள் சிறை பிடித்ததன் மூலம் இஸ்ரேலிய சிறைகளில் இருக்கும் சுமார் 4,500 பாலஸ்தீனியர்களில் சிலரையேனும் விடுவிக்க இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்க மேற்கொள்ளப்பட்டதாகும் என்றும் கருதப்படுகிறது.
ஹமாஸினால் கடத்திச் செல்லப்பட்டவர்களில் இன்னும் 229 பேர் காஸாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. அவர்களில் 20 குழந்தைகள் மற்றும் குறைந்தது 60 வயதுக்கு மேற்பட்ட 10 பேர் அடங்குவர். இராணுவ சிப்பாய்களும் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டுள்ளனர். ஹமாஸ் இதுவரை நான்கு பணயக்கைதிகளை விடுத்துள்ளது. வளைகுடா நாடான கட்டார் அவர்களை விடுவிப்பதற்கான மத்தியஸ்தராக செயல்படுகிறது.
இஸ்ரேலின் நோக்கம் என்ன?
ஒக்டோபர் 7 தாக்குதலை தொடர்ந்து, காஸாவில் ஹமாஸ் கட்டமைப்பை இல்லாதொழிப்பதை அடிப்படை நோக்கமாகக் கொண்டு தாக்குதலை நடத்தி வருகிறது. மனிதாபிமானம் குறித்தோ மக்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகள் குறித்தோ அது கவலை கொள்ளவில்லை. அதிநவீன மற்றும் மோசமான ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதல்கள் நடாத்தப்படுகின்றன. ஜபாலியா மீதான தாக்குதலின்போது நிலநடுக்கம் ஏற்பட்டது போன்று உணர்ந்ததாக மக்கள் கூறுகின்றனர். அழிந்து போயுள்ள காசாவை மீள கட்டியெழுப்ப பத்து வருடங்களுக்கு மேலாகும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
ஹமாஸின் ஏவுகணை தளங்களை அழிப்பது, சுரங்கப்பாதைகளை முழுமையாக தகர்ப்பது, பலஸ்தீன மக்களை எகிப்தின் எல்லை வரை தள்ளுவது, இனி எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இஸ்ரேல் மீது தாக்குதலை தொடுக்க இடமளிக்காத வகையில் காஸா - இஸ்ரேல் எல்லையில் யுத்த சூனிய பிரதேசமொன்றினை உருவாக்குவது மற்றும் அந்த பிரதேசத்தை ஆக்கிரமிப்பது என்பனவே இப்போதைக்கு இஸ்ரேலின் நோக்கமாகும்.
இஸ்ரேலின் இந்த ஆக்கிரமிப்புத் தாக்குதல் தொடருமானால் யுத்தம் முடிவுக்கு வரும்போது காஸா எனும் சுடுகாடு மாத்திரமே அங்கு எஞ்சியிருக்கும் என்பதே இப்போதைக்கு நிதர்சனம் எனலாம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM