தருமையாதீனத்தின் 27வது குருமஹா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளின் ஜனன தினம் இன்று 

05 Nov, 2023 | 06:39 PM
image

தருமையாதீனத்தின் 27வது குருமஹா சன்னிதானம், ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளின் ஜனன தினம் இன்று (நவ. 05) ஆகும். 

ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளை பற்றி சிவாகம கலாநிதி. சிவஸ்ரீ. கு.வை. க. வைத்தீஸ்வர குருக்கள் தெரிவிக்கையில், 

குரு ஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்ட ஆதீனத்தின் ஆளுகைக்குட்பட்ட வகையில் 27 பெரிய சிவாலயங்கள் காணப்படுகின்றன. 

சமயப்பணி, சமூகப்பணி, மருத்துவ பணி, கல்விப்பணி என பரந்த நிலையில் மக்களுக்கு உரிய சேவைகள் இறை பணியாக முன்னெடுக்கப்படுகிறது.

அவற்றுள் வேத சிவாகம பாடசாலை, தேவார பாடசாலை, மருந்துவமனை, கல்லூரி என்பன அடங்கும். 

இலங்கையில் திருக்கேதீச்சரத்தில் தருமை ஆதீன கிளைமடம் ஸ்தாபிக்கப்பட்டு ஸ்ரீமத் மௌன மீனாட்சி சுந்தரத்தம்பிரான் சுவாமிகள் தலைமையில் இறைபணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை சிறப்பம்சமாகும். 

மேலும், தருமை ஆதீன 27வது நட்சத்திர குருமணிகள் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் சன்னிதானமாக இறைபணி ஏற்ற பின் முதலாவது தடவையாக கடந்த மாதம் யாழ்ப்பாணத்தில் திருத்தல யாத்திரையாக வருகை புரிந்தமை குறிப்பிடத்தக்கது. 

புனர்பூச நட்சத்திரத்தில் உதித்த சுவாமிகளின் ஜனன நட்சத்திரம் பக்திக்கும் இறை உணர்வுக்கும் மனித நேயத்துக்கும் அறிவுக்கும் உரிய பெருவிழாவாக அச்சுவேலி உலவிக்குளம் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயம், இந்துக் குருமார் அமைப்பு, பிள்ளையார்பட்டி சிவஸ்ரீ அண்ணா இணையத்தளம் உள்ளிட்டவை இணையவழி மெய்வழியே சிந்தனைகள் நிறைந்த நிகழ்வுகளை முன்னெடுத்து வருகின்றமை சிறப்பம்சமாகும். 

ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் கடலூர் மாவட்டம், எருக்கத்தம்புலியூரில் மறைஞானசம்பந்தம் பிள்ளை - அலர்மேல்மங்கை தம்பதியரின் முதல் மகனாக 1965இல் பிறந்தவர். இவரது இயற்பெயர் வேல்முருகன். 

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முதுகலை (எம்.ஏ.) பட்டம் பெற்ற இவர், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ஆய்வியல் நிறைஞர் பட்டத்தையும், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்தையும் நிறைவு செய்தவர். 

தருமையாதீன 26ஆவது குருமகா சந்நிதானத்திடம் சமய, விசேட, நிர்வாண தீட்சைகள் பெற்று, 1988ஆம் ஆண்டு முதல் 2000ஆம் ஆண்டு வரை திருப்பனந்தாள் காசிமடத்தின் காறுபாறுவாகவும், திருப்பனந்தாள் கல்லூரிப் பேராசிரியராகவும், செயலாளராகவும் பணியாற்றியவர்.  

திருநெல்வேலி, திருவையாறு, திருச்சிராப்பள்ளி, உய்யக்கொண்டான் திருமலை கோயில்களில் கட்டளை விசாரணையாளராகவும் ஏற்கெனவே பொறுப்பு வகித்தவர். 

இவர் 200க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியவர். தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம் உள்பட பல்வேறு பல்கலைக்கழகங்களில் நடைபெற்ற கருத்தரங்கங்களில் பங்கேற்று கட்டுரைகளைப் படைத்துள்ளார். 

சமய நூல்கள், சிறு வெளியீடுகள் உள்பட 50க்கும் மேற்பட்ட நூல்களை பதிப்பித்தவர்.  2000ஆம் ஆண்டு வரை "குமரகுருபரர்' இதழின் சிறப்பாசிரியராகவும், 2006ஆம் ஆண்டு முதல் தருமை ஆதீனத்தின் அதிகாரபூர்வ பத்திரிகையான "ஞானசம்பந்தம்" மாத இதழின் ஆசிரியராகவும் பொறுப்பு வகித்த சுவாமிகள் 27வது குருமகா சன்னிதானமாக மக்களால் போற்றப்பட்டு வருகிறார்கள்.

சுவாமிகளின் ஜனன திருநாளில் இலங்கை வாழ் சைவ மக்கள் மகிழ்ச்சியுடன் ஆசிகள் வேண்டி நிற்கிறோம் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்