ஹரிகரன்
இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி, சீனாவின் ஷி யான் - 6 என்ற ஆய்வுக் கப்பல், கொழும்புத் துறைமுகத்தில் தரித்து, இலங்கை கடல் எல்லைக்குள் ஆய்வுகளையும் நடத்தி விட்டு திரும்பியிருக்கிறது. அண்மைக் காலத்தில் இந்தியாவுக்கு கிடைத்திருக்கின்ற இராஜதந்திர பின்னடைவுகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது.
கடந்த வாரம் இந்தியாவின் ‘தி வயர்’ என்ற ஆங்கில ஊடகத்தில், உலக அரங்கில் இந்தியாவின் நடத்தை அதன் நலன்களுக்கு உதவவில்லை என்ற தலைப்பில் வெளியான ஒரு கட்டுரையில், அண்மைக்காலத்தில் இந்தியா எதிர்கொண்ட பின்னடைவுகள் சில பட்டியலிடப்பட்டிருந்தன.
காஸா வன்முறையை நிறுத்தக் கோரி ஐ.நா பொதுச்சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் மீது இந்தியா வாக்களிக்காமல் தவிர்த்தமை, மாலைதீவின் புதிய ஜனாதிபதி அங்கிருந்து இந்தியப் படையினரை வெளியேற்றுமாறு கேட்டுக்கொண்டமை, எட்டு இந்திய கடற்படையினருக்கு கட்டாரில் மரணதண்டனை விதிக்கப்பட்டமை, சீனாவுடனான எல்லைப் பேச்சுக்களை முடிக்கவுள்ளதாக பூட்டான் அறிவித்திருப்பது, 2024வரை இந்தியர்களுக்கான விசா கட்டுப்பாடுகளை தளர்த்துவதில்லை என கனடா முடிவெடுத்திருப்பது போன்ற பின்னடைவுகளுடன் ஒன்றாக, இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி சீன கப்பல் இலங்கையில் தரித்துச் சென்றதையும் ஒரு பின்னடைவாக குறிப்பிட்டிருக்கிறார் ஆகர் பட்டேல் என்ற பத்தியாளர்.
இந்தியாவின் அயல் நாடுகள், இந்தியாவின் நலன்களை புறக்கணிக்கும் போது, அல்லது அதன் விருப்பத்துக்கு மாறாக செயற்படும் போது, இந்தியாவினால் அவற்றைக் கட்டுப்படுத்த முடியாத நிலையே காணப்படுகிறது.
நேபாளம் மற்றும் பூட்டானில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வருவதும், மாலைதீவில் மாறி வருகின்ற அரசியல் சூழலும், இலங்கை அரசாங்கத்தின் விலாங்குத்தனமான தீர்மானங்களும் இந்தியாவின் நலன்களுக்கு உகந்தவையாக பார்க்கப்படவில்லை.
சீனாவின் ஆய்வுக் கப்பல்கள் இந்தியப் பெருங்கடலில் அதிகளவில் நடமாடுவது இந்தியாவுக்கு அச்சத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அவ்வாறான கப்பல்களுக்கு இலங்கை இடமளிப்பதை புதுடெல்லியினால் சகித்துக் கொள்ள முடியவில்லை. 2013ஆம் ஆண்டு தொடங்கியது இந்த பிரச்சினை. அப்போது இந்தியாவின் எதிர்ப்பை புறக்கணித்து. கொழும்புத் துறைமுகத்தில் சீனாவின் நீர்மூழ்கி கப்பல்கள் தரித்துச் செல்ல அனுமதிக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக 2015 ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக் ஷ தோற்கடிக்கப்படும் நிலை உருவானது.
இதனை சரியாகப் புரிந்து கொண்டு, நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் சீனாவின் நீர்மூழ்கி கப்பல்கள் கொழும்பு வருவதற்கு அனுமதி கோரப்பட்ட போது, அப்போது பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க அதற்கு இணங்கவில்லை.
ஆனால், அவர் ஜனாதிபதியாக வந்த பின்னர், அவ்வாறு செயற்படவுமில்லை, அவ்வாறு செயற்படவும் முடியவில்லை.
இப்போது சீனாவின் செல்வாக்கு அதிகரித்து விட்டது, சீனாவை உதறி விட்டு தனித்து நிற்க முடியாத நிலை இலங்கைக்கு ஏற்பட்டு விட்டது.
சீனாவின் தயவும், உதவியும் அரசாங்கத்துக்குத் தேவைப்படுகிறது.
இவ்வாறான நிலையில் இந்தியாவின் கரிசனைகளையும், கவலைகளையும் முழுமையாக கவனத்தில் கொள்ள முடியாத நிலை ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்துக்கு ஏற்பட்டு விட்டது.
அவர் புதுடெல்லியில் இந்தியாவின் நலன்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்த முடிவையும் தமது அரசாங்கம் எடுக்காது என்று வாக்குறுதி கொடுக்கிறார்.
கொழும்பு திரும்பிய பின்னர், சீனாவின் ஷி யான் 6 கப்பலுக்கு அனுமதி அளிக்கிறார். இந்தக் கப்பல் விவகாரத்தில் இந்தியாவை நம்ப வைத்து அவர் கழுத்தறுத்து விட்டார் என்றே கூறலாம்.
சீன கப்பலுக்கு அனுமதி அளிக்கப்பட்டது எல்லாம் எப்போதோ முடிந்து விட்ட காரியம். ஆனால், கடைசி வரையில், அதாவது ஒக்டோபர் 25ஆம் திகதி காலை வரை- அதுபற்றி அதிகாரபூர்வமாக தகவல் வெளியிடுவதை அரசாங்கம் தவிர்த்துக் கொண்டது.
அன்று காலையில் சீனக் கப்பல் விநியோகத் தேவைகளுக்காக கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடும் என்று வெளிவிவகார அமைச்சு கூறியது.
அடுத்தடுத்த நாட்களில் நாராவுடன் இணைந்து ஆய்வுகளை மேற்கொள்வதற்கான அனுமதிக்காக காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகின.
பின்னர் இரண்டு நாட்கள் மாத்திரம் இலங்கை கடற்பரப்பில், நாராவுடன் இணைந்து ஆய்வுகளை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறியது.
இந்தக் கப்பல்,முன்னர் கூறியபடி, மூன்று நான்கு நாட்கள் இல்லை, ஒரு வாரம் கொழும்பு துறைமுகத்தில் தரித்து நின்றது. 31ஆம் திகதி முதல் இரண்டு நாட்கள் மேற்கு கடலில் ஆய்வுகளை மேற்கொண்டு விட்டு புறப்பட்டுச் சென்றிருக்கிறது.
இதன் மூலம், இலங்கைத் துறைமுகங்களில் சீனாவின் ஆய்வு அல்லது கண்காணிப்புக் கப்பல்களை நிறுத்துவதை தடுப்பதில் இந்தியா தோல்வி கண்டிருக்கிறது.
அடுத்து இலங்கைக் கடற்பரப்பில் ஆய்வுகளை மேற்கொள்வதை தடுப்பதிலும் இந்தியா தோல்வி அடைந்திருக்கிறது.
மாலைதீவில் ஆட்சிக்கு வரும் புதிய ஜனாதிபதி, அங்குள்ள இந்தியப் படையினரை வெளியேற்றுவதில் உறுதியாக இருக்கும் நிலையில், சீனக் கப்பல் தரித்து, ஆய்வுகளை மேற்கொண்டு விட்டுச் சென்றிருப்பது இந்தியாவுக்கு கூடுதல் கவலையை கொடுத்திருக்கிறது.
சீனாவைப் பொறுத்தவரையில் இந்த விவகாரத்தில் சத்தமில்லாமல் சாதித்திருக்கிறது என்று தான் குறிப்பிட வேண்டும்.
ஏனென்றால், இந்தியாவின் எதிர்ப்பை மீறி இலங்கையில் தனது கப்பலை நிறுத்திக் காட்டியிருப்பதுடன், இலங்கை கடற்பரப்பில் ஆய்வுகளை மேற்கொள்வதை முற்றாக தடுக்க முடியாது என்ற செய்தியையும் சீனா எடுத்துக் கூறியிருக்கிறது.
நெருக்கடி காலத்தில் 4 பில்லியன் டொலர்களை கொடுத்து உதவியும் இந்தியாவினால் சீனக் கப்பலின் வருகையை தடுக்க முடியாமல் போனது அதற்குப் பெரும் ஏமாற்றம்.
இந்தியா தனது உத்தியை மாற்றிக் கொள்ள வேண்டும் அல்லது சீனாவை விட அதிகளவில் பொருளாதார ரீதியாக செல்வாக்கை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
யாழ்ப்பாணத்திலும், திருகோணமலையிலும் இந்தியாவின் எஸ்.பி.ஐ. வங்கியை இந்திய வெளிவிவகார அமைச்சர் நிர்மலா சீதாராமன் திறந்து வைத்ததும், கப்பல் சேவைகள், விமான சேவைகளை அதிகரிப்பதும் கூட இந்தியாவின் பொருளாதார செல்வாக்கை உயர்த்தும் நடவடிக்கைகள் தான்.
ஆனாலும், இலங்கையில் பொருளாதார ரீதியான செல்வாக்கை சீனா அதிகரித்து வருகிறது.
ஏற்கெனவே இலங்கையில் எரிபொருள் விற்பனையில் இறங்கிய சீனா, இப்போது எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தையும் அமைக்கவுள்ளது.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் 100 சில்லறை விற்பனை நிலையங்கள் ஏற்கெனவே சினோபெக்கிடம் கையளிக்கப்பட்டிருக்கின்றன. மேலும் புதிதாக 50 விற்பனை நிலையங்களை அமைக்கவும் அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.
நாட்டின் எரிபொருள் சந்தையில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐ.ஓ.சி. ஆகியவற்றை விட குறைந்த விலையில் எரிபொருளை சினோபெக் விற்பனை செய்வது குறித்து சர்ச்சைகளும் நிலவுகின்றன.
இத்தகைய நிலையில் தான் சினோபெக் அம்பாந்தோட்டையில் எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்கவுள்ளது.
இங்கு எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தை அமைப்பதற்கு போட்டியில் இருந்த சிங்கப்பூர் நிறுவனம் விலகிய பின்னர், சீன நிறுவனம் மட்டுமே எஞ்சியிருப்பதால் அதனுடன் அடுத்த சில வாரங்களுக்குள் பேச்சுக்களை நடத்தி உடன்பாடு செய்து கொள்ளப்படும் என்று அமைச்சர் காஞ்சன விஜேசேகர கூறியிருக்கிறார்.
இலங்கையில் சீனா தனக்கென பல அடையாளச் சின்னங்களை வைத்திருக்கிறது. பொருளாதார முதலீடுகளின் மூலம் உருவாக்கப்பட்ட அந்த அடையாளச் சின்னங்களுடன் புதிதாக இந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையமும் சேர்ந்து கொள்ளவுள்ளது.
இவ்வாறான நிலையில் சீனாவை உதறித் தள்ளவோ, உதாசீனம் செய்யவோ முடியாத நிலை இலங்கைக்கு காணப்படுகிறது.
இந்தியாவின் கவலைகளை பொருட்படுத்தாமல் செயற்பட வேண்டிய நிலை இதனால் ஏற்படுகிறது.
அதேவேளை, சீனாவுக்கு வழி விட்டுக் கொடுத்தாலும் இந்தியாவையும் சமாளிக்கும் உத்திகளை அரசாங்கம் பயன்படுத்திக் கொண்டு தான் இருக்கிறது.
ஐந்து ஆண்டுகளாக கைவிடப்பட்ட நிலையில் இருந்த எக்டா எனப்படும் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்பாடு குறித்த பேச்சுக்களை இந்தியாவுடன் மீளத் தொடங்கவுள்ளதாக அரசாங்கம் அறிவித்திருப்பதும் அவ்வாறான ஒரு உத்தி தான்.
நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில், 2016 தொடக்கம் 2018 வரையான காலப்பகுதியில் 11 சுற்றுப் பேச்சுக்கள் நடத்தப்பட்ட பின்னர், இந்த உடன்பாடு குறித்து பேச்சுக்கள் கைவிடப்பட்ட நிலையில் இருந்தன.
இப்போது இந்த பேச்சுக்களை மீளத் தொடங்க ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் பச்சைக்கொடி காண்பித்திருக்கிறது.
அத்துடன், சீன ஆய்வுக் கப்பலுக்கு அனுமதி வழங்கப்பட்டு அது கொழும்பில் தரித்திருந்த காலப்பகுதியில், இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் ஹரிகுமாருக்கும், இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவுக்கும் இடையில் சந்திப்பும் இடம்பெற்றிருக்கிறது.
கோவா கடல்சார் பாதுகாப்பு மாநாடு கடந்த 29ஆம் திகதி தொடக்கம் 31ஆம் திகதி வரை இடம்பெற்ற நிலையில், அதில் பங்கேற்றிருந்த இரண்டு நாடுகளின் கடற்படைத் தளபதிகளும், கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்புகளை வலுப்படுத்துவது குறித்து பேச்சு நடத்தியிருக்கின்றனர்.
இவையெல்லாம் இந்தியாவை சமாளிக்கும் உத்திகளாக இருந்தாலும், சீனா பற்றிய இந்தியாவின் கரிசனைகளை போக்குவதற்கு இவை மட்டும் போதுமானதாக இருக்கும் போலத் தெரியவில்லை.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM