எம்.எஸ்.தீன்
இலங்கையின் இனப் பிரச்சினைக்கு மூவின மக்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய அரசியல் தீர்வாக அதிகாரப் பரவலாக்கலை அமுல்படுத்துவதே சிறந்த வழியாகுமென்று சர்வதேச நாடுகள் பல உட்பட, உள்நாட்டில் பலராலும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
அரசாங்கமும் காலத்திற்கு காலம் அதிகாரப் பரவலாக்கல் குறித்து சிறுபான்மைக் கட்சிகளுடன் குறிப்பாக தமிழ்க் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டது. அப்பேச்சுவார்த்தைகள் ஒரு ஏமாற்று நடவடிக்கையாக இருந்தாலும், அவை, ஆட்சி அதிகாரத்தில் உள்ள அரசாங்கங்கள் அதிகாரப் பரவலாக்கல் மூலம்தான் இனப் பிரச்சினைக்கு தீர்வைக் காணலாமென்பதை ஏற்றுக் கொண்டமைக்கான அடையாளமாகும்.
இனப் பிரச்சினைக்கான தீர்வு குறித்து காலத்திற்கு காலம் ஆட்சியாளர்கள் தமிழ்க் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தாலும், முஸ்லிம் கட்சிகளுக்கு இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு குறித்த அக்கறையுடனான ஈடுபாட்டைக் காண முடியவில்லை.
இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு முஸ்லிம்களுக்கு எவ்வாறு அமைய வேண்டுமென்றதொரு முன்மொழிவுகளைக் கூட முஸ்லிம் கட்சிகள் முன்வைக்கவில்லை. அரசியல் தீர்வு பற்றிய பேச்சுவார்த்தைகளில் ஆட்சியாளர்கள் முஸ்லிம் கட்சிகளை இணைத்துக் கொள்ளாதிருப்பதற்கு இதுவும் ஒரு காரணமாகும்.
அரசியல் தீர்வு குறித்து முஸ்லிம் மக்கள் மத்தியில் கருத்துக்கள் முன் வைக்கப்பட்டாலும் , ஆவண ரீதியாக தமது தீர்வு முன்யோசனையை முஸ்லிம் கட்சிகள் முன் வைக்கவில்லை. தங்களது தீர்வுத் திட்டத்தை ஆட்சியாளர்களிடம் ஒப்படைத்துள்ளோம் என்று ஒரு சில முஸ்லிம் கட்சிகள் தெரிவித்துக் கொண்டிருக்கின்றன. ஆயினும், அவற்றின் உள்ளடக்கத்தை பொது மக்கள் பார்வைக்கு இன்னும் வெளியிடவில்லை.
அரசியல் தீர்வின் ஒரு நடவடிக்கையாக மாகாண சபை முறைமை கொண்டு வரப்பட்டுள்ள போதிலும், மாகாணங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கூட முழுமையாக அமுல்படுத்தவில்லை. மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டிருந்த பல அதிகாரங்களை மீளப் பெற்றுக் கொள்ளும் செயற்பாடுகளே தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
இதனிடையே மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் உள்ளிட்ட அனைத்தையும் அமுல் படுத்துமாறு ஒரு சில தமிழ்க் கட்சிகள் ஆட்சியாளர்களை வலியுறுத்திக் கொண்டிருக்கின்றன. இன்னும் சில தமிழ்க் கட்சிகள் மாகாண சபை முறைமையை ஏற்றுக் கொள்ள முடியாது. அதனை விடவும் கூடிய அதிகாரங்களை தமிழ் மக்களுக்கு வழங்க வேண்டுமென்று கோரிக்கைகளை முன் வைத்துக் கொண்டிருக்கின்றன. அத்தோடு வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைக்க வேண்டுமென்று பெரும்பாலும் எல்லா அரசியல் கட்சிகளும் கோரிக்கைகளை முன் வைத்துக் கொண்டிருக்கின்றன.
இவ்வாறு தமிழ்க் கட்சிகளின் நடவடிக்கைகள் அமைந்துள்ள நிலையில் முஸ்லிம் கட்சிகள் வடக்கும், கிழக்கும் இணைய முடியாது. அதனை ஏற்றுக் கொள்ள முடியாது என்று தெரிவித்துக் கொண்டிருக்கின்றன. வடக்கும், கிழக்கும் இணைவதை முஸ்லிம் மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்ற நாடித்துடிப்புக்கு ஏற்றவாறு கருத்துக்களை தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்களே அல்லாமல் வடக்கும், கிழக்கும் தனித்தனி மாகாணங்களாக இருக்கின்ற இன்றைய நிலையில் அவற்றுக்கான அரசியல் அதிகாரங்கள் எவ்வாறு அமைய வேண்டுமென்று தெரிவிப்பதில்லை.
முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆட்சியாளர்களை திருப்திப்படுத்த வேண்டுமென்பதற்காக மாகாண முறைமை தேவையில்லை.
அதிகாரப் பரவலாக்கல் அவசியமில்லை, மாகாண சபைகளுக்கு பொலிஸ், காணி அதிகாரங்களை வழங்குவது பிரச்சினைக்குரியது என்றெல்லாம் கூறிக் கொண்டிருக்கின்றார்கள். இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு ஒரு போதும் நடக்காது என்ற நிலைப்பாட்டையும் கொண்டுள்ளார்கள்.
அரசியலில் எதுவும் நடக்காது என்று தாமே முடிவுகளை எடுப்பது முட்டாள்களின் அரசியல் பாதையாகவே இருக்கும். ஆட்சியாளர்கள் அரசியல் தீர்வு அவசியமென்று உணர்ந்துள்ளார்கள். அதனை அமுல்படுத்துவதற்கு முன் வராது இருப்பதற்கு பிரதான காரணம், அது சிங்கள மக்களின் வாக்குகளில் பாரிய வீழ்ச்சியை ஏற்படுத்தும் என்பதாலும், சிங்கள மக்கள் சார்பான இனவாதப் போக்கை பின்பற்றினால்தான் ஆட்சியை பிடித்துக் கொள்ளலாமென்ற எண்ணத்தினாலுமே ஆகும். இதனாலேயே அரசியல் தீர்வு விடயத்தில் ஏமாற்று நாடகத்தை ஆடிக் கொண்டிருக்கின்றார்கள்.
பௌத்த மேலாதிக்கவாதத்தை முதலீடு செய்து ஆட்சியை பிடித்தவர்களின் முகமூடிகளுக்குப் பின்னால் உள்ள நிஜத்தை சிங்கள மக்கள் மிகத் தெளிவாகப் புரிந்ததன் மறுபக்கம்தான் அதிகாரங்களை இழந்தமைக்கு காரணமாகும்.
ஆகவே, கடந்த காலங்களில் சிங்கள மக்களின் சிந்தனைக்கும், தற்போதைய சிந்தனைக்குமிடையே பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இன்றைய பாராளுமன்றத்தில் உள்ள உறுப்பினர்கள் அனைவரையும் நிராகரிக்கும் மனோநிலையை பெரும்பான்மையான சிங்கள மக்கள் பெற்றுள்ளார்கள்.
ஆகவே, அரசியலில் எதுவும் நடக்கும் என்ற நிலைப்பாட்டில் செயற்பட வேண்டும். அதுவே புத்திசாதுரியமான அரசியலாகும். மாற்றங்கள் நடைபெறும் போது அதில் முஸ்லிம் சமூகத்தின் வகிபாகம் எப்படி இருக்க வேண்டுமென்ற முன் ஆயத்தம் அவசியமாகும். எதுவும் நடக்காது என்று கொட்டாவி விட்டுக் கொண்டிருக்க முடியாது. அவ்வாறு இருக்கும் போது அரசியல் தீர்வும் வருமாயின் முஸ்லிம்கள் எந்த அரசியல் அதிகாரங்களும் இல்லாதவர்களாக வாழ வேண்டியேற்படும். அந்நிலை நீண்ட காலத்தின் பின்னர் முஸ்லிம்களின் பாதுகாப்பு, இருப்பு என்பவற்றிக்கு பாதக நிலையை தோற்றுவிக்கும்.
அரசியல் தீர்வு விடயத்தில் முஸ்லிம் கட்சிகளிடையே நிலையான நிலைப்பாடும், ஆவணப்படுத்தலும் இல்லாதிருக்கின்ற அதே வேளையில், முஸ்லிம் கட்சிகள் சமூகத்தின் எதிர்காலத்திற்காக ஒற்றுமைப்பட்டு, இனப் பிரச்சினைக்கான தீர்வு, காணிப் பிரச்சினை, மீள்குடியேற்றம், உள்ளிட்ட அனைத்து விவகாரங்களிலும் பிரிந்தே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன.
முஸ்லிம் கட்சிகளையும், முஸ்லிம் அரசியல்வாதிகளையும் ஒன்றிணைத்து முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பில் தீர்க்கமான முடிவுகளை எடுப்பதற்கு அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமா சபையோ, மாவட்ட ரீதியில் உள்ள பள்ளிவாசல்கள் மற்றும் நிறுவனங்களின் சம்மேளனமோ வேறு சமூக அமைப்புக்களோ நடவடிக்கைகளை எடுக்கவில்லை. முஸ்லிம் கட்சிகள் சமூகத்தின் எதிர்காலத்திற்குரிய நடவடிக்கைகளை எடுக்காது திசைமாறிய பறவைகள் போன்று இருப்பதை இனியும் ஏற்றுக் கொள்ள முடியாது.
முஸ்லிம்களிடையே பல அரசியல் கட்சிகள் உள்ளன. தேசிய கட்சிகள் உட்பட எல்லா அரசியல் கட்சிகளிலும் முஸ்லிம்கள் சார்பில் அரசியல்வாதிகள் உள்ளனர்.
ஒவ்வொரு பாராளுமன்றத்திலும் முஸ்லிம்கள் சார்பில் 20 இற்கும் குறையாத பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்து வருகின்றார்கள். எல்லா ஆட்சிக் காலத்திலும் முஸ்லிம் அமைச்சர்கள் உள்ளார்கள்.
இன்று வெளிவிவகார அமைச்சராக அலி சப்ரி இருப்பதைப் போன்று மிக முக்கிய அமைச்சர் பதவிகளையும் முஸ்லிம்கள் வகித்துள்ளார்கள். இத்தனை இருந்தும் முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் முன் வைக்கப்படவில்லை. ஆட்சியாளர்கள் முஸ்லிம்களின் பிரச்சினைகளை கலந்துரையாடுவதற்கு கூட முழு மனதைக் கொண்டிருக்கவில்லை. முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர் உள்ளிட்டவர்கள் பதவிகளின் பின்னால் வாய் பிளந்து நின்று கொண்டிருப்பதனால் முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்கும் எண்ணத்தை கைவிட்டுள்ளார்கள். இதனால்தான் அரசியல் தீர்வு விடயத்திலும் மௌனமாக தொடர்ந்தும் உள்ளனர்.
முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆட்சியாளர்களுடன் கலந்துரையாடி தேவைப்பட்டால் முட்டி மோதியாவது சமூகத்தின் எதிர்காலம் சிறப்பாக இருப்பதற்குரிய செயற்திட்டங்களை வகுக்காதுள்ளார்கள். முஸ்லிம் சமூகத்தின் பீடைகளாக முஸ்லிம் அரசியல்வாதிகளே உள்ளார்கள்.
இந்த நோயாளிகளிடம் முஸ்லிம் சமூகம் தமது எதிர்காலத்தை ஒப்படைத்துள்ளதால் முழு சமூகமும் நோயாளிகளாகிக் கொண்டிருக்கின்றது. தமது அரசியல் கட்சி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் பிற்போக்கு செயற்பாடுகள் குறித்து கேள்வி கேட்காத தனிநபர்களைக் கொண்டதொரு சமூகமாக முஸ்லிம்கள் உள்ளார்கள். அரசியல்வாதிகளின் எல்லா நடவடிக்கைகளையும் அங்கீகரித்துக் கொண்டிருப்பது அடிமை வாழ்வுக்கு சமமாகும். சமூகம் கேள்வி கேட்காத காரணத்தினால்தான் முஸ்லிம் அரசியல்வாதிகள் தாங்கள் நினைத்த மாதிரி நடந்து கொண்டிருக்கின்றனர்.
ஆகவே, முஸ்லிம் கட்சிகள், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடுகளை வெறும் பார்வையாளராக இருந்து பார்ப்பதில் இருந்து முஸ்லிம்கள் விடுபட வேண்டும்.
அரசியல் தீர்வு முதல் முஸ்லிம்களின் ஏனைய பிரச்சினைகளுக்கான தீர்வுகளில் முஸ்லிம் கட்சிகளும், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் எவ்வாறு நடந்து கொண்டிருக்கின்றார்கள் என்பது வெளிப்படையானதாகும். ஆகவே, முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும், அமைப்புகளும் உண்மையாக சமூகத்திற்காக செயற்பட வேண்டும். ஆட்சியாளர்களையும், அமைச்சர்களையும் வாழ்த்துவதற்கு மாத்திரமே முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும், அமைப்புகளும் பெரும ்பாலும் செயற்பட்டுக் கொண்டி ருக்கின்றன.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM