என்.கண்ணன்
இலங்கை இராணுவத்துக்குப் பயிற்சி அளிப்பதற்கு மேலதிகமாக 23 மில்லியன் இலங்கை ரூபாவை கூடுதலாகச் செலவிடவுள்ளதாக இந்தியா அறிவித்திருக்கிறது.
இது இந்திய ரூபா மதிப்பில், 58 இலட்சத்து 75 ஆயிரத்து 900 ரூபாவாகும்.
மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்க தலைமையிலான, இலங்கை இராணுவ உயர் அதிகாரிகள் குழுவொன்று, கடந்த 27ஆம் திகதி இலங்கைக்கான இந்திய பதில் தூதுவர், சத்யனஜால் பாண்டேயை சந்தித்திருந்தது.
‘மித்ர சக்தி’ என்ற பெயரில் இந்திய– - இலங்கை இராணுவங்கள் ஆண்டு தோறும் நடத்தும் கூட்டுப் பயிற்சி மற்றும் எதிர்கால பயிற்சித் திட்டங்கள் குறித்து கலந்துரையாடிய போதே, இலங்கை இராணுவத்தினருக்கான பயிற்சிகளுக்கு மேலதிகமாக 23 இலட்சம் ரூபாவை வழங்குவது குறித்து அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிதி ஒதுக்கீடு பற்றி இந்தியத் தூதரகம் தனது ‘எக்ஸ்’ (டுவிட்டர்) பக்கத்தில் பதிவிட்டுள்ள போதும், மேலதிகமான எந்த தகவலையும், இந்தியத் தூதரகம் வெளியிடவில்லை.
இந்த நிதி ஒதுக்கீடு, இலங்கை-– இந்திய கூட்டுப் பயிற்சிக்கானதா? அல்லது இந்தியாவில் பயிற்சி அளிக்கப்படும் இலங்கைப் படையினருக்கானதா? ஒவ்வொரு ஆண்டும் இந்த மேலதிக நிதி ஒதுக்கீடு வழங்கப்படுமா? அல்லது ஒரே முறையில் இந்த ஒதுக்கீடு இடம்பெற்றுள்ளதா என்ற எந்த விபரங்களும் வெளியிடப்படவில்லை.
இலங்கையில் போர் முடிவுக்கு வந்த பின்னர், இந்திய – இலங்கை இராணுவங்கள் இணைந்து, மித்ரசக்தி என்ற பெயரில், 12 நாட்கள் கூட்டுப் பயிற்சிகளை ஆண்டு தோறும் நடத்தி வருகின்றன.
இரு தரப்பிலும் தலா 120 இராணுவத்தினர் பங்கேற்கும் இந்த ஆண்டுக்கான கூட்டுப் பயிற்சி கடந்த ஏப்ரல் மாதம் இடம்பெற்றது.
இது 10 ஆவது கூட்டுப் பயிற்சியாகும். 11ஆவது கூட்டுப் பயிற்சி இந்தியாவில் அடுத்த ஆண்டு நடத்தப்பட வேண்டும்.
அதற்கான நிதி ஒதுக்கீட்டைத் தான் இந்தியா அதிகரித்திருக்கிறதா அல்லது, ஆண்டு தோறும் இந்தியா அளித்து வரும் பயிற்சிக்கான ஒதுக்கீட்டை அதிகரித்திருக்கிறதா என்ற கேள்வி இருக்கிறது.
இலங்கை இராணுவத்துக்கு அதிகளவில் பயிற்சிகளை அளித்து வருகின்ற நாடு இந்தியா தான்.
முன்னர், 800 வரையான படையினரும் அதிகாரிகளும் இந்தியாவில் ஆண்டுதோறும் பயிற்சிகளைப் பெற்றனர்.தற்போது இந்த எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.
கோட்டாபய ராஜபக் ஷ ஜனாதிபதியாக இருந்த போது, 2021 ஒக்டோபர் மாதம் இந்திய இராணுவத் தளபதியாக இருந்த ஜெனரல் நரவானே, கொழும்புக்கு பயணம் மேற்கொண்டிருந்தார்.
அப்போது, இராணுவத் தளபதியாக இருந்த ஜெனரல் சவேந்திர சில்வா, இந்தியா 1,000 வரையான இலங்கைப் படையினருக்கு பயிற்சிகளை அளித்து வருவதாகவும், இப்பயிற்சி வாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
அதன் பின்னர், கோட்டாபய ராஜபக் ஷவைச் சந்தித்த ஜெனரல் நரவானே, இலங்கைப் படை அதிகாரிகள் 50 பேருக்கு விசேடமாக வடிவமைக்கப்பட்ட பயிற்சி நெறி ஒன்றை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்திருந்தார்.
அதேவேளை, கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் இந்தியாவில் பயிற்சி பெற்ற இலங்கை படை அதிகாரிகளின் ஒன்றுகூடல் நிகழ்வில் உரையாற்றிய இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே, ஆண்டுதோறும் 1500 இலங்கைப் படையினருக்கு இந்தியா பயிற்சி அளிக்கும் என்று கூறியிருந்தார்.
எனவே, மேலதிக படையினரை பயிற்றுவிப்பதற்காகவே இந்த 23 மில்லியன் ரூபாவை ஒதுக்க இந்தியா முன்வந்திருக்கிறதா என்ற கேள்வியும் உள்ளது.
சவாலான நேரங்களிலும் இலங்கைப் படையினருக்கு இந்தியா பயிற்சிகளை வழங்கியது என்ற கருத்தையும் அப்போது இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே வெளியிட்டிருந்தார்.
அயல்நாட்டுக்கு முன்னுரிமை என்ற கொள்கையின் அடிப்படையிலேயே இந்தியா இந்தப் பயிற்சிகளை அளித்து வருவதாக குறிப்பிட்டாலும், இந்தியா தனது நலன்கள் மற்றும், பிராந்திய பாதுகாப்பு நலன்களின் அடிப்படையிலேயே இந்த பயிற்சிகளை வழங்குகிறது.
இந்தியத் தூதுவர் ‘சவாலான நேரங்கள்’ என்று குறிப்பிட்டது எதனை என்ற தெளிவு இல்லாது போனாலும், சவாலான காலப்பகுதிகள் பல இருந்தன என்பதை மறுக்க முடியாது.
இலங்கைப் படையினருக்கு பல தசாப்தங்களாக இந்தியாவில் பயிற்சி அளிக்கப்படுகின்ற போதும், 1980களின் நடுப்பகுதி- இந்தியாவுக்கு சவாலான காலப்பகுதிகளில் முக்கியமானது.
அந்தக் காலகட்டத்தில் இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு தமிழகம் உள்ளிட்ட பல இடங்களில், பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
அதே நேரத்தில், இந்திய இராணுவ அதிகாரிகளின் மூலம், விடுதலைப் புலிகள் உள்ளிட்ட தமிழ் போராளிக் குழுக்களுக்கும் பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
இந்திரா காந்தி பிரதமராக இருந்த காலப்பகுதி அது. அப்போது தான், இந்தியா தமிழ் போராளிக் குழுக்களுக்கு பயிற்சிகளை அளிக்கத் தொடங்கியது.
முதலில் அந்தப் பயிற்சித் திட்டத்தில் விடுதலைப் புலிகள் உள்வாங்கப்படவில்லை. திருநெல்வேலியில் கண்ணிவெடி மற்றும் கரந்தடிப் பாணியிலான தாக்குதலை நடத்தி 13 இராணுவத்தினரைக் கொன்று- பிராந்தியத்திலேயே அதிர்ச்சி அலைகளைப் பரவச் செய்திருந்த போதும், விடுதலைப் புலிகளுக்கு பயிற்சியளிக்க இந்தியா முதலில் இணங்கவில்லை.
‘றோ’ எனப்படும் இந்தியப் புலனாய்வு அமைப்பு, பரிந்துரைத்தால் தான், இந்திய இராணுவப் பயிற்சித் திட்டத்துக்குள் உள்வாங்கப்படக் கூடிய நிலை காணப்பட்டது.
‘றோ’ தான் விடுதலைப் புலிகள் உள்ளிட்ட தமிழ் இயக்கங்களுக்கு பயிற்சி அளித்தது என்ற கருத்து இப்போதும் பரவலாக காணப்படுகிறது.
புலனாய்வு அமைப்புகள் அவ்வாறு இரட்டைத்தன்மையுடன் நடந்து கொள்வது வழக்கம்.
இஸ்ரேலின் மொசாட் புலனாய்வுப் பிரிவும் கூட இவ்வாறு இலங்கைப் படையினருக்கும், தமிழ்ப் போராளிக் குழுவினருக்கும் ஒரே நேரத்தில் பயிற்சிகளை வழங்கியதாக முன்னர் தகவல்கள் வெளியாகின.
ஆனால், இந்தியாவில் தமிழ் இயக்கங்களுக்கு பயிற்சி அளிப்பது றோவின் திட்டம் அல்ல. அதனைச் செயற்படுத்தியதும் றோ அல்ல.
இந்திய அரசாங்கம் அதனை இப்போது ஒப்புக் கொள்ள மறுத்தாலும், இந்திரா காந்தி அரசாங்கம் தான் இந்திய இராணுவத்தின் மூலம் பயிற்சிகளை வழங்கியது.
ஜே.ஆர்.ஜயவர்தன அரசாங்கம் கடும் இராணுவப் போக்கில் இருந்த அந்தக் காலப்பகுதியில், தமிழ் இயக்கங்களுக்குப் பயிற்சிகளை அளித்து அரச படைகளுக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம் ஒரு சமாதான தீர்வுக்கு இறங்கி வரச் செய்வதற்காகவே ஆயுதப் பயிற்சிகள் வழங்கப்பட்டதாக விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் தனது ‘போரும் சமாதானமும் ’ என்ற நூலில் எழுதியிருந்தார்.
இலங்கைத் தீவின் இறைமை மற்றும் பிரதேச ஒருமைப்பாட்டுக்கு பாதிப்பு வராத வகையில், ஒன்றுபட்ட இலங்கைக்குள் நியாயமான அரசியல் தீர்வை பெற்றுக் கொடுப்பது தான் இந்திரா காந்தியின் தந்திரோபாயம் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
முதலில் றோவுடன் நல்லுறவை பேணத் தவறியதால் இழக்கப்பட்ட இந்த பயிற்சி வாய்ப்பு, 1983 நவம்பரில், விடுதலைப் புலிகளுக்கும் கிடைத்தது.
உத்தரப் பிரதேசத்தில் புலிகளின் முதலாவது அணிக்கு இந்திய இராணுவமே பயிற்சி அளித்தது.
வரைபடங்களை உருவாக்குதல், கண்ணிவெடிகள் மற்றும் வெடிபொருட்களை கையாளுதல், தாங்கி எதிர்ப்பு மற்றும் விமான எதிர்ப்பு ஆயுதங்களை கையாளுதல் போன்ற பயிற்சிகளும் அப்போது, இந்திய இராணுவத்தினால் விடுதலைப் புலிகள் உள்ளிட்ட தமிழ் இயக்கங்களுக்கு வழங்கப்பட்டன.
அதே நேரத்தில் இலங்கைப் படையினருக்கு கெரில்லா எதிர்ப்பு மற்றும் முறியடிப்பு பயிற்சிகளையும், காட்டுப் போர்முறை தொடர்பான பயிற்சிகளையும் இந்தியா வழங்கிக் கொண்டிருந்தது.
ஒரு பக்கத்தில் எப்படி அடிப்பது என்று இந்தியா கற்றுக் கொடுத்துக் கொண்டே இன்னொரு பக்கத்தில் எப்படி அதனை முறியடிப்பது என்றும் பயிற்றுவித்துக் கொண்டிருந்தது.
இந்த காலகட்டம் இந்தியாவுக்கு சவாலானது. ஏனென்றால் இரண்டு தரப்புகளினதும் நம்பிக்கையை இந்தியா பெற வேண்டியிருந்தது.
அதுபோல, இலங்கையில் இந்தியப் படையினர் நிலைகொண்டிருந்த போது, பிரேமதாச அரசாங்கம் அவர்களை நாட்டை விட்டு வெளியேறுமாறு கோரியது.
இந்தியா வந்த நோக்கத்தை நிறைவு செய்யாமல் வெளியேற மறுத்தது. அப்போது இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் இராஜதந்திர முறுகல் தோன்றியது.
இரண்டு நாட்டு இராணுவங்களும் மோதுகின்ற நிலை தோன்றக் கூடிய சூழலும் காணப்பட்டது. அப்போதும் இலங்கைப் படையினருக்கு இந்தியா பயிற்சி அளித்துக் கொண்டிருந்தது.
பின்னர், விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் நடந்து கொண்டிருந்த போதும் இலங்கைப் படையினருக்குப் பயிற்சிகளை வழங்கியது இந்தியா.
ஆரம்பத்தில் அதற்கு எதிர்ப்புகள் இல்லாத போதும், 2009இற்குப் பின்னர் குறிப்பாக ஜெயலலிதா தமிழக முதல்வராக வந்த பின்னர் இலங்கைப் படையினருக்கு இந்திய மண்ணில் பயிற்சி அளிக்கப்படுவதை கடுமையாக எதிர்த்தார்.
தமிழக மண்ணில் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்த இலங்கைப் படையினர் அதனால் வெளியேறுகின்ற நிலையும் ஏற்பட்டது.
இதுவும் இந்தியாவுக்கு சலாலான காலகட்டம் தான்.
இலங்கைப் படையினருக்கு தொடர்ச்சியாகப் பயிற்சிகளை அளிப்பதன் மூலம், பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளிடம் அதிக பயிற்சி வாய்ப்புகளை பெற்றுக் கொள்வதை தடுக்க இந்தியா முனைகிறது.
அதற்காக கூடுதல் வாய்ப்புகளை இலங்கைக்கு வழங்குகிறது. எவ்வாறாயினும் விடுதலைப் புலிகளின் காலத்தில், எதிர்கொண்டது போன்ற சவாலான தருணத்தை இந்தியா இப்போது எதிர்கொள்ளவில்லை.
அதனால் பயிற்சி வாய்ப்புகளை அதிகரிப்பது குறித்தோ நிதி ஒதுக்கீட்டை அதிகரிப்பது குறித்தோ யாரும் கவலைப்படவுமில்லை. எதிர்ப்பை வெளியிடவுமில்லை.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM