இலங்கை - காஸா விவகார ஒப்பீடு : இனப்படுகொலை குற்றச்சாட்டை ஏற்கிறாரா ஜனாதிபதி? - அரசியல்வாதிகள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், புத்திஜீவிகள் கேள்வி

Published By: Vishnu

05 Nov, 2023 | 03:25 PM
image

 'மேற்குலகை விமர்சிக்க முன்னர் உள்நாட்டில் உங்கள் மாறுபட்ட நிலைப்பாடு பற்றி விளக்கமளியுங்கள்'

(நா.தனுஜா)

லங்கை மற்றும் காஸா விவகாரத்தில் ஒத்த தன்மைகள் காணப்படுவதாக கூறுவதன் மூலம் இலங்கையில் இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் இடம்பெற்றமையையும், சர்வதேச சட்டங்கள் மீறப்பட்டமையையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஏற்றுக்கொள்கின்றாரா என தமிழ் அரசியல்வாதிகள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் புத்திஜீவிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அது மாத்திரமன்றி, இவ்விரு விவகாரங்களிலும் மேற்குலக நாடுகள் பின்பற்றும் இரட்டை நிலைப்பாடு தொடர்பில் குற்றஞ்சாட்டுவதற்கு முன்பாக, இலங்கைக்குள் வெவ்வேறு சமூகங்களுக்கு இடையில் அரசாங்கம் பின்பற்றும் மாறுபட்ட நிலைப்பாடுகள் குறித்து விளக்கமளிக்குமாறும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

வெலிமடை புதிய நீதிமன்ற கட்டடத் தொகுதியைத் திறந்துவைத்து உரையாற்றிய ஜனாதிபதி ரணில், 'ஒரே விதமான கரிசனைகள் பதிவாகியிருக்கும் இலங்கை மற்றும் காஸா ஆகிய நாடுகளை அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் இரு வேறு விதமாக கையாள்வது ஏன்?' எனக் கேள்வி எழுப்பியிருப்பதுடன், இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ள விடயங்கள் காஸாவிலும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

அதுமாத்திரமன்றி 'காஸாவில் போர்நிறுத்தத்தை வலியுறுத்தி ஐ.நாவில் தீர்மானமொன்று கொண்டுவரப்பட்டபோது நாம் அனைவரும் அதற்கு ஆதரவாக வாக்களித்தோம். ஆனால் இலங்கை தொடர்பில் தீர்மானத்தைக் கொண்டுவருவதில் முனைப்புடன் செயற்பட்ட அமெரிக்கா உள்ளிட்ட மேலும் சில நாடுகள் அத்தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தனர். அவர்கள் ஏன் இவ்வாறு செயற்படுகின்றனர் என்ற கேள்வி எழுகின்றது' எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஜனாதிபதியின் மேற்குறிப்பிட்ட உரை அடங்கிய காணொளியை மேற்கோள்காட்டி, தமது உத்தியோகபூர்வ 'எக்ஸ்' தளத்தில் (டுவிட்டர்) செய்திருக்கும் பதிவுகளிலேயே தமிழ் அரசியல்வாதிகள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் புத்திஜீவிகள் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பியுள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்

இதுகுறித்து பதிவிட்டுள்ள இலங்கை தமிழரசு கட்சியின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், 'நாம் இது குறித்து கலந்துரையாடினாலும் இலங்கையின் உள்நாட்டுச் சட்டங்கள் ஒவ்வொரு சமூகத்தினருக்கும் வெவ்வேறு விதமாகவே நடைமுறைப்படுத்தப்படுகிறது' என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

மயிலத்தமடு, மாதவனை பண்ணையாளர்கள் விவகாரம், குருந்தூர் மலை மற்றும் தையிட்டி விவகாரம், உயர் பாதுகாப்பு வலயங்கள் தொடர்பான பிரகடனம், பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் சிவில், அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமயவாயச் சட்டம் ஆகியவற்றின் பிரயோகம் என்பன அதற்கு உதாரணமாக அமைந்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

அதேபோன்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், 'ஏனைய கேள்விகளைக் கேட்பதற்கு முன்பதாக, தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமைக்கான கோரிக்கையையும், பலஸ்தீனர்களின் சுயநிர்ணய உரிமைக்கான கோரிக்கையையும் அணுகுவதில் இலங்கை கொண்டிருக்கும் இரட்டை நிலைப்பாடு குறித்து ஜனாதிபதியான உங்களால் விளக்கமளிக்க முடியுமா?' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன்

'இதுபற்றி விளக்கம் அவசியமில்லை. இதுவே மேற்குலகத்தின் நிலைப்பாடு. உக்ரேனில் தவறாக இருக்கக்கூடிய விடயம், காஸாவில் சரியாக இருக்கும். ஆனால் மேற்குலகை விமர்சிப்பதற்கு முன்னதாக இலங்கையின் சட்டத்தைப் பாருங்கள். பலஸ்தீனர்களுக்கு சரியாக இருப்பது தமிழர்களுக்குப் பிழையாக இருக்கின்றது.

இது அமெரிக்காவையும், மேற்குலகையும், இந்தியாவையும் பார்ப்பதை நிறுத்தவேண்டிய தருணமாகும். மாறாக 'சிங்கள பௌத்த அரசை விடுத்து, அனைவரையும் உள்ளடக்கிய இலங்கையர்களுக்கான அரசை கட்டியெழுப்புவோம்' என்று அனைத்து பிரஜைகளுக்கும் கூறுகின்ற தலைவராக இருங்கள். அதன் மூலம் ஜெனிவா செல்வதை உங்களால் நிறுத்தமுடியும்' என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசிய பிராந்திய பிரதி பணிப்பாளர் மீனாக்ஷி கங்குலி

அதேவேளை மேற்குலகின் இரட்டை நிலைப்பாடு குறித்து கேள்வி எழுப்புவதன் மூலம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இலங்கையில் போர்க்குற்றங்களும், மிக மோசமான மீறல்களும் இடம்பெற்றன என்பதை ஏற்றுக்கொள்கின்றார் என சுட்டிக்காட்டியுள்ள மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசிய பிராந்திய பிரதி பணிப்பாளர் மீனாக்ஷி கங்குலி, 'ரணில் விக்ரமசிங்க அரசாங்கம் நீதியையும், இழப்பீட்டையும் உறுதிப்படுத்தும் வகையில் ஐ.நா மனித உரிமைகள் பேரவை தீர்மானத்துக்கு அமைவாக செயற்படுவதுடன் பொறுப்புக்கூறல் மற்றும் மீள்நிகழாமை தொடர்பான தராதரங்களை நிறுவவேண்டும்' என்று வலியுறுத்தியுள்ளார்.

நிலைமாறுகால நீதி தொடர்பான சர்வதேச நிபுணர் எடுவர்டோ கொன்ஸாலேஸ் குவேவா

ஜனாதிபதியின் உரை தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள நிலைமாறுகால நீதி தொடர்பான சர்வதேச நிபுணர் எடுவர்டோ கொன்ஸாலேஸ் குவேவா, 'இஸ்ரேலின் போர்க்குற்றங்களுக்கு உடந்தையாக அமெரிக்கா செயற்படுவதானது மனித உரிமைகளை மீறும் ஏனைய நாடுகள் இதேபோன்ற கேள்வியை எழுப்புவதற்கு வழிகோலும்' என சுட்டிக்காட்டியுள்ளார்.

சிவில் சமூக செயற்பாட்டாளரான பிரியங்க ஹெட்டியாராச்சி

'தற்போது காஸாவில் வசிக்கும் மக்களை இஸ்ரேல் கையாளும் விதத்துக்கும், கடந்த 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் இருந்த மக்களை இலங்கை கையாண்ட விதத்துக்கும் இடையில் ஒத்த தன்மைகள் காணப்படுவதாக ஜனாதிபதி கூறுவாராயின், இலங்கையில் சர்வதேச சட்டங்கள் மீறப்பட்டன என்றும், போர்க்குற்றங்கள் இடம்பெற்றன என்றும் அவர் ஏற்றுக்கொள்வதாகக் கருதலாமா?' என சிவில் சமூக செயற்பாட்டாளரான பிரியங்க ஹெட்டியாராச்சி அவரது எக்ஸ் தளப்பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார்.

மனித உரிமைகள் செயற்பாட்டாளர் ஃப்ரெட் கார்வெர்

வொஷிங்டனை தளமாகக் கொண்டியங்கும் 'மனிதாபிமானத்துக்கான உத்தி' எனும் அமைப்பின் பணிப்பாளரும், மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான ஃப்ரெட் கார்வெர், இலங்கையை ரோம் பிரகடனத்தில் கையெழுத்திடுமாறும், அதன் மூலம் இவ்விரு விவகாரங்களையும் (இலங்கை மற்றும் காஸா) சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினால் விசாரணைக்கு உட்படுத்த முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன்

இதுபற்றி பதிவிட்டுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன், இங்கு இலங்கை மற்றும் காஸா தொடர்பில் அமெரிக்கா இரு வேறு விதமாக சட்டங்களை பிரயோகிக்கின்றதா என்ற கேள்விக்கு அப்பால், குறித்த நாடுகளால் சர்வதேச சட்டங்கள் மீறப்படுகின்றனவா என்பதையே கருத்திற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

அதன்படி, இலங்கையிலும் காஸாவிலும் சர்வதேச சட்டங்கள் மீறப்பட்டிருப்பதாகவே ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அந்தோனியோ குட்டரெஸும், ஐ.நா விசேட அறிக்கையாளர்களும், ஏனைய சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கூறுகின்றனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் : வீதியில்...

2024-06-19 03:27:32
news-image

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தமிழ்த்...

2024-06-19 02:29:31
news-image

அதிக வருமானம் ஈட்டுவோருக்கே வாடகை வரி ...

2024-06-19 02:26:15
news-image

தெரிவுக்குழு அமைப்பதில் உடன்பாடு இல்லை; எதிர்க்கட்சித்...

2024-06-19 02:18:38
news-image

கடல் நீரில் மூழ்கிய இளைஞன்; ஆபத்தான...

2024-06-19 02:13:43
news-image

வரிப் பணத்தை முறையாக அறவிட்டால் புதிய...

2024-06-18 15:21:30
news-image

ஒரு நாள் இரவு காட்டில் வாழ்ந்த...

2024-06-19 01:28:05
news-image

உயர் நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றுத்துறை விமர்சிப்பது...

2024-06-18 15:08:11
news-image

களுபோவில வைத்தியசாலையின் சிற்றுண்டிச்சாலையில் மனித பாவனைக்குதவாத...

2024-06-18 21:41:13
news-image

இலங்கை வரவுள்ள சீன இராணுவ மருத்துவக்...

2024-06-18 14:47:35
news-image

கோட்டாவின் பாவத்தை ரணில் தூய்மைப்படுத்துகிறார் -...

2024-06-18 17:27:30
news-image

பௌத்த மதத்தின் இருப்புக்கு தீங்கு விளைவிக்கும்...

2024-06-18 20:03:37