18 வீத வட் வரி அதிகரிப்பும் அரசாங்க வருமான நிலையும்

03 Nov, 2023 | 12:05 PM
image

ரொபட் அன்டனி

பெறுமதிசேர் வரியை அதாவது வட் வரியை 2024 ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் 18 சதவீதமாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதாவது 15 வீதமாக காணப்பட்ட வட் வரியை 18 வீதமாக அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்திருக்கின்றது. அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் இருந்து இந்த தீர்மானம் அமுலாக இருக்கின்றது. அடுத்த வருடத்துக்கான வரவு செலவுத் திட்டத்தில் இதற்கான யோசனை முன்வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

கடந்த 2019ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரத்துக்கு வந்ததும் 15 வீதமாக காணப்பட்ட வட் வரி வீதத்தை 8 வீதமாக குறைத்தார். அதன் பின்னர் 2022ஆம் ஆண்டு ஏற்பட்ட நெருக்கடியின் பின்னர், வட் வரி வீதம் 15 வீதமாக உயர்த்தப்பட்டது. இந்த நிலையிலேயே தற்போது வட் வரி வீதம் 18  வீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

அரசின் அறிவிப்பு

"2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2023ஆம் ஆண்டில் முதல் 9 மாதங்களில் அரச வரி வருமானம் 51 வீதத்தால் அதிகரித்துள்ளது. எவ்வாறிருப்பினும் சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பாடு எட்டப்பட்ட வரி திரட்டுக்கான இலக்கு இன்னும் பூர்த்தி செய்யப்படவில்லை. அதற்கமைய, சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பாடு எட்டப்பட்ட வகையில் வரி வருமானம் மற்றும் ஆரம்ப மீதி இலக்குகளை பூர்த்தி செய்வதற்கு இயலுமாகும் வகையில் தற்போது நடைமுறையிலுள்ள சேர் பெறுமதி வரி வீதத்தை 2024.01.01 தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் 18 சதவீதமாக அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது’’ என்று அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்த்தன அறிவித்துள்ளார்.

வட் வரி என்றால் என்ன?

வட் வரி வீதம் என்றால் என்ன? அது எவ்வாறு அறவிடப்படுகிறது? அதன் தன்மை என்ன என்பது தொடர்பாக இங்கே பார்த்துவிடவேண்டியுள்ளது.

வட் வரி என்பது மக்களிடமிருந்து அரசாங்கம் மறைமுகமாக அறவிடுகின்ற வரி முறையாகும். நேரடி வரி மற்றும் மறைமுக வரி என இரண்டு வகைகள் காணப்படுகின்றன. நேரடி வரி என்பது மக்களின் வருமானத்தில் இருந்து நேரடியாக அரசாங்கத்துக்கு செலுத்துகின்ற வரியை குறிக்கின்றது.

அதாவது ஒருவர் தான் பெரும் சம்பளத்தில் அரசாங்கம் நிர்ணக்கின்ற வரி செலுத்தப்பட வேண்டும். அது நேரடி வரி என்று கூறப்படுகிறது. ஆனால் மக்களிடமிருந்து நேரடியாக இல்லாமல் மறைமுகமாக பல்வேறு வழிகளில் அறவிடப்படுகின்ற வரியே வட் வரி என்று குறிக்கப்படுகிறது.

இலங்கையில் இந்த வரியானது தற்போது 15 வீதமாக காணப்படுகிறது. அதனை 18 வீதமாக உயர்த்துவதற்கே தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த புதிய அதிகரிப்பானது அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து அமுலாகும். இதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருக்கின்றது.

முக்கியத்துவமிக்க அரச வருமானம்

பொதுவாக நாட்டின் அரசாங்க வருமானம் என்பது மிக முக்கியமானதாகும். அரசாங்க வருமானத்திலேயே நாட்டின் செலவுகள் செய்யப்படுகின்றன.

அரசாங்க வருமானம் குறைவடையும்போது செலவுகள் செய்ய முடியாத நிலைமை ஏற்படும். அது பொருளாதாரத்தை பாதிக்கும். எனவே அரசாங்க செலவுகளை சரியான முறையில் செய்வதற்கும் செயல்திறனாக முன்னெடுப்பதற்கும் அரசாங்கத்துக்கு வருமானம் தேவைப்படுகிறது.

அரசாங்கம் வருமானத்தை பல வழிகளில் பெற்றுக் கொள்கிறது. நேரடி வரி, மறைமுக வரி மற்றும் அரசாங்க நிறுவனங்களினால் பெறப்படுகின்ற இலாபங்கள், அரசாங்கம் செய்கின்ற முதலீடுகளில் கிடைக்கின்ற இலாபங்கள் போன்றவற்றின் ஊடாக அரசாங்கம் வருமானத்தை பெற்றுக்கொள்கின்றது. 

வருமானத்துக்கும் செலவுக்கும் இடையில் ஏற்படுகின்ற இடைவெளியை நிரப்பவே அரசாங்கம் கடன்களை பெற்றுக்கொள்கிறது. தற்போதைய நிலைமையில் இலங்கை உள்நாட்டில் கிட்டத்தட்ட 16 ட்ரில்லியன் ரூபாவை கடனாக பெற்று இருக்கிறது.

அதேபோன்று வெளிநாட்டு மட்டத்தில் கிட்டத்தட்ட 42 பில்லியன் டொலர்களை கடனாகக் கொண்டிருக்கிறது. (தொகையில் சிறிய மாற்றங்கள் இருக்கலாம்) அரசாங்கம் வருமானம் கடந்த காலங்களில் குறைவடைந்தமையே அரசாங்கம் கடன்களை அதிகளவு பெறுவதற்கு காரணமாக அமைந்தது. இதுவே கடந்த காலத்தில் இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடியை சந்திப்பதற்கு காரணமாக அமைந்தது.

பாரிய நெருக்கடி

கடந்த வருடம் டொலர் நெருக்கடி காரணமாக எரிபொருள் இறக்குமதியில் சிக்கல், எரிபொருள் விலை உயர்வு, மின்சார நெருக்கடி, அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான சிக்கல்கள், அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு காரணமாக பல்வேறு துறைகள் பாதிக்கப்பட்டன. பல்வேறு பொருட்களின் விலைகள் மற்றும் சேவைகளின் கட்டணங்கள் அதிகரித்தன. இதனால் மக்கள் பாரிய பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டனர். 

2021ஆம் ஆண்டு இறுதியில் ஆரம்பமான இந்த நெருக்கடிகள் 2022 ஆரம்பத்தில் தீவிரமடைந்தது. அத்தியாவசிய பொருட்களுக்கான வரிசைகள், காத்திருத்தல், ஏமாற்றங்கள், பொருளாதார பிரச்சினைகள், பாடசாலை ஸ்தம்பிதம், வர்த்தக செயற்பாடுகள் பாதிப்பு, மின்வெட்டு நெருக்கடி, தொழிற்சாலைகளின் நடவடிக்கைகள் பாதிப்பு, போக்குவரத்து ஸ்தம்பிதம், எரிபொருள் பற்றாக்குறை, எரிபொருள் விலை அதிகரிப்பு, உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு என நாட்டில் பல்வேறு நெருக்கடிகள் தோற்றம் பெற்றன.

இந்த நிலை ஏற்படுவதற்கு காரணம் இலங்கையில் தேவையான அளவு டொலர் கையிருப்பு இல்லாமல் போனமையாகும். ஏன் இந்த டொலர் கையிருப்பு இல்லாமல் போனது என்பதற்கு மிக முக்கியமான காரணம் இருக்கின்றது.

அரசாங்க வருமானம் குறைந்ததால் நடந்தது என்ன?

அதாவது அரசாங்கத்தின் வருமானம் குறைவடைந்தமையே அதாவது 2020ஆம் ஆண்டில் அரசாங்க வருமானம் குறைவடைந்தமையே இந்த டொலர் நெருக்கடிக்கு காரணமாக அமைந்தது. 

2020ஆம் ஆண்டின் ஆரம்பப் பகுதியில் இலங்கையில் வட் வரி வீதம் 15 வீதத்திலிருந்து எட்டு வீதமாக குறைக்கப்பட்டது. இதனால் அரசாங்கத்தின் வருமானம் (650 பில்லியன் ரூபாவினால்) குறைவடைந்தது. (சுமார் 2000 பில்லியன் ரூபா வரவேண்டியது 1300 பில்லியன் ரூபாவே வருமானமாக 2020ஆம் ஆண்டில் கிடைத்தது.) அரச வருமானம் குறைவடைந்ததையடுத்து சர்வதேச கடன் தரப்படுத்தல் நிறுவனங்களான மூடி, பிச் ரேட்டிங் மற்றும் ஸ்டேண்டர்ட் என்ட் புவர்ஸ் போன்றன இலங்கையின் பொருளாதார குறியீடுகளை பாதகமாக காட்டின.

இலங்கை கடனை பெற்றால் அதனை மீள் செலுத்தக்கூடிய நிலையில் இல்லை என்ற விடயம் கடன் தரப்படுத்தல் நிறுவனங்களினால் தொடர்ந்து கூறப்பட்டு வந்தது. 

கடன் தரப்படுத்தல் நிறுவனங்கள் இலங்கையின் கடன் மீள்செலுத்தும் இயலுமை தொடர்பான குறிகாட்டிகளை மிகவும் கீழ் மட்டத்தில் வெளியிட்டதன் காரணமாக இலங்கையினால் புதிய சர்வதேச கடன்களை பெற முடியவில்லை. அதனால் 2020இன் ஆரம்பத்தில் 6900 மில்லியன் டொலர்களாக இருந்த வெளிநாட்டு கையிருப்பு (டொலர்) குறைவடைந்து வந்தது. இதன் காரணமாகவே மேலே கூறப்பட்ட நெருக்கடிகள் தோற்றம் பெற்றன.

நாணய நிதியத்தின் நிபந்தனை

இந்நிலையில் 2022ஆம் ஆண்டு இலங்கை சர்வதேச நாணய நிதியத்தை நாடியது. சர்வதேச நாணய நிதியத்தை நாடி இலங்கை ஒப்பந்தத்தை செய்துகொண்டது. அந்த ஒப்பந்தத்தின் பிரகாரம், இலங்கைக்கு 48 மாதங்களில் 2.9 பில்லியன் டொலர்கள் கடனாக கிடைக்கும். ஆனால் அந்த கடன் கிடைப்பதற்கு இலங்கை நாணய நிதியத்தின் பல நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள வேண்டியேற்பட்டது. அந்த நிபந்தனைகளில் மிக முக்கியமாக இருப்பது அரசாங்க வருமானத்தை அதிகரித்துக்கொள்ள வேண்டும் என்பதாகும்.

அரசாங்க வருமானத்தை அதிகரித்துக்கொள்வதற்கு பல வேலைத்திட்டங்களை இலங்கை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. அந்த செயற்பாடுகள் தாமதமடையும் பட்சத்தில் தொடர்ச்சியாக சர்வதேச நாணயத்தின் கடனை பெற்றுக்கொள்வதில் சிக்கல்கள் ஏற்படும். 

தற்போது இரண்டாவது கடன் தொகையை இலங்கை பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டிருக்கின்ற தாமதத்துக்கும் அதுவே காரணமாக அமைந்திருக்கிறது.

இந்நிலையில் அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தை நிபந்தனைக்கு அமைவாக அரசாங்க வருமானத்தை அதிகரிப்பதற்காக கடந்த காலங்களில் பல நடவடிக்கைகள் எடுத்தது. முக்கியமாக நேரடி வருமான வரியானது 36 வீதம் என்ற உயர்ந்த பட்ச நிலைக்கு சென்றது. 

ஆறு வீதம் முதல் 36 வீதம் வரை சென்றது. அதேபோன்று நட்டமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது. மின்சார நீர் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டன. எரிபொருட்களின் விலைகள் திருத்தம் செய்யப்பட்டன. இவை அனைத்தும் சர்வதேச நாணயத்தின் நிபந்தனைகளுக்கு அமைவாகவே முன்னெடுக்கப்பட்டன.

விளைவுகள் என்ன?

அவ்வாறு கடந்த ஒரு வருட காலமாக செயல்பட்டும் கூட இலங்கையினால் அரச வருமான இலக்கை இன்னும் அடைந்துகொள்ள முடியவில்லை.

கடந்த 2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், இலங்கையின் அரச வருமானம் அதிகரித்திருக்கின்றது. ஆனாலும் இன்னும் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைக்கு அமைவாக வருமானம் போதுமானதாக இல்லை.

எனவேதான் மீண்டும் தற்போது வரிகளை அதிகரிக்கவேண்டிய தேவை அரசுக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன் ஒரு கட்டமாகவே 15 வீதத்திலிருந்து 18 வீதமாக வட் வரியை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

என்ன செய்யலாம்?

இது எதிர்காலத்தில் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகளில் கட்டணங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனாலும் அரசாங்க வருமானத்தை அதிகரித்துக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் அரசாங்கத்துக்கு காணப்படுகிறது. அப்போதுதான் நாணய நிதியத்தின் இரண்டாவது கடன் தொகையை பெற்றுக்கொள்ள முடியும் என்பதுடன் அடுத்தகட்ட கடன் தவணைப் பணத்தையும் பெற முடியும். 

அரசாங்க வருமானத்தை அதிகரிப்பதற்கு வரியை அதிகரிப்பதற்கு பதிலாக மாற்று வழிகளை பயன்படுத்தலாம் என்றும் வட் வரியை அதிகரிப்பது சாதாரண மக்களை பாதிக்கும் என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.

அரசாங்கமும் நட்டமடைய நிறுவனங்களை மறுசீரமைப்பதன் ஊடாக அரச வருமானத்தை அதிகரித்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கலாம். 

மேலும் அரசாங்க முதலீடுகளை பலப்படுத்துதல், ஏற்றுமதி வருமானத்தை அதிகரித்தல் போன்றவற்றின் ஊடாக வருமானத்தை அதிகரித்துக்கொள்ள முடியும். காரணம், மக்கள் ஏற்கனவே பாரிய நெருக்கடிகளை சந்தித்துவிட்டனர். 

கடந்த வருடம் ஏற்பட்ட நெருக்கடியிலிருந்து வெளியே வருவதே மக்களுக்கு பாரிய சவாலாக அமைந்துள்ளது. எனவே எதிர்காலத்தில் மக்களுக்கு சுமை ஏற்படாதவாறு அடுத்த கட்ட மறுசீரமைப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டிய அவசியம் நீடிக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய ஜனாதிபதியை எதிர்பார்த்து காத்திருக்கும் இலங்கையின்...

2024-09-06 16:17:50
news-image

குழப்பங்களுக்கு காரணம் அமெரிக்கா தலைமையிலான மேற்குலக...

2024-09-04 17:32:26
news-image

'பொருளாதாரத்தைச் சீர்செய்வதற்கும் இனவாதத்தை ஒழிப்பதற்கும் அதிமுன்னுரிமை'

2024-09-04 11:23:24
news-image

இந்தோனேசியாவின் அவசரநிலைமையை எச்சரிக்கின்ற போராட்டங்கள் 

2024-09-04 09:46:14
news-image

'எங்களால் எங்கள் குழந்தைகளைப் பாதுகாக்க முடியாது':...

2024-09-03 14:54:20
news-image

எதியோப்பியாவில் சமஷ்டி வடிவமைப்பு இயல்பு மற்றும்...

2024-09-03 15:02:23
news-image

சமூகங்களை ஐக்கியப்படுத்தக்கூடிய ஒரு ஜனாதிபதியே தேவை...

2024-09-03 10:05:06
news-image

பாடசாலை பெயரை பயன்படுத்தி ஆரம்பிக்கப்பட்ட திட்டத்தில் ...

2024-09-03 03:34:34
news-image

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மத்திய மாகாண...

2024-09-02 20:55:14
news-image

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு பின்னரான முதல்...

2024-09-02 16:14:14
news-image

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளரும் தமிழர்...

2024-09-02 13:38:45
news-image

முஸ்லீம் சமூகத்தில் ஒரு அமைதியான அரகலய

2024-09-02 13:17:58