பிரச்சினைகளை வாய்ப்புகளாக பாருங்கள் ; வாழ்க்கை அர்த்தபுஷ்டியுள்ளதாக மாறும் ! - பேச்சாளர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஸ்ணன்

02 Nov, 2023 | 07:32 PM
image

(நிவேதா அரிச்சந்திரன்)

'ஏமாற்றங்களை தாங்கிக்கொள்ள பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுங்கள். பிரச்சினைகளை வாய்ப்புகளாக பார்க்கும் பக்குவம் கிடைத்துவிட்டால் வாழ்க்கை அர்த்தபுஷ்டியுள்ளதாக மாறும்' என்ற வாழ்க்கைக்குறித்த தாரக மந்திரத்தை பேராசிரியரும் பிரபல மேடைப்பேச்சாளருமான ஜெயந்தஸ்ரீ பாலகிருஸ்ணன் கேசரியுடன் பகிர்ந்துகொண்டார். 

ஜெயந்தஸ்ரீ பாலகிருஸ்ணன் உடனான நேர்காணல் வருமாறு:

1.கொவிட் 19 பரவலுக்கு பின்னர் பொருளாதார நெருக்கடியால் உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை வாழ் மக்களுக்கு தங்களின் அறிவுரை என்ன?

அறிவுரை என்பதற்கு பதிலாக இதுவொரு அணுகுமுறையாக பகிரக்கவேண்டிய விடயம். வாழ்க்கையை கடினமாக பார்ப்பது சுலபம். வாழ்க்கையை சவாலாக பார்ப்பதென்பது அதைவிட சுலபம். ஆனால் வாழ்க்கையை வாய்ப்புகளாக பார்க்க வேண்டுமாயின் அது கல்வியெனும் மிகப்பெரிய ஆயுதத்தால் மட்டுமே சாத்தியம். அத்தகைய கல்வி வெறுமனே ஏட்டுக்கல்வியாக மாத்திரம் அமையாமல் வாழ்க்கை குறித்த அனுபவமாக அமைய வேண்டும். இந்த அனுபவக்கல்வி என்பதற்குள் பொறுமை, பிரச்சினைகளை கையாளும் திறமை, பக்குவம் உள்ளிட்ட பல்வேறு உயரிய திறமைகள் காணப்படுகின்றன. எனவே என்னுடைய பார்வையில் இவைதான் வாழ்க்கைக்கு தேவையான கல்வியாக பார்க்கிறேன்.

எனவே பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டுமாயின் மேற்கூறிய அனுபவக் கல்வியை ஒரு கேடயமாக பயன்படுத்த வேண்டும்.

இந்த பக்குவத்தை மிக இலகுவாக பெற்றுவிட முடியாது. ஒவ்வொரு தடவையும் நாம் விழும்போதெல்லாம் ஏமாற்றங்களும் வலிகளும் எங்களை ஆக்கிரமிக்கும். அத்தகைய வலிகளும் சறுக்கல்களும் நிச்சயம் ஏற்படுமென்பது எந்தளவு சத்தியமோ அதே அளவு அதன் ஊடாக கிடைக்கும் அனுபவம் வாழ்க்கையை வாய்ப்புகளாக மாற்றும் பக்குவத்தை நிச்சயம் கற்றுத்தரும். 

பிரச்சினைகளே இல்லாத மனிதர் இல்லை. அதற்காக விழுந்த இடத்திலேயே நின்றுவிட முடியாது. எனவே பிரச்சினைகளை கடந்து செல்ல வேண்டுமாயின் முதலில் பிரச்சினைக்கு வெளியில் நின்று நிலைமையை ஆராய வேண்டும். மாறாக பிரச்சினைக்குள்ளேயே மூழ்கிவிடக்கூடாது. 

2. ஆய்வுகளின்படி இலங்கையில் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் தற்கொலை முயற்சிகள் தற்போது அதிகரித்து வருகின்றன. இது தொடர்பில் தங்களின் அறிவுரை என்ன?

இது மாணவர்களுக்கு மாத்திரமின்றி அனைவருக்கும் பொதுவாக ஒரு கேள்வியாகவே நான் பார்க்கிறேன். இலங்கையில் மாத்திரமின்றி உலகலாவிய ரீதியிலான பிரச்சினை இது. 

இளையோர்களை பொருத்தமட்டில் குடும்ப உறவுகளின் அரவணைப்பு, கண்டிப்பு என்பது மிகப்பெரிய பாதுகாப்பு வலயமாக காணப்படுகிறது. 1950 காலப்பகுதிகளில் ஒரு குடும்பத்தில் குறைந்தபட்சம் 5 அல்லது 6 குழந்தைகள் இருப்பார்கள். அவர்களுக்கு தேவைகளுக்கும் விருப்பங்களுக்கும் இடையிலான வேறுபாடு நன்றாகவே தெரிந்திருக்கும். காரணம் கேட்டவுடன் எதுவுமே கிடைக்காது.  ஒரு விருப்புக்குரிய விடயத்தை அடைய பலமுறை அந்த பிள்ளை ஒத்திகை பார்த்திருக்கும். ஆனால் இன்றைய காலகட்டமென்பது முற்றிலும் மாறுபட்ட ஒன்றாக காணப்படுகின்றது. பிள்ளைகளுக்கு ஏமாற்றம் என்றால் என்னவென்பதே தெரியாது. காரணம் கேட்டவுடன் பெற்றுத்தரும் பெற்றோர்கள் தற்கால பிள்ளைகளுக்கு கிடைத்திருக்கின்றார்கள். இதன் விளைவாக பிள்ளைகள் வளர்ந்து சமூகத்துடன் பழக ஆரம்பித்ததும் தேவையற்ற விபரீதங்களை சந்திக்க நேரிடுகிறது. 

ஏமாற்றங்களை தாங்கிக்கொள்ளக்கூடிய பாடங்களை குடும்பங்களிலேயே கற்றுக்கொடுக்க வேண்டும். நிராகரிப்புகளுக்கு முகம்கொடுக்க தயார்படுத்த வேண்டிய பொறுப்பு பெற்றோரையே சாரும். ஏமாற்றங்களை தாங்கிக்கொள்ளும் பக்குவம் இருந்தால் தோல்வி என்பது ஒரு பொருட்டு கிடையாது. எங்களுடைய தலைமுறையின் எழுச்சிக்கு இதுபோன்ற ஏமாற்றங்களும் சறுக்கல்களுமே அடித்தளமாய் அமைந்தன. 

3.  பல்கலைக்கழகங்களில் காணப்படும் பகிடிவதை கலாசாரமும் மாணவர்களின் தற்கொலை முயற்சிக்கு ஒரு பிரதான காரணமாக அமைந்துள்ளது. இதிலிருந்து மாணவர்கள் வெளிவருவது எப்படி?

கடவுளுடைய படைப்பில் அனைவருமே அதிர்ஷ்டசாலிகள். யார் ஒருவர் தன்னம்பிக்கையுடன் பிரச்சினைகளுக்கு வெளியில் நின்று தீர்வை பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்றாரோ அவருக்கு சவால்களை எதிர்கொள்வதென்பது இலகுவானது. 

பகிடிவதை கலாசாரம் என்பது இலங்கையில் மாத்திரமின்றி உலகெங்கிலும் காணப்படுகிறது. இதிலிருந்து வெளிவர வேண்டுமாயின் முதலில் ஒவ்வொருவரும் தம்மை சுயபரீசீலனை செய்துகொள்ள வேண்டும். ஒருவருடைய நிறம்,தோற்றம், குடும்பப் பின்னணி, அவரது இயலுமை என்பனவற்றை முதலில் அவரவர் விரும்பி ஏற்றுக்கொள்ள பழக வேண்டும். ஒருவருடைய வாழ்க்கையை மற்றொருவர் வாழ முடியாது எனின் ஒருவருடைய தனிப்பட்ட விடயங்களை பற்றி பேசுவதற்கும் பிறருக்கு அனுமதிக்கிடையாது. அப்படியே சமூகம் பேசினாலும்கூட நாங்கள் நிதானமாக தெளிவான முடிவில் திடமாக இருப்போமாயின் மற்றவரது விமர்சனங்களுக்காக களங்கத் தேவையில்லை. 

இதற்காகத்தான் கல்வி எனும் வாழ்க்கை பாடத்தை பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். 

4. அப்படியாயின் வாழ்க்கைப் பாடத்தை கற்றுக்கொடுப்பதில் பாடசாலை சமூகத்தின் வகிபாகம் என்ன?

பிள்ளைகளின் வளர்ச்சியில் குடும்ப பின்னணிக்கு அடுத்தக்கட்டமாக பாடசாலை கட்டமைப்பு முக்கியமானதாக காணப்படுகிறது. இங்கு ஏட்டுக்கல்விக்கு மேலதிகமாக வாழ்க்கை பாடங்களான பொறுமை, விட்டுக்கொடுக்கும் மனபான்மை, அடுத்தவரது வலிகளை புரிந்துக்கொள்ளும் தன்மை உள்ளிட்ட பல நல்ல பண்புகளை பாடசாலை சமூகம் மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். 

இதற்கு மேலதிகமாக பிள்ளைகளை ஊக்குவிக்க வேண்டும். அதாவது உன்னால் முடியும், நீ பூரணமானவன், உன்னைப்போல இன்னொருவன் இல்லை என்ற வார்த்தைகளால் பிள்ளைகளை தட்டிக்கொடுக்க வேண்டும். இது புகழ்ச்சி அல்ல. மாறாக மனதளவில் முடங்கிக்கிடக்கும் பிள்ளைகளுக்கான புத்துணர்ச்சியாக மாறும். சமூகத்தில் யாரொருவர் தன்னை முழுமையாக நினைக்கிராறோ அவர் மற்றவர்களின் வலிகளை நிச்சயம் புரிந்துக்கொள்வார். இப்படி ஒரு நிலை வரும்போது இதுபோன்ற பகிடிவதைகள் போன்ற சம்பவங்கள் இடம்பெறாது. 

5. எதிர்மறையான எண்ணங்களிலிருந்து விடுபடுவது எப்படி?

சமூகம்  பிள்ளைகளை எப்படி வழிநடத்துகிறதோ அதற்கேற்பவே அவர்கள் தங்களை மாற்றிக்கொள்கிறார்கள். தற்காலத்தில் மனஉளைச்சல் என்ற வார்த்தைகள் மாணவர் மத்தியிலேயே சொல்லப்படுவதென்பது நாகரீகமாக பார்க்கப்படுகிறது. இதனால் பாடசாலைகளில் பிள்ளைகளை கண்டிப்பதற்கு கூட ஆசிரியர்கள் தயங்க வேண்டியதாகவுள்ளது. சமூகத்தில் ஒவ்வொருவரும் கடந்துவந்த பருவமாற்றங்களையும் அதன் விளைவுகளையும் பூதாகரமாக பார்ப்பதால் ஒருபோதும் அதிலிருந்து வெளிவர முடியாது. இவை மருந்து கொடுத்து தீர்க்க வேண்டியவை அல்ல. சறுக்கல்கள் ஒருபோதும் தோல்வியாகாது.

தனது பிள்ளை சரியாக சாப்பிடுவது இல்லை. விளையாடுவது இல்லை. சமூகத்தோடு சார்ந்து செயற்படுவது குறைவு என தற்கால பெற்றோர்கள் வைத்தியர்களையே நாடுகிறார்கள். இதுபோன்ற வார்த்தை பிரயோகங்களை முதலில் சமூகம் தவிர்க்க வேண்டும். மேற்கூறியதுபோன்ற குடும்ப கட்டமைப்பு என்பதே அனைத்துக்கும் அடிப்படை.  குடும்பங்களில் பிள்ளைகளை ஒப்பிட்டு பேசாதீர்கள். ஒருவனை குறைக்கூறி அவனை வாழத்தகுதி இல்லாதவன் என்ற விம்பத்தை தோற்றுவிப்பது சமுதாயம். சிறையில் அடைக்கப்பட வேண்டியது சமுதாயம். எனவே ஒரு பிரச்சினையை சகதாபத்தோடு அவரது கோணத்திலிருந்து பார்க்க பழக வேண்டும். அப்போது மற்றவரது வலி நமக்கும் புரியும். 

6. பாலியல் ரீதியிலான புரிதலை கட்டமைப்பது எப்படி?

இதற்கும் குடும்ப கட்டமைப்பே அடிப்படையாக அமைகிறது. கூட்டுக்குடும்பங்கள் என்று தனிக்குடும்பங்களாக பிரிந்துவந்தனவோ அதுவே சமூகத்தில் உறவுகளுக்கிடையிலான விரிசலுக்கு பிரதான காரணமாக மாறிவிட்டன. மூத்த தலைமுறையினர் பிள்ளைகளை கண்டிக்கும்போது நாமும் அதை கடந்துதானே வந்தோம் என்பதை ஒரு கணம் சிந்தித்து பார்க்க வேண்டும். அப்படி பார்க்கும் பட்சத்தில் தவறு செய்யும் பிள்ளைகளை கண்டிக்கும் விதம் அர்த்தமானதாக மாறும். மாறாக தவறுகளை சுட்டிக்காட்டி பிறரோடு ஒப்பிட்டு பேசுவதால் ஒருபோதும் தவறுகளை திருத்திவிட முடியாது. 14 முதல் 16  வயது என்பது கடினமான பருவம். இந்த பருவத்தில் பெற்றோர்கள் பிள்ளைகளோடு இயன்றவரை புரிதலோடு இருக்க வேண்டும். தற்கால சமூக கட்டமைப்பு என்பது வேறுவிதமாக உள்ளது. பாலியல் ரீதியிலான கற்கைகளை ஆசிரியர்கள் தயக்கமின்றி சரியான தெளிவுப்படுத்தலை மாணவர்களுக்குள் புகுத்த வேண்டும். வாழ்வின் சறுக்கும் இடத்தில் கைப்பிடித்து அணைத்துச்செல்வதற்கும் நான் இருக்கிறேன் என தைரியம் கொடுக்கவும் ஒரு நபர் பிள்ளைகளின் அருகில் இருக்கும் பட்சத்தில் ஆபத்துக்கள் அணுகுவதில்லை என்றார். 

7. பெண் தலைமைத்துவ குடும்பங்கள் சமூக விமர்சனங்களிலிருந்து வெளிவருவது எப்படி?

பெண்களுக்கு எதிரான இதுபோன்ற பிரச்சினைகளை இன்று நேற்று தோன்றியதல்ல. ஆனால் தற்கால பெண்கள் மிக வேகமாக திறமைகளால் சாதனைகளை புரிகின்றனர். ஆண்களுக்கு நிகராக இன்று சமூகத்தில் பெண்களும் வேரூன்றி நிற்கின்றார்கள். ஆனால் சமூகப்பார்வை என்பது பெரும்பாலான இடங்களில் தொடர்ந்தும் காணப்படுகின்றது. எனவே சமூகத்தை மாற்றியமைப்பதை விட சாதிக்கத்துடிக்கும் பெண்கள் தங்களுடைய பயணத்தில் தெளிவாக இருந்தால் சமூக விமர்சனங்கள் ஒரு பொருட்டல்ல. அதேநேரம் சுமைகளோடு வாழும் பெண்களின் வலிகளை சகதாபத்தோடு புரிந்துகொண்டு அவர்களுக்கு வழிவிட கற்றுக்கொள்ள வேண்டும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உண்மைக்காக மௌனமாக்கப்பட்டார்:பத்திரிகையாளர் சுகிர்தராஜனிற்கு நீதி மறுக்கப்பட்டுள்ளது.

2025-01-24 20:40:09
news-image

அமைதியான தொற்றுநோயாக  மாணவர்களிடையே காணப்படும் மனநலச்...

2025-01-24 13:53:49
news-image

யாழ்ப்பாண கலாசார மையத்தின் பெயர் திடீரென்று...

2025-01-24 13:31:38
news-image

விவசாய தொழில்முனைவு / வேளாண்மை நோக்கி...

2025-01-23 16:12:24
news-image

புதிய அரசியலமைப்பில் செனட் சபை? தவறுகளிலிருந்து...

2025-01-23 16:49:05
news-image

இலங்கையில் சமூக பணி

2025-01-23 11:56:18
news-image

'எனது பிள்ளைகள் இன்னமும் இடிபாடுகளிற்குள்ளேயே உள்ளனர்...

2025-01-23 10:45:23
news-image

சர்வதேச உதவிகளை அவற்றின் தகுதியின் அடிப்படையில்...

2025-01-22 11:00:46
news-image

கெரவலப்பிட்டிய, புளுமென்டல் பகுதிகளில் புதிய கொள்கலன்...

2025-01-21 16:42:53
news-image

நுவரெலியாவையும் யாழ்ப்பாணத்தையும் பஸ் மார்க்கத்தால் இணைக்கும்...

2025-01-21 19:49:27
news-image

கிட்டு மீதான கொலை முயற்சி

2025-01-21 14:07:54
news-image

காசா பள்ளத்தாக்கு போர்நிறுத்தம் நின்றுபிடிக்குமா?

2025-01-21 14:08:15