(எம். மொறிஸ்)
மண்ணுலக வாழ்வை நிறைவு செய்து விண்ணகத்தில் இருப்பவர்களையும், உத்தரிக்கிற ஸ்தலத்தில் உள்ள ஆத்துமாக்களையும் நினைவுகூருகின்ற புனிதமான நாள் இன்றாகும்.
கத்தோலிக்க திருச்சபையானது ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் 2ஆம் திகதியை (இன்று) இறந்த விசுவாசிகள் அனைவருக்காகவும் இறை வேண்டல் செய்து நித்திய இளைப்பாறுதல் பெற அவர்களுக்காக செபிக்கும்படி வேண்டி நிற்கிறது.
உயிர் வாழ்வோர் செபம், தவம், தான தர்மம் வழியாக இறந்துபோன ஆன்மாக்களுக்கு உதவி செய்யும் புனிதம் மிகுந்த நாள். உத்தரிக்கின்ற ஸ்தல ஆன்மாக்கள் இறைவனை முகமுகமாய் தரிசிக்க உதவி செய்கின்ற தூய நாள். இறந்த ஆன்மாக்கள் அனைவரும் விண்ணகப் பேரின்பத்தில் நுழைய வழிகாட்டும் நாள்.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை அன்பு செய்கின்ற மக்கள் உத்தரிக்கிற ஸ்தலத்திலுள்ள ஆன்மாக்களுக்காக தங்கள் செபத்தின் வழியாக உதவி செய்வார்கள். ஏனெனில், அவர்கள் இயேசுவின் சகோதரர்கள், சிறையிலிருக்கும் சகோதரர்கள், விண்ணக மாட்சிமை எனும் ஆடையின்றித் தவிக்கும் சகோதரர்கள். அவர்களுக்கு உதவி செய்யும்போது நாம் இயேசுவுக்கு உதவு செய்கிறோம்.
புனிதர்கள் மரித்துப்போன ஆன்மாக்களின் மீட்புக்காக கண்ணீரோடும் முழந்தாள் படியிட்டும் கரங்களை உயர்த்தியபடி செபித்தனர். ஒரு முறை புனித ஜெத்துருவிடம் இயேசு கிறிஸ்து காட்சியளித்து "இயேசு, மரியா, சூசை நான் உங்களை அன்பு செய்கிறேன் என்று செபிக்கின்றபோது ஓர் ஆன்மா உத்தரிக்கின்ற இடத்திலிருந்து விண்ணக வாழ்வுக்கு கடந்து செல்கிறது" என்று கூறினார்.
ஒரு முறை வானதூதர் ஒருவர் புனித பவுஸ்தீனாவை உத்தரிக்கின்ற ஸ்தல ஆன்மாக்களை சந்திக்க தன்னுடன் அழைத்துச் சென்றார். அங்கு ஏராளமான ஆன்மாக்கள் வேதனையில் துடித்துக்கொண்டிருந்தனர். அவர்கள் ஆர்வமாய் செபிக்கிறார்கள். பலன் ஒன்றுமில்லை. இந்த ஆன்மாக்களுக்கு நம்மால் மட்டுமே உதவி செய்ய முடியும். எரியும் நெருப்பின் இடையில் சென்ற புனித பவுஸ்தீனாவுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. இறைவனின் அன்பும் இறைவனின் பிரசன்னமும் இல்லாமல் தவிக்கும் நிலையே உத்தரிக்கின்ற இடத்திலுள்ள ஆன்மாக்களின் மிகப் பெரிய துன்பம். இவர்களின் தாகம் இறைவனோடு இணைதல். புனித பவுஸ்தீனா இவர்களுக்காக பரிகாரம் செய்து செபிக்க வேண்டுமென்று கூறி வானதூதர் மறைந்தார்.
அன்னை மரியாளுக்கு முன்னால் அங்கு தோன்றினார். உத்தரிக்கின்ற இடத்திலுள்ள ஆன்மாக்கள் உரத்த குரலில் "மனுக் குலத்தின் தாயே" என்று அழைத்தார்கள். அன்னை அவர்களை ஆறுதல்படுத்தினார். அப்போது புனித பவுஸ்தீனா,
"எனது இரக்கம் ஆன்மாக்களின் வேதனையை குறைக்கும்" என்ற குரலை கேட்டார். அன்று முதல் உத்தரிக்கின்ற ஸ்லத்திலுள்ள ஆன்மாக்களுக்காக செபிக்கத் தொடங்கினார்.
இயேசு கிறிஸ்துவை அன்பு செய்கின்ற ஆன்மாக்கள் மண்ணக வாழ்வை விட்டுப் பிரிந்தாலும் விண்ணகத்தில் அவருடன் வாழ்கின்றனர். விண்ணகப் பேரின்பத்தை இறந்துபோன மக்களுக்கு உயிர் வாழ்வோரின் பரிந்துரை செபத்தால் இறந்தோர் அனைவரும் விண்ணக வாழ்வை உரிமையாகப் பெற்றுக்கொள்ள முடியும். எனவே, இறந்துபோன அனைத்து விசுவாசிகளுக்காகவும் செபிப்போம்.
இறந்த விசுவாசிகளுக்காக மன்றாடும் பழக்கம் காலம் காலமாக திருச்சபையில் இருந்து வந்தாலும், அறிவியலாளர் ஐன்ஸ்டீனின் வருகைக்குப் பின் இந்த நம்பிக்கை அறிவியல் வழியாகவும் வலுப்பெற்றிருக்கிறது. இது ஒரு வியப்பான தகவல்தான்.
ஐன்ஸ்டீன் கிறிஸ்தவர் அல்லர், ஒரு யூதர். இருந்தபோதிலும், அவரது ஒப்புமைக் கொள்கையின் தாக்கம் இறந்தோர் பற்றிய கத்தோலிக்கரின் பார்வையிலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது ஒப்புமைக் கொள்கையின்படி, காலமும் இடமும் நிலையானவை அல்ல. மாறாக, ஒப்புமைக்குரியவை. எனவே, உடலோடு வாழும் காலத்தில்தான் காலமும் இடமும் மனிதர்களை கட்டுப்படுத்துகின்றன. உடலை கடந்த பின், காலத்தையும் இடத்தையும் நாம் கடக்க முடியும். எனவே, இறந்தவர்கள் உடலை கடந்தவர்களாதலால், அவர்கள் காலத்தையும் இடத்தையும் வென்றவர்களாகிறார்கள்.
எனவே, ஒருவர் இறந்து இருபத்தைந்து ஆண்டுகள் ஆனாலும் கூட அவருக்கு அது இன்று போலத்தான். நமக்குத்தான் இருபத்தைந்து ஆண்டுகள். எனவே, நாம் இருபத்தைந்து ஆண்டுகள் கழிந்த பின் அவருக்காக மன்றாடினாலும், அவருக்கு அது இறப்பின் நேரத்திலேயே பலன் கொடுக்கும். இதுதான் ஜன்ஸ்டீனின் தர்க்கம்.
எனவே, என்றோ இறந்துபோன நம் உறவுகளை இன்று எண்ணிப் பார்த்து மன்றாடுவது அவர்களுக்கு என்றும் உதவுவதே. நித்திய இளைப்பாற்றியை அவர்களுக்கு அளித்திடும் ஆண்டவரே! முடிவில்லாத ஒளி அவர்கள் மேல் பிரகாசிக்கட்டும்!
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM