பிரித்தானியாவில் தற்போது புழக்கத்தில் உள்ள ஒரு பவுண்ட் வட்ட வடிவமான நாணயங்கள் வரும் ஒக்டோம்பர் மாதத்தில் இருந்து செல்லுபடியாகாது என பிரித்தானியா வங்கி அறிவித்துள்ளது.பிரித்தானியாவில் புழக்கத்தில் இருக்கும் போலி ஒரு பவுண்டு நாணயங்களை ஒழிக்கும் விதமாக குறித்த புதிய ஒரு பவுண்ட் நாணயங்களை வரும் மார்ச் மாதம் 28 ஆம் திகதி முதல் மக்கள் பாவனைக்காக வெளியிடவுள்ளனர்.

இந்த நிலையில் பிரித்தானியா வங்கியானது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, தற்போது புழக்கத்தில் இருக்கும் வட்ட வடிவமான ஒரு பவுண்ட் நாணயங்கள் வரும் ஒக்டோபர் மாதம் 16 ஆம் திகதியில் இருந்து செல்லுபடியாகாது எனவும், குறித்த நாணயங்களை வாடிக்கையாளர்களிடம் இருந்து வியாபாரிகள் வாங்கவோ விநியோகிக்கவோ வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.

ஆனால், குறித்த வட்ட வடிவமான பழைய நாணயங்களை வங்கியின் வாடிக்கையாளர்கள் மாற்றிக்கொள்ளும் வசதியையும் வங்கி அறிவித்துள்ளது. இதனிடையே குறித்த விவகாரம் தொடர்பாக ஊடகங்களில் பேசிய வல்லுநர்களில் ஒருவரான மார்டின் லீவிஸ் எவரேனும் பழைய நாணயங்களை சேமித்து வைத்திருந்தால் கண்டிப்பாக அவை அனைத்தையும் உடனடியாக மாற்றிக் கொள்ளவும் என கேட்டுக்கொண்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

புதிதாக வெளியாகவிருக்கும் நாணயமானது இருவேறு உலோகங்களால் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போது புழக்கத்தில் இருக்கும் ஒரு பவுண்ட் நாணயங்களில் 30 இல் ஒன்று போலியான நாணயம் என அரசு அதிகாரிகளால் கண்டறியப்பட்டுள்ளமை காரணமாகவே இப்புதிய நாணயம் அறிமுகப்படுத்தபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.