நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பட்ஜட்டில் என்ன கிடைக்கப் போகிறது?

01 Nov, 2023 | 05:26 PM
image

(ரொபட் அன்டனி)

சர்வதேச நாணய நிதியத்துக்கும் இலங்கைக்கு இடையில் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கை மற்றும் இதுவரை இரண்டு தடவைகள் எட்டப்பட்டிருக்கின்ற இணக்கப்பாடுகள் என்பவற்றில் ஒரு முக்கியமான விடயம் உள்ளடக்கப்பட்டிருக்கிறது.

அதாவது கடந்த காலங்களில் இலங்கை சர்வதேச நாணயத்தை நாடியபோதெல்லாம் முன்வைக்கப்படாத ஒரு பரிந்துரை இம்முறை சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளில் உள்ளடங்கி இருக்கின்றது.

அதாவது பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் செயல்பாட்டில் முன்னெடுக்கப்படும் மறுசீரமைப்புக்களின்போது நலிவுற்ற மக்களுக்கு முக்கியமாக பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் நலன்புரி சேவைகள் வழங்கப்பட வேண்டும் என்ற நிபந்தனை முன்வைக்கப்பட்டிருக்கிறது.

பொதுவாக சர்வதேச நாணய நிதியமானது இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்குமாறு பரிந்துரைகளை முன்வைப்பதில்லை.

அரசாங்கத்தின் செலவுகளை குறைக்குமாறே பரிந்துரைகள் முன்வைக்கப்படும். ஆனால் இம்முறை பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான பொருளாதார ரீதியான உதவிகள், பொருளாதார வலுவூட்டல் செயல்பாடுகள் அவசியம் என்ற விடயம் முன்வைக்கப்பட்டிருக்கின்றது.

பட்ஜட் - 2024

இந்த பின்னணியிலேயே எதிர்வரும் 2024ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் முன்வைக்கப்படவுள்ள நிலையில் அது குறித்து ஆராய வேண்டியிருக்கிறது. எதிர்வரும் மாதம் 13ஆம் திகதி 2024ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிதியமைச்சர் என்ற ரீதியில் முன்வைக்கவுள்ளார். 

இந்த வரவு - செலவுத் திட்டத்தின் ஊடாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு எவ்வாறான நிவாரணங்கள் வழங்கப்படும்? அரசாங்க ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படுமா? வடக்கு, கிழக்கில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வேலைவாய்ப்புக்களை அதிகரிக்கின்ற, வறுமையை குறைக்கின்ற திட்டங்கள் முன்வைக்கப்படுமா? வாழ்வாதாரத்தை உயர்த்தவும் அவர்களது சமூக அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ளவும் முயற்சிகள், பரிந்துரைகள் முன்வைக்கப்படுமா? கடந்த 2022ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எவ்வாறான நிவாரண உதவிகள் வழங்கப்படும்? பொருளாதார வலுவூட்டல் திட்டங்கள் எவ்வாறு இடம்பெறப்போகின்றன என்பன தொடர்பான கேள்விகள் மக்கள் மத்தியில் எழுந்திருக்கின்றன.

பல்வேறு நெருக்கடிகள் இந்த பொருளாதார சிக்கல் காரணமாக மக்களுக்கு கடந்த காலங்களில் ஏற்பட்டன. வறுமை அதிகரிப்பு, வேலையின்மை உயர்வு, வருமானம் வீழ்ச்சி, சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக முயற்சிகள் பாதிப்பு, புத்திஜீவிகள் மற்றும் அறிவாளிகள் நாட்டை விட்டு வெளியேறுகின்றமை, வைத்தியத்துறையில் ஏற்பட்டிருக்கின்ற நெருக்கடிகள், கல்வித்துறையில் ஏற்பட்டிருக்கின்ற சிக்கல்கள் போன்றவற்றுக்கு இந்த வரவு - செலவுத் திட்டத்தின் ஊடாக எவ்வாறு தீர்வு காணப்படும்? எவ்வாறான வேலைத்திட்டங்கள் முன்வைக்கப்படும்? எவ்வாறான உதவிகள் வழங்கப்படும்? என்பது தொடர்பான கேள்விகள் தொடர்ச்சியாக எழுப்பப்படுகின்றன. என்ன கிடைக்கும்? இதற்கு அரசாங்கம் எவ்வாறு பதிலளிக்கப் போகிறது என்பதே இங்கு மிக முக்கியமானதாக இருக்கின்றது.

மிக முக்கியமாக தற்போது இடம்பெற்றுக்கொண்டிருந்த, இடம்பெற்றுக்கொண்டிருக்கிற மூளைச்சாலைகளின் வெளியேற்றத்தை தடுப்பதற்கு இந்த வரவு - செலவுத் திட்டத்தின் ஊடாக அரசாங்கம் எவ்வாறான வேலைத்திட்டங்களை முன்வைக்கப் போகிறது என்பதே மிக முக்கியமாகும். அதுமட்டுமன்றி, மக்கள் மத்தியில் ஒரு புதிய எதிர்பார்ப்பினை ஏற்படுத்தவேண்டிய தேவை காணப்படுகிறது.

அரசாங்க ஊழியர்களை பொறுத்தவரையில் குறிப்பிடத்தக்க சம்பள உயர்வை எதிர்பார்க்கின்றனர். தற்போதைய சம்பளத்தின் ஊடாக தமது வாழ்க்கைச் செலவை எதிர்கொள்ள முடியாமல் தத்தளித்துக்கொண்டிருக்கின்ற அரசாங்க ஊழியர்கள் சம்பள அதிகரிப்பு வேண்டும் என்பதனை வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்களையும் நடத்துகின்றனர். அரசாங்க ஊழியர்களை பொறுத்தவரையில் வரவு - செலவுத் திட்டத்தின் ஊடாக இருபதாயிரம் ரூபா சம்பள அதிகரிப்பை எதிர்பார்த்திருக்கின்றனர். அது எப்படி அரசாங்கத்தினால் கையாளப்படப் போகிறது என்பதே இங்கு முக்கியமாகும்.

ஜனாதிபதி வெளியிட்ட தகவல் 

இது தொடர்பில் விடயங்களை வெளிப்படுத்தியுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் வரவு - செலவுத் திட்டத்தின் மூலம் அனைத்து அரச ஊழியர்களின் சம்பளத்தையும் அதிகரிக்க நடவடிக்கை எடுத்திருப்பதாக அறிவித்திருக்கிறார். அதுமட்டுமன்றி, தனியார் துறையினருக்கும் சம்பளத்தை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் கடந்த திங்கட்கிழமை மாலை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தெரிவித்திருக்கிறார். 

அரசாங்க ஊழியர்களை பொறுத்தவரையில், ஜனாதிபதியின் தகவல் ஆறுதல் அளிப்பதாக இருந்தாலும் எவ்வளவினால் சம்பளம் அதிகரிக்கப்படும் என்பது கேள்விக்குறியாகவே இருக்கின்றது.

தொழிற்சங்கங்கள் கூறுகின்ற வகையில் 20,000 ரூபா சம்பளம் அதிகரிப்பு வழங்கப்படுமா? அல்லது 5000 ரூபாய் வழங்கப்படுமா அல்லது பத்தாயிரம் ரூபாய் வழங்கப்படுமா? எவ்வாறு இந்த சம்பள அதிகரிப்பு யோசனை உள்ளடக்கப்படப் போகிறது என்பதும் ஒரு கேள்விக்குறியாக இருக்கின்றது.

ஆனால், அரச ஊழியர்கள் இம்முறை வரவு - செலவுத் திட்டத்தில் பாரிய எதிர்பார்ப்பை வைத்திருக்கின்றனர். அதற்கு அரசாங்கம் எவ்வாறு பதிலளிக்கப் போகிறது என்பது முக்கியமாகும்.

நாணய நிதியத்தின் பரிந்துரைகள்

அதுமட்டுமின்றி, இந்த வரவு - செலவு திட்டமானது முற்றுமுழுதாக சர்வதேச நாணயத்தின் பரிந்துரைகளுக்கும் நிபந்தனைகளுக்கும் உட்பட்ட வகையில் உருவாக்கப்படும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. காரணம் தற்போது அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்துக்குள் சென்றிருக்கிறது.

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு 48 மாதங்களில் 2.9 பில்லியன் டொலர்களை வழங்குவதற்கு முன்வந்துள்ளது. தற்போது அதன் இரண்டாவது கடன் தவணையை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. பொருளாதார மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மற்றும் கடன் மறுசீரமைப்பு பணிகள் என்பன முன்னெடுக்கப்படுகின்றன.

சர்வதேச நாணய நிதியமானது இலங்கைக்கு முன் வைத்திருக்கின்ற நிபந்தனைகளில் வரவு - செலவுத் திட்டத்தின் துண்டுவிழும் தொகை மிக குறைவாக இருக்க வேண்டும் என்று  கூறப்பட்டிருக்கின்றது. மொத்த தேசிய உற்பத்தியில் குறைந்தளவிலேயே பட்ஜட் பற்றாக்குறை இருக்க வேண்டும் என்பது ஒரு முக்கியமான நிபந்தனையாக இருக்கின்றது. எனவே, அரசாங்கம் செலவுகளை இந்த பட்ஜட்டில் அவசியத்தை கொண்டுள்ளது.

ஆனால் அதற்காக நெருக்கடிகளினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும்  நிவாரணங்களை குறைத்துவிடக்கூடாது. 

மேலும், வாழ்க்கைச் செலவு மற்றும் சேவைகளை, கட்டணங்களை குறைப்பதற்கு எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் வலுவிழந்துவிடக் கூடாது. பட்ஜட்டின் யோசனைகள் பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட மக்களை வலுவூட்டுவதாக அமையவேண்டியது அவசியமாகும்.

சிறிய, நடுத்தர வர்த்தகர்களை வலுவூட்ட யோசனைகள் அவசியம்

2024ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டமானது மிக முக்கியமானதாக அமைந்துள்ளது. நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக ஊக்குவிப்பதற்கும் பாதிக்கப்பட்ட மக்களை கட்டி எழுப்புவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். வெறுமனே உதவிகளை மட்டும் செய்வதற்கு பதிலாக அந்த மக்களை பொருளாதார ரீதியாக வலுவூட்டுவதற்கான நடவடிக்கை முக்கியமாகும்.

வடக்கு, கிழக்கு 

வடக்கு, கிழக்கு பகுதிகளில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை வலுவூட்டுவதற்கான வேலைத்திட்டங்கள் பட்ஜட்டில் முன்வைக்கப்படுவது அவசியமாகும். அதாவது வடக்கு, கிழக்கில் அதிகளவில் தொழில் வாய்ப்புக்களை உருவாக்குவதற்கான யோசனைகள் முன்வைக்கப்படவேண்டும். அந்த மக்களுக்கான பொருளாதார அபிவிருத்தி மற்றும் பொருளாதார வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும். விவசாய துறை மற்றும் மீன்பிடி, சுயதொழில் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அந்த மக்கள் நெருக்கடிகளை சந்தித்திருக்கின்றனர். அவர்களுக்கான அனைத்து வசதிகளும் பொருளாதார வலுவூட்டலும் மிக அவசியமாகவுள்ளது. 

மலையகம் அதேபோன்று மலையகத்திலும்  மக்கள் அடிப்படை வசதிகள் இன்றியும் குறைந்த வருமானம் காரணமாகவும் திண்டாடுகின்றனர். அவர்களுக்கான சகல வசதிகளும் பட்ஜட் ஊடாக ஆராயப்படுவது மிக அவசியமாகும். அது தொடர்பான வேலைத்திட்டங்களும் கொள்கை வகுப்புகளும் இடம்பெறுவதை உறுதிப்படுத்துவது கட்டாயமாகும்.

சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்துக்குள் இலங்கை சென்று கிட்டத்தட்ட 10 மாதங்களின் பின்னர் இந்த பட்ஜட் முன்வைக்கப்படுகின்றது. எனவே இது முற்றுமுழுதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு உட்பட்ட வரவு - செலவுத் திட்டமாக இருக்கும் என்பதனை ஊகிக்க முடிகின்றது.

ஆனால் நலிவுற்ற மக்களின் நிலை மற்றும் சிறிய நடுத்தர வர்த்தக முயற்சியாளர்கள் தொடர்பில் நடவடிக்கைகள் அவசியமாகும். சிறிய, நடுத்தர வர்த்தக முயற்சியாளர்கள் இந்த நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருக்கின்றனர். தொழில் வாய்ப்புகளை உருவாக்குகின்றவர்களாகவும் வேலையின்மை, வறுமையை குறைப்பவர்களாகவும் பங்களிப்பை வழங்குகின்றனர்.

மக்களின் எதிர்பார்ப்புக்கள்

அடுத்த வருடத்துக்கான பட்ஜட் தொடர்பில் பல்வேறு எதிர்பார்ப்புகள் மக்கள் மத்தியில் காணப்படுகின்றன. அரசாங்க ஊழியர்கள் மத்தியில் சம்பள அதிகரிப்பு எதிர்பார்ப்பு, தமது வர்த்தகங்களை முன்னெடுத்து செல்வதற்கான சிறிய, நடுத்தர வர்த்தகர்களின் தேவைகள், வடக்கு, கிழக்கு, மலையக மக்களின் பொருளாதார வலுவூட்டலுக்கான அவசியம், மருத்துவ துறையினரின் எதிர்பார்ப்புக்கள், விவசாயிகள், தனியார் துறை ஊழியர்கள் என பலதரப்பட்டவர்களின் எதிர்பார்ப்பு என பட்டியல் நீண்டுகொண்டே செல்கின்றது. இவற்றை ஈடு செய்வதாகவும் 2022 பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட மக்களை வலுவூட்டுவதாகவும் அடுத்த வருடத்துக்கான பட்ஜட் அமைய வேண்டும்.

எனவே 13ஆம் திகதி முன்வைக்கப்படுகின்ற வரவு - செலவுத் திட்டத்தின் முன்மொழிவுகள், யோசனைகள் எவ்வாறு இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right