இலங்கையிலிருந்து தமிழகத்துக்கு சென்று, அங்கு அகதி முகாம்களில் “நாடற்றவர்களாக” இருக்கும் ஆயிரக்கணக்கானவர்களுக்கு தமிழக அரசின் உயர்நிலைக் குழுவின் பரிந்துரையை இந்திய மத்திய அரசு சாதகமாக பரிசீலித்தால், இந்திய குடியுரிமை கிடைக்க வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாடு அரசு அமைத்த உயர்மட்ட குழுவின் இப்பரிந்துரை, கடந்த ஒக்டோபர் 22ஆம் திகதி கோயமுத்தூரில் 'மலையகம் 200' என்ற தொனிப்பொருளில் இடம்பெற்ற சர்வதேச மாநாட்டில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டின்போது, அந்த உயர்மட்ட ஆலோசனைக் குழுவின் உறுப்பினரான பேராசிரியர் இரா. இளம்பரிதி இந்த பரிந்துரையை ஊடகவியலாளர்களிடம், “இலங்கை தமிழர்களின் நலன்கள் தொடர்பில் அமைக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் உயர்மட்டக் குழு தனது இடைக்கால அறிக்கையில் தமிழக முகாம்களில் நாடற்றவர்களாக உள்ளவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குவதற்கு பரிந்துரை செய்துள்ளது” என தெரிவித்துள்ளார்.
அந்த இடைக்கால அறிக்கையானது தமிழ்நாட்டிலுள்ள அனைத்து முகாம்களுக்கும் விஜயம் செய்து, அங்கு தங்கியுள்ளோரிடம் உரையாடி, தரவுகளைப் பெற்று, அதை ஆய்வு செய்து ஒருங்கிணைத்த பின்னரே தயாரிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்திலுள்ள முகாம்கள் மற்றும் அதற்கு வெளியில் மிக நீண்டகாலமாக வாழ்ந்துவரும் இலங்கை தமிழர்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து, அதற்கு குறுகியகால மற்றும் நீண்டகால அடிப்படையில் சாத்தியப்படக்கூடிய தீர்வுகளை கண்டறிவதற்காக அரசால் இந்த குழு அமைக்கப்பட்டது.
முன்னதாக இந்த பன்னாட்டு மாநாட்டை ஆரம்பித்து வைத்து, உரையாற்றிய, தமிழ்நாட்டை ஆளும் திராவிட முன்னேற்ற கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, தமிழ்நாட்டின் பல்வேறு அகதி முகாம்களில் தங்கியுள்ளவர்கள் குறித்து இந்திய மத்திய அரசு பாராமுகமாகவே உள்ளது என விமர்சித்தார்.
“தமிழ்நாட்டிலுள்ள முகாம்களில் தங்கியுள்ள இலங்கை அகதிகள் குறித்து டெல்லிக்கு மிகக் குறைந்தளவே புரிதல் உள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் தமிழக முதலமைச்சர் இந்த உயர்மட்ட குழுவின் அறிக்கையை ஆராய்ந்துகொண்டிருப்பதாகவும், முகாம்களில் உள்ளவர்களை பொருளாதார ரீதியில் உயர்த்துவதில் அவர் முனைப்பாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்தியாவில் உள்ளவர்களுக்கு குடியுரிமை வழங்குவது மத்திய அரசின் ஆளுமைக்கு உட்பட்ட விடயமாகும். அது தொடர்பிலான அனைத்து தீர்மானங்களையும் டில்லியே எடுக்க முடியும். மாநில அரசுகளிடமிருந்து வரும் ஆலோசனைகள் பரிந்துரைகளாக மாத்திரமே இருக்க முடியும்.
எனினும், அண்மையில் சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் ஜி.ஆர்.சுவாமிநாதன் அளித்த தீர்ப்பின் அடிப்படையில், அகதி முகாமிலிருந்து பெண் ஒருவருக்கு குடியுரிமை வழங்கப்பட்டு, பின்னர் அவர் இந்தியக் கடவுச்சீட்டும் பெற்றார் என்பது கவனிக்கத்தக்கது.
அந்த தீர்ப்பும், அதையொட்டிய நடவடிக்கையும், மற்றவர்களுக்கும் அதே போன்று வழிவகுக்கும் என்று அந்த உயர்மட்டக் குழு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த 'மலையகம் 200' மாநாட்டில் பங்குபெற்ற இலங்கையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ், மலையக தமிழர்களின் பிரச்சினையை மிகவும் எளிய முறையில் மாநாட்டு பங்கேற்பாளர்களுக்கு விளக்கினார்.
“இலங்கையில் நாங்கள் இந்தியத் தமிழர்களாக அடையாளப்படுத்தப்படுகிறோம். இந்தியாவில் நாங்கள் சிலோன் தமிழர்கள் என்றழைக்கப்படுகிறோம். ஆனால் வருத்தமளிக்கும் வகையில் தமிழக அகதி முகாம்களில் இந்திய வம்சாவளி தமிழர்கள் சுமார் 30,000 பேர் நாடற்ற நிலையில் உள்ளனர்”.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினரும், கட்சியின் துணைப் பொதுச்செயலாளருமான ஆ.ராசா, தனது குடும்பத்துக்கும் மலையத்துக்கும் உள்ள தொடர்பை நினைவுபடுத்தி உரையாற்றினார். தனது மூத்த சகோதரர் இலங்கையின் மலையகத்தில் பிறந்தவர் எனவும், இந்த மாநாட்டில் எழுப்பப்படும் பிரச்சினைகளை மேலதிகமாக ஆராய்ந்து தமிழக முதல்வருடன் விவாதித்து ஆவணம் செய்வதாக தெரிவித்தார்.
இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக மலையக மக்கள் தொடர்பான மூன்று அமர்வுகள் இடம்பெற்றன. தாயகம் திரும்பியோர் அமர்வு, மலையகத் தமிழர் அமர்வு மற்றும் ஏதிலியர் அமர்வு என அவை வகைப்படுத்தப்பட்டிருந்தன.
மலையகத் தமிழர்கள் தொடர்பான அமர்வில் இலங்கையில் வந்திருந்த பிரதிநிதிகள் பங்கேற்று இங்கிருக்கும் பிரச்சினைகள், தோட்டத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள், சமூகப் பொருளாதார சவால்கள் ஆகியவை குறித்து அரங்கில் விளக்கமளித்தனர்.
ஏதிலியர்கள் தொடர்பான அமர்வுக்கு பேராசிரியர் இரா. இளம்பரிதி தலைமையேற்று, தமிழ்நாட்டின் அகதி முகாம்களில் உள்ளவர்கள் தொடர்பில் தாங்கள் நடத்திய ஆய்வு குறித்து விளக்கமளித்தார்.
இந்த அமர்வுகளில் 1964ஆம் ஆண்டு “தீய எண்ணத்துடன்” உருவாக்கப்பட்ட சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தம் தொடர்பில் பேசப்பட்டது. அந்த உடன்படிக்கை எப்படி இந்த மக்களைப் பிளவுபடுத்தி, பெருந்தொகையான எண்ணிக்கையினரை இந்தியாவுக்கு அனுப்பி, குடும்பங்கள் மற்றும் உறவுகளைப் பிரித்து மீள முடியாத துயரத்தை ஏற்படுத்தியது என அவையோருக்கு விளங்கப்படுத்தப்பட்டது.
மலையக, தாயகம் திரும்பிய தமிழருக்கான இயக்கம் ஏற்பாடு செய்திருந்த இந்த மாநாட்டில் 11 தீர்மானங்கள் வாசித்து நிறைவேற்றப்பட்டன. அதில் முதன்மையாக பொறுப்புக்கூறல் இடம்பெற்றிருந்தது.
“200 வருடங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு கூலித் தொழிலாளர்களாகக் கொண்டு செல்லப்பட்ட மக்கள், இன்று இலங்கையில் மலையகத் தமிழர்களாகவும், இந்தியாவில் தாயகம் திரும்பியோராகவும், தமிழ்நாட்டில் ஏதிலிகளாகவும் சிதறிக்கிடக்கின்றனர். இப்படி சிதறடிக்கப்பட்டமைக்கு இலங்கை அரசும், இந்திய மத்திய அரசும் பிரித்தானிய அரசும் பொறுப்புக்கூற வேண்டும்” என்பது முதல் தீர்மானம்.
மலையகத் தமிழர்கள் தனியொரு சமூகமாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என மற்றுமொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
“மலையகத் தமிழர்கள் ஒரு தனித்த மக்கள் சமூகம் என இலங்கை அரசு சட்ட வகையில் அங்கீகரிக்க வேண்டும். கடந்த 200 ஆண்டுகளில் ஆங்கிலேய அரசால் பல்வேறு வேலைகளில் ஈடுபடுவதற்காக இலங்கைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தமிழர்கள் அனைவரும் மலையகத் தமிழர்களாக வரையறுக்க வேண்டும்”.
இலங்கையில் ஆட்சி முறை மாற்றி அமைக்கப்பட வேண்டும் என மற்றொரு தீர்மானம் வலியுறுத்தியது.
“இலங்கையின் ஒற்றையாட்சி அரசமைப்பை மாற்றி, ஒரு கூட்டாட்சி ஏற்பாட்டின் முலம் தம்மைத் தாமே நிர்வகித்துக்கொள்ளும் வகையில் மலையகத் தமிழர்களுக்கு அரசியல் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்”.
"மலையகத்தில் ஒரு பல்கலைக்கழகம் அமைக்கப்பட வேண்டுமென மற்றொரு தீர்மானத்தின் மூலம் கோரப்பட்டது."
“பெருந்தோட்ட பொருளாதார மேம்பாட்டை மையமாக கொண்டு மலையகத்தில் மலையகப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட வேண்டும்."
"மலையக மக்களுக்கு காணி உரிமையும், வீட்டு உரிமையும் வழங்குவதற்கு இலங்கை அரசு முன்வர வேண்டும்."
அந்த மாநாட்டின் முதல் தீர்மானத்தில் மலையக மக்களின் பிரச்சினைகளுக்கு இந்திய, இலங்கை, பிரித்தானிய அரசுகள் பொறுப்புக்கூற வேண்டும் என வலியுறுத்தப்பட்ட நிலையில், கடைசி தீர்மானத்தில் அதே அரசுகள் பொருளாதார உதவிகளைச் செய்ய வேண்டும் எனவும் கோரப்பட்டது.
இலங்கையில் உள்ள ஏனைய இனச் சமூகங்களை விட அனைத்து வகையிலும் பின்தங்கியுள்ள மலையக மக்களின் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்த பொருளாதார உதவிகள் வழங்குவதற்கு இலங்கை, இந்திய, பிரித்தானிய அரசுகள் முன்வர வேண்டும்”.
இந்த ஆண்டு ஜூன் மாதம் திருச்சி மாநகரில் இதே போன்றதொரு மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டிலும், மலையக மக்கள் பிளவுபட்டு இந்தியா இலங்கையில் வாழ்வது, அவர்கள் அனுபவிக்கும் துயரங்கள், சமூகப் பொருளாதார பின்னடைவுகள், பல தசாப்தங்களாக வேலை வாய்ப்புகள் மற்றும் சொத்துக்களை இழந்து துன்புறுவது ஆகியவற்றுக்காக இந்தியா, இலங்கை மற்றும் பிரித்தானிய அரசுகளை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும். அவர்களால் 200 ஆண்டுகளாக இழைக்கப்பட்ட பாரிய மனித உரிமை மீறல்கள் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டு இந்த மூன்று நாடுகளும் அந்த நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM