விடுதலைப் புலிகள் அமைப்பை விடவும் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் பேரவை மிகவும் ஆபத்தான அமைப்பு எனவும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் செயற்பாடுகளை விடவும், விக்னேஸ்வரனின் அரசியல் செயற்பாடுகள் மிகவும் பயங்கரமானது என பொது பல சேனா அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

கொழும்பு - புறக்கோட்டையில் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ள அங்கவீனமுற்ற இராணுவத்தினரை நேற்று சந்தித்து ஆசிர்வாதம் வழங்கிய போதே பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,

புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் பிரிவினைவாதத்தை வெற்றிகொள்ள தீவிரமான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் செயற்பாடுகளை விடவும், விக்னேஸ்வரனின் இந்த அரசியல் முன்னணி மிகவும் பயங்கரமானது. பிரபாகரன் இருந்த காலத்தில் எமக்கான அச்சுறுத்தல் என்னவென்று தெரிந்தது.

எனினும் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் மிகவும் தீவிரமாக சர்வதேச ரீதியில் அவர்களது பிரிவினைவாதத்தை வெற்றிகொள்ள செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளனர். தெற்கில் அரசாங்கம் ஆட்சி செய்துகொண்டிருப்பதாக கூறினாலும் வடக்கில் அரசாங்கத்தின் ஆட்சி நடைபெறவில்லை. வடக்கில் சிங்களவர்களின் வாழ்வதற்கான உரிமை இல்லாமல்போயுள்ளது. கிளிநொச்சி உள்ளிட்ட இடங்களில் வாழ்ந்த சிங்களவர்களை துரத்தயடிக்கின்றனர்.

குறைந்தது பிரதமர் மற்றும் ஜனாதிபதி காரியாலயத்தில் இருந்து அனுப்பும் சிங்கள மொழியிலான கடிதங்களைக் கூட குப்பைத்தொட்டிக்குள் போடும் நிலைமை வடக்கில் காணப்படுகின்றது. இராணுவம் மீட்டெடுத்த இந்த அன்னை பூமியை பத்திரம் ஒன்றில் எழுதிக்கொடுக்க இந்த நாட்டு மக்கள் தயாரில்லை. இராணுவம் இருக்கும் வரை அது கனவிலும் நடைபெறாது.

தற்போது வடக்கில் அரசியல் செய்து வரும் வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்கிணேஸ்வரன் எவ்வாறானவர் என்பது தற்போது எம் மக்கள் அனைவருக்கும் தெரிந்துவிட்டது. அவர் தமிழ் புலம்பெயர் அமைப்புக்களின் செயற்பாட்டினடிப்படையிலேயே செயற்படுகின்றார். அவரால் உருவாக்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவையும் பயங்கரமானது என்றார்.