வயலினில் பதில் சொல்லும் 'டனித்' 

Published By: Nanthini

30 Oct, 2023 | 07:10 PM
image

(மா. உஷாநந்தினி) 

டைட்டானிக் கப்பல் 1921இல் வடக்கு அட்லாண்டிக் கடலில் மூழ்கிய கதை பலருக்கும் தெரியும். டைட்டானிக் கொஞ்சம் கொஞ்சமாக கடலில் மூழ்கிக்கொண்டிருந்த கடைசி  நிமிடங்களில் கூட வாலஸ் ஹார்ட்லி (Wallace Hartley) என்கிற இசைக்கலைஞர் மற்றும் அவர் தலைமையிலான இசைக்குழுவினர் ஒரு பக்கமாக நின்று வயலின் வாசித்துக்கொண்டிருந்தனர்.

வரப்போகும் உயிராபத்தை பற்றி கடுகளவும் சிந்திக்காமல் தாம் அதிகம் விரும்பிய வயலின் இசையோடு லயித்திருந்த அந்த கலைஞர்களை நினைவுபடுத்துகிறார், மட்டக்களப்பை சேர்ந்த இளம் வயலின் இசைக்கலைஞர் கெமிலோ டனித்.

கொரோனா பரவத் தொடங்கிய நாட்களில் உலகமே முடக்க நிலையில் இருந்தபோது, நோயின் தீவிரம், அதிகரிக்கும் உயிரிழப்புகளை எண்ணி மரண பீதி ஏற்பட்டு, மனதளவிலும் உடலளவிலும் தனிமையும் விரக்தியுமாக வாழ்ந்தவர்களுக்கு மத்தியில் 17 வயதான டனித் தனித்துவமானவர்.

'டைட்டானிக்' வயலின் கலைஞர்களை போல நோய் பரவும் கடினமான சூழலை, தனக்கு பிடித்த இசையை கற்பதற்கான வாய்ப்பாக மாற்றிக்கொண்டவர்.

இவர் ஊரடங்கில் வயலின் கற்ற விதம், இசை அனுபவங்கள், வயலினுக்கும் தனக்குமான பிணைப்பு, வயலினில் பதில் சொல்லும் வித்தை என பல விடயங்களை ஆர்வத்தோடு பகிர்ந்துகொண்ட டனித் இவ்வாறு தொடர்ந்தார்...

"வயலினை பற்றி எதுவும் தெரியாது... ஆனால், வயலின் வாங்கிவிட்டேன்"

"வயலின் வாசிக்கும் ஆசையில் வயலின் எப்படி இருக்கும் என்றே தெரியாமல், 2019 டிசம்பரில் எனக்கென்று ஒரு வயலின் வாங்கினேன். 

வயலினை எப்படி வாசிப்பது? அதில் எத்தனை தந்திகள்? ஒன்றும் தெரியாது. சிலர், 5 தந்திகள் என்றார்கள், சிலர் 10 என்றார்கள். ஆனால், வாங்கிய பின்னர்தான் பார்த்து தெரிந்துகொண்டேன்... வயலினில் 4 தந்திகள் மட்டுமே இருக்கின்றன என்று.  

அது கொரோனா லொக்டவுன் காலப்பகுதி... 

கைப்பேசியில் யூடியூப் வழியாக வீடியோக்களை பார்த்து வயலினை எப்படி கையாள்வது என்பதை ஒவ்வொன்றாய் பார்த்து, அவதானித்து, கிரகித்து, கொஞ்சம் கொஞ்சமாக நானாக தெரிந்துகொண்டேன்.

முதல் நாள், யாருடைய உதவியும் இல்லாமல் எனது சொந்த முயற்சியில் யூடியூப் பார்த்து 'ஸரிகமபதநிஸ' வாசிக்க பழகினேன். அப்படியே ஸ்வரங்களை வாசிக்க பயிற்சி எடுத்துக்கொண்டேன்.

ஒரு சில பாடல்களை வயலினில் வாசிக்க முடிந்தது. ஆனாலும், எனது விரல்கள் வயலின் தந்திகளை அணுகிய விதம் தவறாகவே இருந்தது.

என்னதான் நான் வீடியோக்களை பார்த்து வயலின் கற்க முயன்றாலும், ஒரு குருவின் வழிகாட்டல் இல்லாமல் எதையும் முறையாக கற்க முடியாது என்பதை புரிந்துகொண்டேன்.

"எனது குரு..."

"எனது முதல் குரு சிவாந்தி குமாரசாமி. அவர்தான் எனக்கு வயலினில் அடிப்படையை கற்பித்தார். இன்றைய எனது சாதனைகளுக்கு அத்திவாரம் போட்டவர் அவர்தான்.

அதன் பிறகு கொழும்பிலும் இந்தியாவிலும் கிட்டத்தட்ட 15 - 20 பேரிடம் ஒன்லைன் ஊடாக வயலின் பயிற்சி எடுத்துக்கொண்டேன்.

எனது தற்போதைய குரு, இலங்கையின் தலைசிறந்த கர்நாடக இசைக் கலைஞர் கருணாகரன் ஐயாவின் மகளான சியாமளாங்கி கருணாகரன் ஆவார்."

"நான் வயலினை விரும்ப காரணமானவர்..."

"கொரோனா பரவல் ஆரம்பிப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு எங்களது மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியில் ஒரு பரிசளிப்பு விழா நடந்தது. அதில் எனது வகுப்புத் தோழனுக்கு அவனது வயலின் இசைக்கருவி வாசிக்கும் திறமையால் தேசிய மட்ட போட்டியில் முதல் பரிசு கிடைத்ததாக அறிவித்து, பாராட்டினார்கள். அதை பார்த்த எனக்கும் வயலின் வாசிக்க வேண்டும் என்கிற ஆர்வமும் ஆசையும் ஏற்பட்டது.

பாடசாலையில் சங்கீதத்தை ஒரு பாடமாக எடுத்தபோது, எனக்கு சங்கீதத்தில் ஒன்றும் தெரியாது. வயலினை பற்றி எதுவும் தெரியாது. அப்படியிருந்த எனக்கு வயலினில் விருப்பம் உண்டாக காரணமே தேசிய மட்ட போட்டியில் வென்ற எனது தோழனும், மாணவர்களின் தனித் திறமைகளை ஏற்றுக்கொள்ளும் எமது பாடசாலையும்தான்.

விரலில் இரத்தம்

"வயலின் வாசிக்க ஆரம்பித்த காலப்பகுதியில் கொஞ்சம் கடினமாகவே இருந்தது. வயலினின் தந்திகள் இறுக்கமானது என்பதால் விரல்களில் நிறைய கீறல்கள் ஏற்பட்டு வலியை உணர்ந்திருக்கிறேன்.

ஒரு முறை, வேகமாக ஒரு பாடலை வாசித்துப் பயின்றபோது தந்திகளால் கீறுபட்டு, விரலில் இரத்தமே வந்துவிட்டது. ஆனால், இப்போதெல்லாம் வலிப்பதில்லை. வயலினை மிக இலகுவாக கையாள்கிறேன். விரல்களும் தந்திகளுக்கு பழக்கப்பட்டு வன்மையாகிவிட்டன.

"நானும் வயலினும்"

"வயலின் எப்போதும் என்னுடனேயே இருக்கும். எனது அறையில் எந்நேரமும் என் பார்வையில் படும்படி வயலினை வைத்திருப்பேன். சுற்றுலா, நீண்ட தூர பிரயாணம், உறவினர்களின் வீடுகள் என்று நான் போகும் இடங்களுக்கெல்லாம் வயலினை எடுத்துச் செல்வேன்.

வயலினில் பதில் சொல்லும் வித்தை

வயலினில் நிறைய சாகசங்கள் செய்கிறார்கள். சாதாரண வயலின்களில் 4 தந்திகள் இருக்கின்றன. அதையும் தாண்டி 5, 6 தந்திகளில் வாசிப்பது, இரட்டை வயலின்களில் வாசிப்பவர்களையும் நாம் பார்க்கிறோம்.

நான் எப்படியென்றால், சில சமயங்களில் பேச்சையே வயலின் இசையாக மாற்றி பதிலளிப்பதை விளையாட்டாக செய்வேன்.

"நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?" என்று என்னிடம் யாராவது கேட்டால், "நான் நலமாக இருக்கிறேன், நீங்கள் எப்படி?" என்கிற பதிலை அதே ஒலியசைவில், வயலின் இசையில் கொடுக்க முடியும். அது பொருத்தமாக அமைந்திருக்கிறது என நம்புகிறேன்.

சொந்த கற்பனையில், புதிது புதிதாக நுட்பமாக வாசிக்கும் திறமையை வளர்த்துக்கொண்டால் மாத்திரமே நாம் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்க முடியும்.

வயலினில் வேகம் அதிகம்

"வயலின் இசைக்கருவிக்கு எத்தனையோ சிறப்புகள் இருக்கின்றன. நான் வயலின் வாசிப்பதால்தான் இப்படி சொல்கிறேன் என்றில்லை.

உதாரணத்துக்கு, வீணையில் வேகமான வாசிப்புக்கு கடின பயிற்சிகள் தேவை. அத்தோடு விரல்களும் அந்தளவுக்கு ஒத்துழைக்க வேண்டும். தீவிர பயிற்சி எடுத்துக்கொண்டால் மட்டுமே வேகமாக வாசிக்க முடியும். ஆனால், வயலினில் இலகுவாக வேகத்தை அதிகமாக்கி வாசிக்க முடியும்.

வேறிடத்துக்கு நாம் எளிதாக எடுத்துச் செல்லவும் வீணையை விட வயலின் செளகரியமான கருவி. வயலின் தோற்றத்தில் கவர்ச்சிகரமானது, நம்மோடு பயணிக்க ஏதுவான ஒரு இசைக்கருவி.

ஒரு பாடலை வார்த்தை சுத்தமாக வாசிக்கவும் வயலின் பொருத்தமாக இருக்கும். பாடலில் சந்தங்கள், கமகங்கள், ஏற்ற இறக்கங்கள், ஸ்வர சஞ்சாரங்கள் என அனைத்தையும் வயலினில் இசைக்க முடியும்.

வயலினை பக்க வாத்தியமாகவும் வாசிக்கலாம். தனியாகவும் வாசிக்கலாம். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

பக்க வாத்தியம் வாசித்த அனுபவம்

"நிறைய கச்சேரிகளில் பக்க வாத்தியமாக வயலின் வாசித்த அனுபவங்களும் உண்டு. கச்சேரிகளில் பாடும் அனேகமான இளையவர்கள் பாடலை உள்ளது உள்ளபடி பாடக்கூடியவர்களாக இருப்பார்கள். ஆனால், மூத்த கர்நாடக இசைப் பாடகர்கள் நிறைய பாடல்களை கமகங்கள், சங்கதிகள், ஸ்வர சஞ்சாரங்களோடு மெருகேற்றி பாடுபவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு பக்க வாத்தியம் இசைப்பதன் ஊடாக நானும் நிறைய கற்றுக்கொண்டிருக்கிறேன்." என கூறினார். 

மருத்துவமும் இசையும்

டனித் 2021இல் வயலின் இசைக்கும் சர்வதேச போட்டியில் இரண்டாம் இடத்தையும், 2022ஆம் ஆண்டு தேசிய போட்டியில் முதலிடத்தையும் பெற்றார். இந்தியாவில் ராபா மீடியா நடத்திய வயலினிசைப் போட்டியிலும் வென்று 'இசைக் கவின்மணி' பட்டத்தை பெற்றார்.

மிக இள வயதிலேயே விருதுகள், பட்டங்கள் என சாதித்த டனித்திடம் அவரது, இசைக்கு முன்னோடி யார் என கேட்டபோது,    

"தமிழகத்தின் விஜய் டிவி சுப்பர் சிங்கரில் வயலின் கலைஞராக பங்கேற்ற ரங்கப்ரியா அக்கா ஒரு பல் மருத்துவராகவும் சாதித்துக்கொண்டிருக்கிறார். அவரைப் ‍போல என்னாலும் மருத்துவம், இசை என இரு துறைகளிலும் முன்னேற முடியும் என தோன்றுகிறது...

இலட்சியம் 

"நான் இப்போது தரம் 12இல் பயோ படிக்கிறேன். மருத்துவராக அல்லாவிட்டாலும், மருத்துவத்துறையில் ஏதேனும் ஒரு நிலையில் அமர வேண்டும். அடுத்து, ஒரு சிறந்த இசைக்கலைஞராகவும் வர வேண்டும். கல்வி, இசை இரண்டிலும் ஒன்றையொன்று பாதிக்காமல் இலக்கை அடைவேன் என்று நம்புகிறேன்.

தென்னிந்திய இசைக் கலைஞர்களுக்கு வயலின் வாசித்த அனுபவம்  

"கிரிஷ் அண்ணா உள்ளிட்ட தென்னிந்திய திரையிசை பிரபலங்களின் இசை நிகழ்ச்சிகளில் வயலின் வாசிக்கும்போது இசையில் புது நுட்பங்களை அறிந்துகொள்ள முடிகிறது.

இசைக்குழுவில் நான் வயதில் சிறியவர் என்பதால் என்னை அவர்களின் பிள்ளையாக நினைத்து, ரொம்பவே உற்சாகப்படுத்துவார்கள்.

Glorious Iconic World Award - GIWA விருது விழாவில் நடிகை சினேகா அவர்கள் என்னை பார்த்து வியந்து "Professional Violinist" விருது வழங்கிய தருணம் எனக்கு ஸ்பெஷல்!

'குரு' தெரிவு முக்கியம்

"ஒரு முச்சக்கரவண்டியின் மூன்று டயர்களும்  வலுவாக இருந்தால்தான், வண்டி சீரான வேகத்தில் ஓடும். எந்தவொரு கல்வியும் அதே மாதிரிதான். அந்த மூன்று டயர்களில் ஒன்று, நமது குரு. இன்னொரு டயர், நமது முன்னேற்றத்துக்கு ஒத்துழைக்கும் பெற்றோர். மூன்றாவது டயர், கலை பயிலும் நாம். இந்த மூன்று பேரும் ஒரே சீராக சென்றால்தான் நமது கல்வியும் சீரான பாதையில் செல்லும்.

என்னதான் வீடியோக்களை பார்த்து வயலின் கற்றாலும், வாசிப்பில் வரக்கூடிய சந்தேகங்களை வீடியோ பின்னூட்டலில் (comment) கேட்டு பெறுவது சிரமமாக இருக்கும். அதுவே, ஒரு குருவை நாடி கற்றால், நம்மை அவர் சரியாக வழிநடத்துவார். ஆகவே, குரு என்பவர் மிக முக்கியமானவர்.

எந்தவொரு துறையானாலும் சரி, முன்னேற விரும்பும் நீங்கள், உங்கள் சந்தேகங்களையும் கருத்துக்களையும் அனுபவங்களையும் பகிரக்கூடிய, உங்களை புரிந்து கற்பிக்கும், உங்களுக்கு பிடித்த ஒரு குருவை தெரிவு செய்யுங்கள்..." என மாணவர்களுக்கான ஒரு செய்தியை பகர்ந்தார்.    

"இசைத் திறமைக்கு பணம் ஒரு தடையாகிவிடக் கூடாது" 

டனித், ஒன்றரை வருடங்களாக வயலின் ஒன்லைன் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார். இந்தியா, அமெரிக்கா, கனடாவிலிருந்தும் வயது வித்தியாசமின்றி பலதரப்பட்டவர்கள் இவரிடம் வயலின் கற்கிறார்கள்.

"மாணவர்களுக்கு திருப்தியான கட்டணங்களே இங்கு அறவிடப்படுகின்றன. திறமையிருந்தும் வசதி இல்லாத மாணவர்களின் இசை ஆர்வத்துக்கு பணம் ஒரு தடையாகிவிடக் கூடாது என்பதற்காக இலவச பயிற்சிகளையும் அளித்து வருகிறேன்" என்கிற டனித், சந்தர்ப்பத்தை காரணங்காட்டி, காலத்தை வீணடிக்காமல் இலக்கை நோக்கி ஓடும் இளைஞர்களுக்கு ஒரு முன்னுதாரணம். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தைப்பூசத் திருநாளில் கமலஹார சித்திரத்தேரில் வலம்...

2025-02-11 10:28:27
news-image

கனவுத் தேசம் - அனுபவப் பகிர்வு

2025-02-07 19:09:06
news-image

வாசுகி ஜெகதீஸ்வரனின் நெறியாள்கையிலான 150ஆவது அரங்கேற்றத்தில்...

2025-02-07 10:25:38
news-image

“கலாசூரி” வாசுகி ஜெகதீஸ்வரனின் நெறியாள்கையில் சஹானா...

2025-01-24 12:07:15
news-image

ஈழத்தமிழரங்கினை அந்திம காலம் வரை நேசித்த...

2025-01-18 16:50:18
news-image

‘இராவணனார்’ தெய்வீக மானிடர் (லங்கா பாங்கு...

2025-01-15 15:51:30
news-image

மலையக மக்களின் வாழ்வியலை, காத்திரமான சிந்தனைகளை...

2025-01-11 17:11:02
news-image

10 வயது சிறுமியின் நாட்டியப் பரிமாணம்!

2025-01-10 17:07:30
news-image

கலைகள் இருக்கும் வரை தமிழர்களின் பண்பாடும்...

2025-01-06 14:52:09
news-image

நாட்டியம் என்பது பெருங்கடல் : நான்...

2025-01-03 12:08:49
news-image

“வாழ்க்கைப் பயணத்துக்கான நம்பிக்கைத் துளியை கொடுப்பதே...

2024-12-29 13:27:25
news-image

அரச நாடக விருது விழா -...

2024-12-28 12:47:17