பாகிஸ்தானில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சிறுபான்மை இந்துக்களின் திருமணம் தொடர்பான சட்டமூலம் அந்நாட்டு நாடாளுமன்றில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. 

‘இந்துக்களின் திருமணச் சட்டம் 2017’ என்ற பெயரில் நிறைவேற்றப்பட்டுள்ள இந்தச் சட்டமூலமே, பாகிஸ்தானின் சிறுபான்மை இந்துக்கள் பேரில் இயற்றப்படவிருக்கும் முதலாவது தனிப்பட்ட சட்டமாகும்.

பாகிஸ்தான் நாடாளுமன்றில் நேற்று வெள்ளிக்கிழமை கொண்டுவரப்பட்ட இந்தச் சட்டமூலம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இச்சட்டமூலம் ஏற்கனவே பாகிஸ்தானின் கீழவையில் 2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முன்வைக்கப்பட்டது. கீழவையின் அங்கீகாரம் கிடைக்கப்பட்டதையடுத்தே மேலவையில் நேற்று முன்வைக்கப்பட்டது.

அவையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள இந்தச் சட்டமூலத்தில் பாகிஸ்தான் ஜனாதிபதியின் கையெழுத்துப் பெறப்பட்ட பின் இது சட்டமாக அமல்படுத்தப்படும்.

திருமணத்துக்கான அடிப்படை வயது 18, திருமணத்தை சட்ட முறைப்படி பதிவுசெய்வது, திருமணம், மறுமணம் என்பனவற்றுக்கான சட்டதிட்டங்கள் உள்ளிட்ட பொதுவான அம்சங்கள் உள்ள இந்தச் சட்டத்தை பாகிஸ்தான் இந்துக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்றும் கருதப்படுகிறது.

இச்சட்டமூலத்தைக் கொண்டுவருவதில், ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான ரமேஷ்குமார் வாங்க்வானி பெரும் ஆர்வம் கொண்டிருந்தார். தனது முயற்சிக்கு ஒப்புதல் அளித்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.