முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான நம்பிக்கை வாக்கெடுப்புக்காக கூடிய சட்டசபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க உறுப்பினர்கள் சட்டசபைக்குள் சபாநாயகர் இருக்கைக்கு முன் அமர்ந்து  கதிரை, மைக்கை  உடைத்து ஆவணங்களை கிழித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

இதனையடுத்து சபை நடவடிக்கைகள் ஒரு மணி வரை ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் ஆரம்பமான போது தி.மு.க உறுப்பினர்கள் சபாநாயகர் மேசையின் மீது இருந்த மைக்கை மீண்டும் உடைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சபை நடவடிக்கை 3 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 பரபரப்பான தமிழக அரசியல் சூழ்நிலையில் சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. அதற்காக சட்டசபையின் சிறப்பு கூட்டம் இன்று நடைபெற்று வருகின்றது.

இந்த கூட்டத்தில் ரகசிய வாக்கெடுப்பு  நடத்த வேண்டும் என்று கோரியும்,  மக்களின் கருத்தை கேட்ட பின்பு  மற்றொரு நாளில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் எதிர்க்கட்சியான  திமுக, பன்னீர்செல்வம் அணி  மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் கூச்சல் எழுப்பி தொடர் அமளியில் ஈடுபட்டனர்.

ஆனால் இதனை ஏற்க சபாநாயகர் மறுத்து விட்டதால் சபையில் கடுமையான அமளி உண்டானது.

 திமுக  ஆலங்குளம் உறுப்பினரான முன்னாள் அமைச்சர் பூங்கோதை மேஜை மீது ஏறி நின்று வாக்குவாதம் செய்துள்ளார். 

அத்ததுடன் சட்டசபை செயலர் ஜமாலுனின் இருக்கை கிழிக்கப்பட்டது. அவரது மேஜையில் இருந்த ஆவணங்கள் கிழிக்கப்பட்டு வீசப்பட்டன.

இந்த அமளியில் இடையே  சபாநாயகர் தனபால அவையை 45 நிமிடங்கள் ஒத்தி வைத்து விட்டு  பாதுகாவலர்களுடன் வெளியேறினார்.   

அமளியால் ஒத்திவைக்கப்பட்ட பேரவை மீண்டும் மதியம் 1 மணியளவில் கூடியது.

அவை கூடியதும் எனக்கு நேர்ந்த கொடுமையை நான் எங்கே சென்று முறையிடுவது. அவை விதிகளின்படி தான் அவையை நடத்தி வருகிறேன் என்று சபாநாயகர் தனபால் கூறினார். 

மேலும் சட்டப்பேரவையின் மாண்புகளை சீர்குலைத்ததால் திமுக உறுப்பினர்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார்.

பின்னர் திமுக உறுப்பினர்களை வெளியேற்ற முடியாமல் அவைக்காவலர்கள் தடுமாற்றமடைந்தனர்.

இந்நிலையில், சபாநாயகரின் மைக் 2ஆவது முறையாக உடைக்கப்பட்டது. 

அமைச்சர்களின் மீது திமுக உறுப்பினர்கள் ஏறி நின்று ரகசிய வாக்கெடுப்பு நடத்தக்கோரி முழக்கமிட்டனர். 

மீண்டும் தொடர்ந்து அமளி ஏற்பட்டதால் பேரவை பிற்பகல் 3 மணி வரை ஒத்திவைப்பட்டது.