ஏ.எல்.நிப்றாஸ்
'இஸ்ரேலின் தாக்குதலால் நாங்கள் ஒவ்வொரு நொடியும் இறந்து கொண்டிருக்கின்றோம். எங்கள் வீடுகளில் பலர் ஏற்கெனவே கொல்லப்பட்டு, 'சஹீத்' (வீர மரணம்) அடைந்து விட்டனர். நாங்கள் அனாதைகளாக, உண்ண உணவின்றி தெருவில் நிற்கின்றோம். இங்கே பாதுகாப்பான இடம் என்று எதுவும் இல்லை. ஆனாலும், இந்த பலஸ்தீன மண்ணை விட்டு எங்கும் செல்ல மாட்டோம். சொல்லுங்கள் இதுதானா உங்களது உலக நாடுகள் எங்கள் மீது காட்டுகின்ற நீதி?'
அடையாளம் தெரியாமல் சிதைந்து போன பலஸ்தீனத்தில் அடைக்கலம் தேடி ஓடிக் கொண்டிருக்கின்ற சிறுவர், சிறுமியர்கள் இந்த முழு உலகத்தையும் பார்த்துப் பேசிய வார்த்தைகள்தான் இவை. இந்த வார்த்தைகளுக்குப் பின்னால் இருக்கின்ற வலி, வலியதும் - கொடியதும் ஆகும். இதற்கான பதிலை உலகம் இன்னும் தயார் செய்யவில்லை.
இதே விடயத்தையே, ஐ.நா. சபையின் பாதுகாப்பு பேரவையில், உரையாற்றிய பலஸ்தீன நாட்டு பிரதிநிதியான பெண் இராஜதந்திரியும் குறிப்பிட்டுள்ளார். இதனைக் கூறும் போது துக்கம் தாளாமல் அவர் அழுததை முழு உலகமே பார்த்தது.
'காஸாவில் குறைந்தது 20 இலட்சம் மக்கள் உள்ளனர். அவர்களுள் அரைவாசிப்பேர் குழந்தைகள். எமது மக்களுக்கு நீர் இல்லை. மின்சாரம் இல்லை, எரிபொருள் இல்லை. மருந்துகள் இல்லை. பாதுகாப்பு இல்லை. தஞ்சம்புகுவதற்கு பொருத்தமான இடமில்லை. கொல்லப்பட்டவர்கள் பாரிய குழிகளில் புதைக்கப்படுகின்றார்கள். மற்றவர்கள் மரணத்திற்காக காத்திருக்கின்றார்கள்.
பலஸ்தீனத்தில் சிவிலியன்கள் இல்லை என்றும், பலஸ்தீனர்கள் அழிக்கப்பட வேண்டியவர்கள் என்ற தோரணையிலும் இதனை இஸ்ரேல் அரங்கேற்றுகின்றது. ஆனால், அங்கே நடப்பது யுத்தமல்ல. தெளிவான இன அழிப்பு, போர்க்குற்றம். பலஸ்தீனர்களை பூர்வீக மண்ணில் இருந்து துடைத்தெறியும் திட்டமாகும். எமக்கு தேவை உடனடியாக ஒரு போர் நிறுத்தமும் நீதியும் அமைதியுமாகும்' என்று பலஸ்தீன பிரதிநிதி தழுதழுத்த குரலில் சொல்லியழுதார்.
பலஸ்தீன போர் பற்றிய உலகின் பல நாடுகள் மற்றும் மக்களின் பார்வை தெளிவானதாக உள்ளது. இது வழக்கத்தை விட சற்று மாற்றமானதாக தெரிகின்றது. அதாவது, ஊடகங்கள் மூலம் தமக்கு விரும்பியதை காண்பித்து பிரசாரம் செய்யும் மேற்குலகின் வழக்கமான உத்தி, இம்முறை படுதோல்வி அடைந்துள்ளது. பலஸ்தீனத்தில் நடக்கின்ற மனிதப் பேரவலங்களின் உண்மைத்தன்மையை நவீன ஊடகங்கள் ஊடாக உலகம் பார்க்கக் கூடியதாக இருப்பதும் அது குறித்து தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்த முடிவதும் இந்த மாற்றத்திற்கு ஒரு காரணம் எனலாம்.
இந்தப் பின்னணியில், அங்கு நான்கு விடயங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன என்பதை உலகமே ஏற்றுக் கொண்டுள்ளது. அதாவது, அங்கு சர்வதேச போர் விதி முறைகள் மீறப்படுகின்றன. யுத்தக் குற்றம் இடம்பெறுகின்றது. இன அழிப்பு நடந்தேறுகின்றது. மனிதகுலத்திற்கு எதிரான குற்றம் இழைக்கப்படுகின்றது. மனிதாபிமானமும் மனித உரிமைகளும் கேலிக்குள்ளாக்கப்பட்டுள்ளன.
இந்த யுத்தத்தை ஐ.நா. உள்ளிட்ட பல நாடுகள், அமைப்புக்கள் எதிர்க்கின்ற போதும் கூட, இஸ்ரேல் தன்னோடு சில 'சண்டியர்களையும்', 'பொலிஸ்காரர்களையும்' வைத்துக் கொண்டு எதனையும் கணக்கில் எடுக்காது, பெரும் அழிச்சாட்டியத்தை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றது. இதற்கு ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சில நாடுகள் ஆதரவளிப்பது என்பது மனிதகுல நாகரிகத்தின்படி பெரும் அபத்தமாகும்.
பாதுகாப்புச் சபையில் உரையாற்றிய ஐ.நா. செயலாளர் நாயகம், ஹமாஸின் தாக்குதலை கண்டிக்கத் தவறவில்லை. ஆனால், அதனைக் காரணம்காட்டி, பலஸ்தீனத்தில் உள்ள பொது மக்களை கொல்வதையும், போர் விதிமுறைகளை மீறுவதையும், யுத்தக் குற்றம் புரிவதையும் ஏற்றுக் கொள்ளவே முடியாது என்று மீள வலியுறுத்தியுள்ளார்.
ஒக்டோபர் 7ஆம் திகதி ஹமாஸ் நடத்திய தாக்குதலோடு மட்டும் இந்த முரண்பாடு ஆரம்பிக்கவில்லை என்றும், 56 வருடங்களாக பலஸ்தீன மண், இஸ்ரேலினால் அளவுக்கதிகமாக ஆக்கிரமிக்கப்பட்டு, மக்கள் கொல்லப்பட்டு, அகதிகளாக்கப்பட்டு வந்துள்ளனர் என்பதையும், அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதை விட காட்டமான அறிக்கையொன்றை ஐ.நா. விசேட அறிக்கையாளர் வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கையின்படி பலஸ்தீனத்தில் 2 மில்லியன் மக்கள் இருக்கின்றார்கள். அவர்களுள் 16 இலட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர். இரு தினங்களுக்கு முன்பு வரை இஸ்ரேலின் தாக்குதலால் 5,700 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களுள் 40 சதவீதமானோர் குழந்தைகள், சிறுவர்களாவர். குறைந்தது 15 ஆயிரம் பேர் கடுமையான காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். சொத்து, உடமை இழப்புக்களுக்கு கணக்கில்லை.
இதேவேளை, பிந்திக் கிடைத்த தகவல்களின் படி பலஸ்தீனத்தில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தை தாண்டிவிட்டதாக அறிய முடிகின்றது. ஹமாஸ் இயக்கத்தின் தாக்குதலால் இஸ்ரேலில் அப்பாவி பொது மக்கள் கொல்லப்பட்டமை நியாயப்படுத்த முடியாததே. ஆயினும், பலஸ்தீனத்தில் ஹமாஸை தாக்குவதாக கூறிக் கொண்டு, இஸ்ரேல் தொடர்ந்து செய்யும் அழிச்சாட்டியத்தால் ஏற்பட்டுள்ள உயிர் இழப்புகள் அதைவிடப் பன்மடங்கானவை.
இதுவெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு போரை நிறுத்துவதற்கு, பலஸ்தீனத்தின் சுயநிர்ணயத்தை, இறைமையை உறுதிப்படுத்துவதற்கு ஐ.நா.வும், ஏனைய உலக நாடுகளும், நீதி மற்றும் உரிமை அமைப்புக்களும் உலக மக்கள் என்ற வகையில் நாமும், என்ன செய்துள்ளோம்? அது எந்தளவுக்கு சாத்தியமாகியுள்ளது, என்பதே இப்போதுள்ள முக்கிய கேள்வியாகும்.
2020 இலிருந்து 'ஒற்றை உலக ஒழுங்கு' மெதுமெதுவாக மாறத் தொடங்கியுள்ளது. அமெரிக்க டொலரையும், அமெரிக்காவையும் மையப்படுத்தியதான எழுதப்படாத விதியை மாற்ற சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் முன்னிற்கின்றன. அதற்காக இந்த பலஸ்தீன யுத்தமும் சில நாடுகளால் பயன்படுத்தப்படலாம் என்பதை கவனிக்க வேண்டும்.
இந்தப் பின்னணியில், அரபு நாடுகள் மட்டுமன்றி கணிசமான உலக நாடுகள், ஆட்சியாளர்கள், பலஸ்தீன மக்களுக்கு பௌதீக ரீதியாகவும் ஆத்மார்த்த ரீதியாகவும் ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளனர். முற்போக்கான யூதர்கள், கிறிஸ்தவர்கள், தமிழர்கள் என பேதமற்று இலட்சக்கணக்கான மக்கள் பலஸ்தீன மக்களுக்கு நீதி வேண்டி குரல் கொடுக்கின்றனர். நவீன ஊடகங்கள் நிரம்பி வழியும் உலகில் யதார்த்தத்தை மறைப்பது சாத்தியமற்றுப் போயுள்ளது.
உலகுக்கு மனித உரிமை, நீதி போதிக்கும் ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட சில நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவளிக்கின்ற போதும், அந்தாட்டு மக்கள் நீதியின் பக்கம் நிற்கின்றனர் என்பது முக்கியமானது,
ஐரோப்பிய ஒன்றிய அமர்வு, பிரித்தானிய பாராளுமன்றம், அயர்லாந்து பாராளுமன்றம், அவுஸ்திரேலிய மற்றும் கனடா பாராளுமன்றம் என கிட்டத்தட்ட அனைத்து பாராளுமன்றங்களிலும் எம்.பிக்கள் பகிரங்கமாக பலஸ்தீனத்திற்காக பேசுகின்றனர். இஸ்ரேல் செய்வது மனிதகுலத்திற்கு எதிரான போர்க் குற்றம் எனக் கூறுகின்றனர்.
இன, மத பேதங்களைக் கடந்து, நீதிக்காக குரல்கொடுக்கின்ற மக்களின், அரசியல்வாதிகளின் தொகை அதிகரித்துள்ளது. யார் என்றாலும் மனிதர்கள் என்ற அடிப்படையில் நோக்குகின்ற மனநிலை உலகளவில் வளர்ச்சி கண்டுள்ளதாக தெரிகின்றது. இது ஒரு முக்கிய மாற்றம் என்பதுடன், இது உலக ஒழுங்கு மாற்றத்திலும் செல்வாக்குச் செலுத்தலாம்.
எது எப்படியிருப்பினும், பலஸ்தீனத்தில் இன்னும் யுத்தம் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. மரணங்கள், இடப்பெயர்வுகள் இடம்பெற்றுக் கொண்டே இருக்கின்றன. ஐ.நா.வும் உலக நாடுகள் பலவும் அறிவுறுத்தியும், பலஸ்தீன மக்கள் கெஞ்சிக் கூத்தாடியும், இஸ்ரேல் அரசாங்கம் தனது அழிச்சாட்டியத்தை நிறுத்தவில்லை.
அப்படியானால், ஐ.நா. மற்றும் மனித உரிமைக்காக குரல்கொடுக்கின்ற அமைப்புக்களும் அனுதாப, கண்டன அறிக்கைகளையும், அழுத்தங்களையும், புள்ளிவிபாரங்களையும் மட்டும் வெளியிட்டுக் கொண்டிருக்க, பலஸ்தீன மக்கள் விடயத்திலும்; உலக நீதி தோற்றுப்போகுமா, என்ற கவலை தோய்ந்த கேள்வி எழுகின்றது.
ஐ.நா.வும் ஏனைய அமைப்புக்களும் மூன்றாவது உலக மகா யுத்தம் ஒன்று ஏற்படுவதை தடுத்துள்ளன என்பதை மறுக்க முடியாது. ஆனால், உலக யுத்தம் என அடையாளப்படுத்தப்படாத ஏகப்பட்ட யுத்தங்கள், ஆக்கிரமிப்புக்கள், இனஅழிப்புக்கள் நடந்தேறியிருக்கின்றன. பலஸ்தீனத்தைப் போன்று பல நாடுகளில், பிராந்தியங்களில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளன. யுத்த விதிகள் மீறப்பட்டு, போர்க் குற்றம் நடந்தேறியிருக்கின்றது என்பதை மறுக்க முடியாது.
அப்போதெல்லாம், கவலையையும் அறிக்கையையும் வெளியிட்டதைத் தவிர, ஐ.நா. உள்ளிட்ட இதற்காகவே இயங்கும் அமைப்புக்களால் யுத்தங்களை, இன அழிப்பை, மீறல்களை தடுத்து நிறுத்த முடியவில்லை. ஐ.நா போன்றவற்றின் அதிகாரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்ததாலும், உலக சண்டியர்களின் வெறியாலும், பல நாடுகளில் பல இலட்சக்கணக்கான மக்கள் பலி எடுக்கப்பட்டிருக்கின்றார்கள்.
எனவே, இந்த முன்னெடுப்புக்கள் போதாது. வெறுமனே அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டும் வழக்கமான அணுகுமுறைகளை மட்டும் பயன்படுத்திக் கொண்டும் இருக்காமல், ஐ.நா. உள்ளிட்ட உலக அமைப்புக்களும் நாடுகளும் அதனை விடப் பெரிய கூட்டுப் பலத்தைப் பிரயோகித்தாவது, பலஸ்தீனத்தில் யுத்தத்தை நிறுத்தி அந்த மக்களுக்கு நீதியை பெற்றுக் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால், இந்தப் போரிலும், உலக நீதி பார்வையாளராக மட்டுமே இருப்பது வரலாறாக மாறும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM