தமிழக முதல்வர் பதவிக்கான நம்பிக்கை வாக்கெடுப்பு பல்வேறு குழப்பங்களுக்கு மத்தியில் சற்று முன்னர் நடந்து முடிந்தது. இதில் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக 122 வாக்குகள் பதிவாகின. அவருக்கு எதிராக 11 வாக்குகளே அளிக்கப்பட்டன. நடுநிலை வாக்குகள் எதுவும் அளிக்கப்படவில்லை.

இதையடுத்து, தமிழக முதல்வராக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி!

முன்னதாக, அவையில் இருந்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பலவந்தமாக தூக்கிச் செல்லப்பட்டு வெளியேற்றப்பட்டதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டிருந்தது. தி.மு.க. உறுப்பினர்கள் அவைக்கு வெளியே கடும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காலை 10.30 மணிக்குக்கு, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்காகக் கூட்டப்பட்ட அமர்வின்போது எதிர்க்கட்சிகள் கடும் அமளிதுமளியில் ஈடுபட்டன.

இரகசிய வாக்கெடுப்பு நடத்துமாறு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்திருந்தார். அவருடைய கருத்தை எதிர்க்கட்சிகளும் ஆமோதித்தன. எனினும் இதற்கு சபாநாயகர் தனபால் அனுமதியளிக்கவில்லை. இதனால் வெகுண்ட எதிர்க்கட்சிகள் சபாநாயகரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அவைக்குள் குழப்ப நிலை தோன்றியது. கதிரை, மேசைகள், மைக்குகள் உடைக்கப்பட்டன. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மேசை மீது ஏறி நின்று இரகசிய வாக்கெடுப்பு நடத்துமாறு வலியுறுத்தினர். இதன்போது, அ.தி.மு.க. எடப்பாடி அணியினர் அமைதியாக இருந்தனர்.

இரகசிய வாக்கெடுப்பு நடத்துமாறு ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க.வினர் தொடர்ந்து வற்புறுத்தியதால், சபாநாயகர் தனபால் அவையை 3 மணிக்கு ஒத்திவைத்தார். இதையடுத்து அவைக்குள் புகுந்த அவைக் காவலர்கள் ஸ்டாலினை வலுக்கட்டாயமாகத் தூக்கிச் சென்று வெளியேற்றினர்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த தி.மு.க.வினர் அவை வாயிலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், பிற்பகல் மூன்று மணிக்கு அவை மீண்டும் கூட்டப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக 122 வாக்குகளும், எதிராக 11 வாக்குகளும் அளிக்கப்பட்டன. நடுநிலை வாக்குகள் எதுவும் பதிவாகவில்லை.

இதேவேளை, அவையில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து சென்னை ஆளுனரைச் சந்தித்து முறைப்பாடு அளித்துள்ளார். இதன்போது அங்கு கூடிய தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், தமிழக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிச்சாமி வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம் இது குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ளார்.

“அம்மா உயிருடன் இருந்தபோது யாரையெல்லாம் தன் வீட்டை விட்டு விரட்டினாரோ, அவர்கள் அனைவரும் மீண்டும் கட்சிக்குள் இணைக்கப்பட்டிருப்பதுடன், கட்சியின் முக்கிய பொறுப்புக்களிலும் அமர்த்தப்பட்டுள்ளனர். இது, அம்மாவின் விருப்புக்கு எதிரானது என்பதை அ.தி.மு.க. தொண்டர்கள் அறிவார்கள்.

“இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டிருந்தால் அம்மாவின் ஆட்சி மீண்டும் தமிழகத்தில் மலர்ந்திருக்கும். ஆனால் எங்களது வேண்டுகோளைப் புறந்தள்ளி சபாநாயகர் வாக்கெடுப்பை நடத்தியிருக்கிறார்.

“தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். மீண்டும் தர்மமே வெல்லும். இன்று முதல் தர்மயுத்தம் ஆரம்பமாகியிருக்கிறது. தாமதமானாலும் கூட நிச்சயம் தர்மம் வெல்லும். இப்போது வென்றிருக்கும் உறுப்பினர்கள் தொகுதிக்குச் சென்றால் தெரியும் அவர்களுக்கு எவ்வளவு ஆதரவு இருக்கிறது என்று!

“அவையில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தாக்கப்பட்டமையானது கண்டிக்கப்படவேண்டியது, ஜனநாயக விரோதமானது. இந்தத் தேர்தலே ஜனநாயக முறைப்படி நடந்ததல்ல. எனவே இந்தத் தேர்தல் முடிவை ஏற்றுக்கொள்ளப்பட முடியாது. மீண்டும் சுதந்திரமான தேர்தலை நடத்தவேண்டும் என்பதே எமது கோரிக்கை.”

இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.