சிவலிங்கம் சிவகுமாரன்
ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கான தண்டனையின்மையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான சர்வதேச தினம் எதிர்வரும் நவம்பர் 2 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகின்றது.
ஊடகவியலாளர்களுக்கும் ஊடகங்களுக்கும் எதிரான குற்றங்களுக்கு நியாயத்தையே பெற்றுத்தராத ஒரு ஜனநாயக நாடாக இலங்கை விளங்குகின்றது. ஜனநாயகத்தை தாங்கும் நான்காவது தூணாக ஊடகங்கள் வர்ணிக்கப்படுவதுண்டு. அப்படியானால் இந்த நாட்டின் ஜனநாயகமானது ஒரு தள்ளாட்ட நிலையிலேயே உள்ளது என்று தான் கூற வேண்டும். எந்த அரசாங்கம் ஆட்சியமைத்தாலும் ஊடக சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் ஏதாவதொரு வழிவகைகளை ஆராய்வதே அதன் நோக்கமாக உள்ளது.
ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு எதிரான அடக்குமுறைகள், அவர்களுக்கு எதிரான மிலேச்சத்தனமான தாக்குதல்கள், ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டமை ஆகிய விடயங்களை முப்பது வருட கால யுத்தத்தை மாத்திரம் அடிப்படையாகக்கொண்டு பார்க்க முடியாது.
1997 ஆம் ஆண்டிலிருந்து 1994 ஆம் ஆண்டு வரையான ஜே.ஆர். ஜயவர்தன மற்றும் ஆர்.பிரேமதாச ஆகியோரின் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி காலம், பின்னர் 2004 இலிருந்து 2014 வரையான மஹிந்த ராஜபக் ஷவின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் ஆட்சி காலம் என இரண்டு காலகட்டங்களை நோக்க வேண்டியுள்ளது. இதில் மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சிகாலமே ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு எதிரான அதிகமான குற்றச்சம்பவங்கள் இடம்பெற்ற காலகட்டமாகும்.
அரச ஊடக நிறுவனமான ரூபவாஹினுக்குள் உட்புகுந்து மஹிந்தவின் விசுவாசியான மேர்வின் சில்வா புரிந்த அட்டகாசங்களை சர்வதேசமே அறியும். அப்படியானால் தனியார் ஊடக நிறுவனங்கள் எத்தகைய மறைமுக அடக்குமுறையின் கீழ் இருந்திருக்கக் கூடும் என்பதை இச்சம்பவம் அக்காலத்தில் பலருக்கு உணர்த்தியது.
இலங்கையில், ஊடக அடக்குமுறைகளில் ஈடுபட்ட எவரும் இதுவரை தண்டனைக்கு உட்படுத்தப்படவில்லை. இந்த சம்பவமே ஊடக சுதந்திரத்துக்கு எதிராக செயற்படும் ஒரு நாடு என்ற அவப்பெயரை சர்வதேசத்தின் மத்தியில் இலங்கைக்கு ஏற்படுத்தியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் 17 வருட ஆட்சி காலப்பகுதியில் சமூக ஊடகங்கள் கண்டு பிடிக்கப்படவில்லை.
ஆனால் இப்போது ஜனாதிபதியாக இருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, சமூக ஊடகங்களில் அரசாங்கத்தின் மூலம் முன்னெடுக்கப்படும் மக்கள் பாதிப்பு செயற்பாடுகளை விமர்சிப்பவர்களுக்கு எதிராக பல சட்டமூலங்களை கொண்டு வருவதற்கு ஆர்வமுள்ள ஒருவராக காணப்படுகின்றார்.
இதில் ஊடகவியலாளர்கள் மாத்திரமின்றி சாதாரண பொது மக்களின் கருத்துச் சுதந்திரமும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளது. ஆகவே, புதிய சட்டமூலங்கள் முழு நாட்டினதும் கருத்துச் சுதந்திரத்தை கட்டுப்படுத்துவனவாக உள்ளன. இது பாரதூரமான விடயமாகும். இவ்விடயத்தில் மஹிந்த தரப்பினருடன் கைகோர்த்தே ரணில் செயற்படுகின்றார். கோட்டாபய மற்றும் மஹிந்தவுக்கு எதிரான அரகலய போராட்டங்கள் சமூக ஊடகங்கள் மூலமாகவே துருவமயப்படுத்தப்பட்டிருந்தன. ஆகவே அது குறித்து ரணில் விக்கிரமசிங்க மிகவும் எச்சரிக்கையாக உள்ளார்.
இந்நிலையில் இவ்வருடம் அனுஷ்டிக்கப்படவுள்ள, ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கான தண்டனையின்மையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சர்வதேச தினம் பற்றிய ஐக்கிய நாடுகள் சபையானது பிரதான தொனிப்பொருளாக மூன்று விடயங்களை முன்னிலைப்படுத்துகின்றது. இவற்றை இலங்கைக்கும் பொருத்தி பார்த்தல் முக்கியமானது.
* ஊடகவியலாளர்களுக்கு எதிரான வன்முறைகள்
* தேர்தல்களின் நேர்மைத் தன்மை
* மக்கள் தலைமைத்துவத்தின் வகிபாகம்
ஆகிய மூன்று விடயங்களை அடிப்படையாகக்கொண்டு ஐக்கிய நாடுகள் சபையானது தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது. பத்திரிகையாளர்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களுக்கான தண்டனையிலிருந்து விலக்கு பெறுவதானது சமீப காலங்களில் எழுந்துள்ள மிக சவாலானதும் சிக்கலானதுமான விடயம் என ஐ.நா. சுட்டிக்காட்டியுள்ளது. ஏனென்றால், உலகின் அனைத்து நாடுகளிலும் ஊடக சுதந்திரம் பேணப்படுகின்றது என்பதை உறுதிப்படுத்த முடியாத சூழல் காணப்படுகின்றது.
கருத்துச் சுதந்திரம் மற்றும் தகவல்களை அணுகுவதற்கான உரிமைகள் மீது கட்டுப்பாடுகளை விதிப்பதில் சில நாடுகள் கடும்போக்காக நடந்து கொள்வதை இது அம்பலப்படுத்துகின்றது. பொதுநலன் சார்ந்த விடயங்களின் பின்னணியில் உள்ள ஊழல்களை அம்பலப்படுத்துதல், அரசியல்வாதிகளிடம் கேள்விகளை எழுப்புதல், அவற்றை அறிக்கையிடல் காரணமாக பத்திரிகையாளர்களுக்கு எதிராக நீதித்துறை செயற்பாடுகளை பயன்படுத்துதல், சில நாடுகளில் பத்திரிகையாளர்கள் கட்டாயமாக நாடுகடத்தப்படல் போன்ற விடயங்களை ஐ.நா சுட்டிக்காட்டுகின்றது.
அதே போன்று நியாயமானதும் நேர்மையானதுமான தேர்தல்கள் இடம்பெறுவதை உறுதி செய்யும் மிகப்பிரதான இடத்தை ஊடகங்கள் வகிக்கின்றன. ஜனநாயக பண்புகளை வலியுறுத்தும் பிரதான அம்சங்களாக ஒரு நாட்டில் தேர்தல்கள் உள்ளன. ஒரு வகையில் மக்களின் கருத்து சுதந்திரத்தை வெளிப்படுத்தும் பொறிமுறையாகவும் தேர்தல்கள் விளங்குகின்றன. தேர்தல்கால செயற்பாடுகளை அறிக்கையிடுவதும் அதை மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதுவும் ஊடகங்களின் முன் உள்ள சவாலாகும். இதை அரச ஊடகங்கள் முறையாக முன்னெடுப்பதில்லை.
மூன்றாவதாக, ஊடக சுதந்திரத்தை உறுதி செய்வதில் நாட்டின் தலைமைத்துவத்தின் வகிபாகம் பற்றி பேசப்படுகின்றது.
கருத்துச் சுதந்திரம் என்பது ஊடகவியலாளர்களுக்கு மாத்திரமானதல்ல. அது அனைத்து நாட்டு மக்களுக்கும் உரித்துடையது என்பதை விளங்கிக்கொள்ளும் தலைமைத்துவங்கள் உள்ள நாடுகள் மிகவும் குறைவாகும். அபிவிருத்தியடைந்த ஜனநாயக பண்புகளை அதிகம் கொண்டு விளங்கும் லத்தீன் அமெரிக்க நாடுகள் மற்றும் கரீபியன் பிராந்திய நாடுகளிலேயே ஊடகவியலாளர்கள் அதிகம் கொலை செய்யப்படுகின்றனர் என்கிறது ஆய்வு.
ஐக்கிய நாடுகள் சபையின் கலை ,கலாசார பிரிவான யுனெஸ்கோவின் அறிக்கை இதற்கு கட்டியம் கூறுகின்றது. 1993 ஆம் ஆண்டு முதல் இது வரை உலகில் சுமார் 1,600 ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டிருக்கின்றனர். செய்திகளை அறிக்கையிட்டதற்காகவும் மக்களிடம் தகவல்களை கொண்டு சேர்த்ததற்காகவுமே இவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மிகவும் வேதனையான விடயம் என்னவெனில் இந்த சம்பவங்களில் பத்தில் ஒன்பது வழக்குகளில் இன்னும் கொலையாளிகள் தண்டிக்கப்படாமல் இருக்கின்றனர்.
யுனெஸ்கோ அறிக்கை மிக முக்கியமான ஒரு விடயத்தை இங்கு சுட்டிக்காட்டியுள்ளது. அதாவது தண்டனையின்மையே ஊடகவியலாளர்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிக்கவும் காரணம் என அது கூறுகின்றது. எனவே இது நீதித்துறை அமைப்பின் செயற்பாடுகளின் சிதைவுகளின் அறிகுறி என அது வர்ணித்துள்ளது. இதே வேளை பெண் பத்திரிகையாளர்களுக்கு எதிரான அச்சுறுத்தல் இங்கு விசேடமாக கூறப்பட்டுள்ளது. உலகளாவிய ரீதியில் பெண் பத்திரிகையாளர்களில் 73 வீதமானோர் தமது தொழில் தொடர்பில் இணைய அச்சுறுத்தல்களுக்கு உட்பட்டுள்ளனர் என்றும் யுனெஸ்கோ கூறுகின்றது.
இலங்கையில் ஊடகவியலாளர்களுக்கு எதிரான செயற்பாடுகளுக்கு காரணமான எவரும் இது வரையில் தண்டிக்கப்படவில்லை. இது வரையில் இரண்டே இரண்டு வழக்குகளே விசாரணை கட்டங்களை எட்டியுள்ளன. முதலாவது 2000 ஆம் ஆண்டு ஒக்டோபரில் யாழில் படுகொலை செய்யப்பட்ட மயில்வாகனம் நிமலராஜனின்வழக்கு.
எனினும் இந்த சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட சந்தேக நபர்களுக்கு எதிராக வழக்கு தொடர வேண்டாம் என நீதிமன்றங்களுக்கு அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டதாக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டிருந்தன. இரண்டாவது சம்பவம் 2010 ஆம் ஆண்டு ஜனவரியில் காணாமல் போன கருத்துப்பட ஓவியர் பிரகீத் எக்னலியாகொடவின் வழக்கு. அவரது மனைவி சந்தியாவின் பெரும் போராட்டத்தின் பயனாக இராணுவ வீரர்கள் சிலருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டு அதில் ஒன்பது பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
எனினும் 2019 இற்குப்பிறகு மீண்டும் ராஜபக் ஷவினரின் கைகளுக்குள் அதிகாரம் வந்த பிறகு, இராணுவ வீரர்களுக்கு எதிராக எந்த வழக்கும் தொடர மாட்டோம் என்ற வாக்குறுதிகளை அவர்கள் சிங்கள மக்களுக்கு வழங்கியிருந்தனர். இதன் காரணமாக இந்த வழக்கும் இழுபறி நிலையிலேயே உள்ளது. 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு முதல் நாளன்றே எக்னலியாகொட காணாமால் போனார் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையின் ஊடக ஜனநாயகத்தின் மிகப்பெரிய பலவீனமாக இந்த சம்பவங்கள் உள்ளன.
மேலும் தமிழ் ஊடவியலாளர்களுக்கு எதிரான வன்முறைகள் பற்றிய விசாரணைகள் பூஜ்ய நிலையிலேயே உள்ளன. ஊடக அமைப்புகளும் இவ்விடயத்தில் எத்தனைப் போராட்டங்கள் , நகர்வுகளை முன்னெடுத்திருந்தாலும் அவர்களுக்கு வேறு வழிகளில் நெருக்குவாரங்களை கொடுக்க அரசாங்கம் திட்டம் தீட்டுகிறது.
அமெரிக்க பத்திரிகையாளர் வோல்டர் குரோன்கைட் கூறுவது போன்று ஊடக சுதந்திரம் என்பது ஜனநாயகத்தின் பண்பாக பார்க்கப்படுவது அல்ல, ஊடக சுதந்திரம் என்பது தான் ஜனநாயகம் என்ற கருத்துக்கமைய உலக நாடுகள் ஜனநாயகத்தை இதன் மூலம் உறுதிப்படுத்த வேண்டும். ஜனநாயகத்தை தாங்கி நிற்கும் நான்காவது தூணை அசைத்துப்பார்க்க நினைப்பது ஜனநாயகத்தை நிலைகுலைய செய்வதற்கு சமனாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM