(எம்.மனோசித்ரா)
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வு காணும் விடயத்தில் சம்பள நிர்ணய சபை சட்ட ரீதியான சிக்கல்களை எதிர்கொண்டுள்ளது. எனவே, முதலாளிமார் சம்மேளனம் மற்றும் தொழிற்சங்கங்களை மீண்டும் கூட்டு ஒப்பந்தத்தில் உள்வாங்குவதன் மூலம் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.
சம்பள பிரச்சினை மாத்திரமின்றி பெருந்தோட்டத் தொழிலாளர்கள் எதிர்கொண்டுள்ள ஏனைய பிரச்சினைகள் தொடர்பிலும் அமைச்சரவையில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், பெருந்தோட்டக் கம்பனிகள் தொடர்பான தீர்மானங்களை எடுக்கும் பொறுப்பு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் தோட்டத் தொழில் முயற்சிகள் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று புதன்கிழமை (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனை தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 99.99 சதவீதம் 1000 ரூபாய் நாளாந்த சம்பளம் வழங்கப்படுகிறது. எனினும், சில தோட்ட முகாமைத்துவம் இந்த 1000 ரூபாய் சம்பளத்தை வழங்காமல் இருப்பதற்காக முறையற்ற செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றன. எவ்வாறிருப்பினும், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் சம்பளம் போதுமானதல்ல. அதனை விட அதிக சம்பளம் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
அதனை முழுமையாக வழங்குவதற்கு கம்பனிகளின் இணக்கப்பாட்டை பெற வேண்டும். தற்போது கூட்டு ஒப்பந்தத்திலிருந்து இரு தரப்புக்களும் விலகியுள்ளன. எனவே, சம்பள நிர்ணய சபையின் தலையீட்டுடன் சம்பள பிரச்சினைக்கான தீர்வினைக் காண முடியும். அதற்கமைய மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் சவாலுக்குட்படுத்தப்பட்டு நீதிமன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
சம்பள நிர்ணய சபை இவ்வாறு சட்ட ரீதியான சிக்கலை எதிர்கொண்டுள்ளமையால் முதலாளிமார் சம்மேளனம் மற்றும் தொழிற்சங்கங்களை மீண்டும் கூட்டு ஒப்பந்தத்துக்குள் உள்வாங்கி, அதன் ஊடாக சம்பள பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கே நான் முயற்சிக்கின்றேன்.
சம்பள பிரச்சினை மாத்திரமின்றி தோட்ட முகாமையாளர்களால் தொழிலாளர்களுக்கு ஏற்படுத்தப்படும் பிரச்சினைகள் தொடர்பிலும் நாம் அவதானம் செலுத்தியிருக்கின்றோம்.
அமைச்சரவையில் இது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்ட நிலையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் பிராந்திய தோட்டக் கம்பனிகள் தீர்மானங்களை எடுப்பதற்கான பொறுப்புக்களை தோட்டத் தொழில் முயற்சிகள் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவிடம் ஒப்படைத்துள்ளார்.
தொழில் அமைச்சும் இவ்விடயத்தில் தலையிட்டு, தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள் தொடர்பில் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளன. குறிப்பாக தொழிலாளர்களின் பாதுகாப்பு, சுகாதாரம், கல்வி தொடர்பில் விசேட வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
பெருந்தோட்ட நிர்வாகம் ஒரு சிலர் கைகளில் காணப்படுவதால் தொழிலாளர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர் என்பதை தொழில் அமைச்சர் என்ற ரீதியில் ஏற்றுக்கொள்வதோடு மாத்திரமின்றி, தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM