பழைய தொலைக்காட்சிப் பெட்டியொன்றை மீள் பயன்பாட்டுக்காகப் பிரித்தபோது, அதனுள் சுமார் ஒரு இலட்சம் டொலர் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் உள்ள பழைய பொருட்களை மீள்பயன்பாட்டுக்காகப் பிரிக்கும் நிலையத்தில் வைத்து, பழைய தொலைக்காட்சியொன்று பிரித்தெடுக்கப்பட்டது. அப்போது, தொலைக்காட்சித் தொகுதியின் உட்புறமாக, பணப் பெட்டியொன்றில் ஒரு இலட்சம் டொலருக்கும் அதிகமான அளவு பணம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்துப் பேசிய அந்த நிலையத்தின் உரிமையாளர், ஐம்பது டொலர் தாள்கள் அடங்கிய நான்கு பெரிய பணக் கட்டுக்கள் அந்தத் தொலைக்காட்சியினுள் காணப்பட்டதாகவும், அதைக் கண்ட மாத்திரத்திலேயே அது பெருமதிப்புடையதாக இருக்கவேண்டும் என்று தான் எண்ணியதாகவும் கூறினார்.

மேலும், இவ்வளவு பெரிய பணத் தொகையை நேர்மையுடன் தனது கவனத்துக்குக் கொண்டுவந்த தனது நிறுவன ஊழியரையும் அவர் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

பணக் கட்டுக்களுடன் இருந்த சில ஆவணங்களைக் கொண்டு தொலைக்காட்சியின் உரிமையாளரைக் கண்டுபிடித்த பொலிஸார், அவரிடம் இந்தப் பணத்தைக் கையளித்தனர். 

அதைக் கண்டு வியந்து போன அவர், தான் சேமித்து வைத்திருந்த அந்தப் பணத்தை, பிற்காலத்தில் குடும்பத் தேவைகளுக்குப் பயன்படும் என்ற நோக்கிலேயே தொலைக்காட்சியினுள் மறைத்து வைத்ததாகவும், ஞாபக மறதியாக முப்பது ஆண்டுகளுக்கு முன், அந்தப் பணக் கட்டுக்களுடனேயே அந்தத் தொலைக்காட்சியை நண்பர் ஒருவருக்கு இலவசமாகக் கொடுத்துவிட்டதாகவும் கூறினார்.

தொலைக்காட்சிக்குள் பணம் இருந்தது தெரியாத அந்த நண்பரே அதை அப்படியே மீள்பயன்பாட்டுக்காகக் கொடுத்திருந்தார்.