உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 1550 மில்லியன் டொலர் கடனுதவி - சாகல ரத்நாயக்க

23 Oct, 2023 | 09:52 AM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் கடந்த ஒரு வருட காலத்துக்குள் முன்னெடுக்கப்பட்ட பொருளாதார மேம்பாட்டு திட்டங்கள் காரணமாக, சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து மாத்திரமின்றி உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி என்பவற்றிடமிருந்தும் 1550 மில்லியன் டொலர் கிடைக்கவுள்ளதாக ஜக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளரும், ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஆலோசகருமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.

தேசிய கடன் மறுசீரமைப்பை நிறைவு செய்துள்ளதைப் போன்று வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பையும் விரைவில் நிறைவு செய்ய முடியும் எனத் தெரிவித்துள்ள சாகல ரத்நாயக்க, அதன் பின்னர் இலங்கை வங்குரோத்து நிலைமையிலிருந்து முற்றாக மீளும் என்றும் குறிப்பிட்டார்.

ஐ.தே.க.வின் விசேட சம்மேளனம் நேற்று முன்தினம் சனிக்கிழமை (21) கொழும்பு - சுகததாச உள்ளக அரங்கில் இடம்பெற்ற போது உரையாற்றுகையில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கடந்த ஆண்டு 70 சதவீதமாகக் காணப்பட்ட பணவீக்கம் தற்போது 1.3 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. அந்நிய செலாவணி கையிருப்பு 3530 மில்லியன் டொலர் வரை அதிகரித்துள்ளது. 34 சதவீதம் வரை உயர்ந்து காணப்பட்ட வங்கி வட்டி வீதங்கள் தற்போது 13 சதவீதமாகக் குறைவடைந்துள்ளது. வாகனங்கள் தவிர்ந்த ஏனைய இறக்குமதித் தடைகள் முழுமையாக நீக்கப்பட்டுள்ளன. அத்தியாவசிய பொருட்களை தட்டுப்பாடின்றி பெற்றுக் கொள்ளக் கூடியதாகவுள்ளது.

தேசிய கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளன. சர்வதேச நாணய நிதியத்தின் முதலாவது மீளாய்வினை வெற்றிகரமாக நிறைவு செய்ய முடிந்துள்ளது. அது இலகுவாக நிறைவு செய்யப்படக் கூடிய விடயமல்ல. இதற்காக நாம் இணக்கப்பாட்டை எட்டிய பல விடயங்கள் காணப்படுகின்றன. அவற்றை நடைமுறைப்படுத்தியதால் முதலாவது மீளாய்வு வெற்றிகரமாக நிறைவடைந்தது.

இதன் அடுத்த கட்டமாக வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பை முன்னெடுக்க வேண்டியுள்ளது. இன்னும் சிறிது காலத்துக்குள் அதனையும் நிறைவு செய்ய முடியும். அதனை நிறைவு செய்தால் தான் வங்குரோத்து நிலைமையை அடைந்த நாடு என்ற நிலையிலிருந்து இலங்கையை முழுமையாக விடுவிக்க முடியும். இதற்கு சமாந்தரமாக இன்னும் பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய கொள்கை திட்டமிடலுக்கான முதற்கட்ட ஒப்பந்தத்தை உலக வங்கியுடன் வெற்றிகரமாக கையெழுத்திட முடிந்தது. இதன் மூலம் 700 மில்லியன் டொலர் கிடைக்கப்பெறும். அதில் 250 மில்லியன் டொலர் ஏற்கனவே கிடைக்கப் பெற்றுள்ளது. எஞ்சிய தொகை எதிர்வரும் மாதங்களுக்குள் கிடைக்கும். அதே போன்று ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 850 மில்லியன் டொலர் இவ்வாண்டுக்குள் கிடைக்கப்பெறவுள்ளது.

நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கான வழிகளை நாம் உருவாக்கியிருக்கின்றோம். எவ்வாறிருப்பினும் ஸ்திரநிலை ஏற்பட்டுள்ளது எனக் கூறிக் கொண்டு எம்மால் மகிழ்ச்சியடைய முடியாது. அடுத்த கட்டத்துக்கு செல்ல வேண்டும். துரித பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும். மக்களின் வருமானத்தை அதிகரித்து, உயர் வாழ்வாதாரத்தை ஏற்படுத்துவதே எமது அடுத்த இலக்காக இருக்க வேண்டும்.

அதற்கமைய அறிமுகப்படுத்தப்பட்ட அஸ்வெசும திட்டத்தின் கீழ் 2024 ஜனவரி மாதத்துக்குள் பயனாளர்களுக்கான நலன்புரி கொடுப்பனவுகள் முறையாக சென்றடையும். மறுபுறம் பொருளாதாரத்தை டிஜிட்டல் மயப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். அதற்கமையவே இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் டிஜிட்டல் அடையாள அட்டை வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

முதலீட்டுத்துறையை முழுமையாக மறுசீரமைக்கும் வகையில் அதற்கான சட்ட மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இலங்கையில் முதலீட்டாளர்களுக்கான வாய்ப்புக்களை இலகுவாக்கப்படும். அதே போன்று முதலீட்டு வலயங்களை அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அம்பாந்தோட்டை, திருகோணமலை, பிங்கிரிய உள்ளிட்ட பிரதேசங்கள் அதில் உள்ளடங்கும்.

மேலும் இந்தியா, சிங்கப்பூர், தாய்லாந்து, சீனா போன்ற நாடுகளுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கு அல்லது புதுப்பிப்பதற்கான வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இருதரப்பு வர்த்தக உடன்படிக்கைகள் தொடர்பிலும் அவதானம் செலுத்தியுள்ளோம். இவற்றின் ஊடாக எமது நாட்டுக்கு முதலீடுகள் கிடைக்கப்பெறும். உற்பத்தி பொருளாதாரம் மேம்படும். இவற்றின் ஊடாக இளம் தலைமுறையினருக்கு தொழில் வாய்ப்புக்கள் கிடைக்கும்.

இந்தியா - இலங்கைக்கிடையில் பல ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. குறிப்பாக இலங்கை - இந்தியாவுக்கிடையில் எரிபொருள் குழாய் இணைப்புக்களை ஏற்படுத்தல், மின் தொடர்புகளை ஏற்படுத்தல் என்பவை இதில் பிரதானமானவையாகும். சீனாவுடன் இரு பிரதான முதலீட்டு வேலைத்திட்டங்கள் காணப்படுகின்றன. துறைமுக நகரம் மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகத்தை அண்மித்த பொருளாதார வலயம் என்பன அதில் உள்ளடங்கும்.

இவ்வாறு பொருளாதாரத்தில் மாத்திரம் அவதானம் செலுத்துவது போதுமானதல்ல. நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும். இதற்காக உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இது இலங்கைக்குள் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை என்றும், இதில் சர்வதேசத்தின் தலையீடு தேவையற்றது என்றும் ஜனாதிபதி அண்மையில் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார். இலங்கையில் மீண்டும் மக்களுக்கிடையில் பிளவுகள் ஏற்படக் கூடாது.

அண்மையில் மேற்கொண்டிருந்த வெளிநாட்டு விஜயங்களின் போது இலங்கை பொருளாதார நெருக்கடிகளிலிருந்து மீண்டு வந்த வேகம் ஆச்சரியமளிப்பதாக அந்நாட்டு தலைவர்கள் எம்மிடம் தெரிவித்தனர். இவ்வாண்டில் மாத்திரம் ஜப்பான், இந்தியா, சீனா, பிரான்ஸ் மற்றும் ஜேர்மன் உள்ளிட்ட நாடுகள் எமது ஜனாதிபதிக்கு பல்வேறு மாநாடுகளிலும் கலந்து கொள்வதற்கு அழைப்பு விடுத்தன. இவ்வாறு சர்வதேசத்தின் அங்கீகாரத்தைப் பெற்ற தலைவருடன் இணைந்து பயணிப்போம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வரவு - செலவு திட்டம் தாமதமாகும்...

2024-11-06 17:12:33
news-image

தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை வேறு ஒருவருக்கு...

2024-11-06 21:18:39
news-image

பங்களாதேஷ் உயர் ஸ்தானிகர் பாதுகாப்பு செயலாளருக்கிடையில்...

2024-11-06 20:14:55
news-image

எரிபொருள் விலை சூத்திரம் தொடர்பில் மாற்றுக்கருத்துக்களை...

2024-11-06 16:21:54
news-image

அமெரிக்காவின் புதிய  ஜனாதிபதிக்கு ஜனாதிபதி வாழ்த்துத்...

2024-11-06 19:46:33
news-image

மன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் கணிய மண்...

2024-11-06 19:30:48
news-image

ஊடக அடக்குமுறையை பிரயோகிப்பது எமது நோக்கமல்ல...

2024-11-06 16:27:48
news-image

8 மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை...

2024-11-06 17:50:04
news-image

தோல் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு !

2024-11-06 17:24:58
news-image

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர், ஜனாதிபதியின் செயலாளருடன்...

2024-11-06 17:33:20
news-image

அரசியல் தீர்வைநோக்கிய பயணத்துடன் அபிவிருத்தியே எனது...

2024-11-06 17:25:41
news-image

பிரதமருக்கென ஒதுக்கப்பட்டிருந்த அம்புலன்ஸ் வண்டி, வைத்திய...

2024-11-06 17:04:21