சுபத்ரா
கோட்டாபய, மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புச் செயலாளராக இருந்த காலகட்டத்தில், சர்வ வல்லமை பெற்றவராக விளங்கினார்.
அப்போது, ஜனாதிபதியாக இருந்தவர் அவரது அண்ணன் மஹிந்த ராஜபக்ஷ. அவரின் ஏனைய சகோதரர்களான சமல் ராஜபக்ஷ மற்றும், பசில் ராஜபக்ஷ ஆகியோர் அமைச்சர்களாக இருந்தனர்.
இவ்வாறான நிலையில் அதிகாரத்துவக் குடும்பத்தைச் சேர்ந்த கோட்டாபய ராஜபக்ஷ, அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் சிம்மசொப்பனமாக விளங்கினார்.
மஹிந்த ராஜபக்ஷ தங்களுடன் பேசிக் கொண்டிருக்கும் போது, கோட்டா வருகிறார் என்று கூறி, பேச்சை மாற்றிக் கொண்டார், குரலை தாழ்த்திக் கொண்டார் என்றும் சிலர் கூறியிருக்கிறார்கள்.
மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் பாதுகாப்புச் செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்ஷ, அரசாங்கத்தில் முழு அதிகாரத்தையும் கொண்டிருந்தார் என்பதையே அந்தக் கருத்துக்கள் வெளிப்படுத்தியிருந்தன.
கோட்டாபய ராஜபக்ஷவை மீறி எதையும் செய்ய முடியாத நிலை அப்போது காணப்பட்டது என்பதை, அரசாங்கத்தில் இருந்தவர்கள் இன்றைக்கும் ஏற்றுக் கொள்ளும் நிலையில் தான் இருக்கிறார்கள்.
அதனால் தான், அரசாங்க காரியங்களை நிறைவேற்றுவதற்கு பலரும் அவரது காலைச் சுற்றிக் கொண்டிருந்தனர்.
அப்போது பாதுகாப்புச் செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்ஷ பின்னர் ஜனாதிபதியாக தெரிவாகியதும், அந்தளவுக்கு கண்டிப்புடன் நடந்து கொண்டார் எனக் கூறமுடியாது.
அவரது முடிவுகள், நாட்டுக்கும் மக்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது உண்மை. ஆனாலும், அவர் பாதுகாப்புச் செயலாளராக இருந்தபோது நடந்து கொண்டது போல, ஜனாதிபதியாக இருந்தபோது நடந்து கொள்ளவில்லை.
அண்மையில் செவ்வி ஒன்றை வழங்கியிருந்த ராஜபக்ஷ விசுவாசிகளில் ஒருவரான பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன, “கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்புச் செயலாளராக இருந்த போது செயற்பட்டது போன்று திறமையாகச் செயற்படுவார் என்று எதிர்பார்த்து ஏமாந்து விட்டோம்.
அவர் பாதுகாப்புச் செயலாளராக இருந்தபோது செயற்பட்டது போல செயற்பட்டிருந்தால் நாடும், மக்களும், கட்சியும் நாங்களும் காப்பாற்றப்பட்டிருப்போம்” என்று கூறியிருந்தார்.
அதாவது, பாதுகாப்புச் செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்ஷவிடம் காணப்பட்ட இறுக்கம் ஜனாதிபதியாகிய பின்னர் இருக்கவில்லை என்பதே முக்கியமான குறைபாடாக ராஜபக் ஷ குடும்பத்தினராலும், ராஜபக் ஷ குடும்ப விசுவாசிகளாலும், சுட்டிக்காட்டப்படுகிறது.
அந்தக் காலகட்டத்தில் கோட்டாபய ராஜபக்ஷ ஜனநாயகம், மனித உரிமைகள், பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. அவர் எடுத்த தீர்மானங்களை குறித்து யாரும் குறுக்கே பேச முடியாது.
அவரை எதிர்த்தவர்களின் நிலையும் அவரை அம்பலப்படுத்த முயன்றவர்களின் நிலையும் என்னவானது என்பது அனைவருக்கும் தெரிந்தது தான்.
கோட்டாபய ராஜபக் ஷவின் பலமும் பலவீனமும் அதுதான். அந்த அதிகாரத்துவம் தான் அவரை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறும் நிலைக்கும் கொண்டு சென்றது, அவரை அந்தப் பதவியில் இருந்து துரத்தியடிக்கும் நிலைக்கும் வித்திட்டது.
கோட்டாபய ராஜபக் ஷ இப்போது அரசியல் அரங்கில் ஒதுங்கியிருக்கிறார். ஆனாலும், அவரது பாணியில் அவரது எச்சங்களின் அதிகாரத்துவம் அரசாங்கத்தில் இன்னமும் முற்றாக நீங்கி விடவில்லை.
தற்போது பாதுகாப்புச் செயலாளராக இருக்கும் ஜெனரல் கமல் குணரட்ண, கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்தப் பதவிக்குக் கொண்டு வரப்பட்டவர் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான்.
இறுதிக்கட்டப் போரில், இராணுவத்தின் 53 ஆவது டிவிசனுக்குத் தலைமை தாங்கிய ஜெனரல் கமல் குணரட்ண, மீது போர்க்குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன.
இறுதிப் போரின் போது, ஜெனரல் கமல் குணரட்ண, ஜெனரல் சவேந்திர சில்வா ஆகியோருடன் கோட்டாபய ராஜபக் ஷ நேரடியான தொடர்புகளை வைத்திருந்தார் என்றும், போர் நெறிமுறைகளுக்கு முரணான செயற்பாடுகளை அவர்கள் முன்னெடுத்திருந்தனர் என்றும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா குற்றம்சாட்டியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கோட்டாபய ராஜபக் ஷ கஜபா ரெஜிமென்டில் முதலாவது பற்றாலியனின் கட்டளை அதிகாரியாக இருந்த காலத்தில் இருந்து, அவருக்கு கீழ் இளநிலை அதிகாரியாக பணியாற்றியவர் கமல் குணரட்ண. ஜெனரல் சவேந்திர சில்வாவும் அவ்வாறான தொடர்பில் இருந்தவர் தான்.
அந்த நெருக்கத்தின் தொடர்ச்சியாகவும், இறுதிப் போர்க்கால சம்பவங்கள் குறித்த குற்றச்சாட்டுகளுடன் தொடர்புபட்டிருந்தவர்கள் என்ற வகையிலும், கோட்டாபய ராஜபக் ஷவின் ஆட்சிக்காலத்தில் மாத்திரமன்றி, அவருக்குப் பின்னரும் கூட பாதுகாப்புச் செயலாளராக இருக்கும் வாய்ப்பு ஜெனரல் கமல் குணரட்ணவுக்குக் கிடைத்திருந்தது.
ஜெனரல் கமல் குணரட்ணவுக்கு அமெரிக்கா அதிகாரபூர்வமற்ற பயணத்தடையை விதித்திருக்கின்ற போதும், அவரை பாதுகாப்புச் செயலாளராக தொடர்ந்து வைத்திருக்கிறார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க.
இவ்வாறான நிலையில் தான், ஜெனரல் கமல் குணரட்ணவும், இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகேயும் (இவரும் கஜபா ரெஜிமென்ட்டை சேர்ந்தவர் தான்) நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நடந்த பாதுகாப்புத் தொடர்பான மேற்பார்வைக் குழுவின் கூட்டத்தில், தனக்கு அச்சுறுத்தல் விடுத்தனர் என்ற குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார் பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி.
முன்னாள் அமைச்சரான சந்திம வீரக்கொடி, போர்க்காலத்தில் இராணுவத்தை ஆதரித்தவர், போருக்குப் பின்னர், இராணுவத்தின் மீதான குற்றச்சாட்டுகளை நிராகரித்தவர்.
அவ்வாறான ஒருவர் இன்று பாதுகாப்புச் செயலாளர் மீதும் இராணுவத் தளபதியின் மீதும் இந்தக் குற்றச்சாட்டுகளை கூறியிருக்கிறார்.
பாதுகாப்புத் தொடர்பான மேற்பார்வைக் குழுவின் கூட்டத்தில், படைக்குறைப்பு பற்றிய கலந்துரையாடல் நடந்து கொண்டிருந்த போது, படை உயர் அதிகாரிகள், அரசாங்க நிதியை வீண் விரயம் செய்வதாக குற்றம்சாட்டியிருந்தார் சந்திம வீரக்கொடி.
அப்போதே தனக்கு பாதுகாப்புச் செயலாளர் மற்றும் இராணுவத் தளபதியினால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக சந்திம வீரக்கொடி சபாநாயகரிடம் முறைப்பாடு செய்திருந்தார்.
இந்த விவகாரம் குறித்து பாராளுமன்றத்தில் பேசிய சந்திம வீரக்கொடி, பாதுகாப்புக் குறித்த மேற்பார்வைக் குழுவின் கூட்டத்தில் நடந்த உண்மைகளை அறிந்து கொள்வதற்கு, அது தொடர்பான காணொளியை தெரிவுக்குழுவிடம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.
ஆனால், சபாநாயகர் அதற்கு இணங்கவில்லை. அதனை வெளியிட மறுத்துவிட்டார்.
அதேவேளை, இராணுவ அதிகாரிகளைக் குற்றம்சாட்டிய சந்திம வீரக்கொடியை பாதுகாப்புக் குறித்த மேற்பார்வைக் குழுவில் இருந்து நீக்க வேண்டும் என்று, குழுவின் தலைவரான சரத் வீரசேகர கோரியிருப்பதும் கவனிக்கத்தக்கது.
இவ்வாறான நிலையில் தான், பாதுகாப்புச் செயலாளர் தெரிவுக்குழுவில் முன்னிலையாவதற்கு, அடிக்கடி பாராளுமன்றம் வரவேண்டும் என்பதால், தெரிவுக்குழு கூட்டத்துக்கு தங்களின் மெய்க்காவலர்கள் சகிதம் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார கோரிக்கை விடுத்திருக்கிறார்.
பாதுகாப்புச் செயலாளரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருக்கிறது, அவரால் தங்களின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்படலாம் என்பது தான் இந்தக் கோரிக்கைக்குக் காரணம்.
நாட்டின் பாதுகாப்புச் செயலாளரே, பாராளுமன்றத்துக்குள், பாராளுமன்ற உறுப்பினர்களால் அச்சுறுத்தலாக பார்க்கப்படும் நிலை காணப்படுகிறது.
இது ஜனநாயக அமைப்புக்கு உள்ள மிகப்பெரிய சவால். பாராளுமன்றம் தான், நாட்டின் ஜனநாயகத்தின் உயர் அதிகாரம் கொண்ட அமைப்பு.
அங்கேயே பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது என்பதும், அங்கேயே பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுகிறது என்பதும், அதையும் அதிகாரத்தில் உள்ளவர்களே முன்னெடுக்கின்றனர் என்பதும் மோசமான ஜனநாயக நிலையின் வெளிப்பாடு.
சந்திம வீரக்கொடிக்கு மாத்திரம் தான் இந்த நிலை என்றில்லை.சில வாரங்களுக்கு முன்னர், பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமாருக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலும், நீதிபதி சரவணராஜாவை அச்சுறுத்தும் வகையிலும் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர உரையாற்றியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
பாராளுமன்றமே பாதுகாப்பு அச்சுறுத்த ல் விடுக்கப்படும் களமாக மாறிக் கொண்டிருக்கிறது.
மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது.இது ஜனநாயகத்துக்கான உச்சக்கட்ட அச்சுறுத்தல். இந்த அச்சுறுத்தல் கோட்டாபய ராஜபக் ஷவின் காலத்தில் ஆரம்பித்தது. அப்போதே இந்த அச்சுறுத்தலை முடிவுக்குக் கொண்டு வந்திருந்தால், அவரது எச்சங்களாக இருக்கும் நபர்கள் இன்றைக்கு பாராளுமன்றத்துக்குள்ளேயே வாலாட்டுகின்ற நிலை வந்திருக்காது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM