எம்.எஸ்.தீன்
இலங்கையில் நடைமுறையில் உள்ள பயங்கரவாதச் தடைச் சட்டமானது பல வகையிலும் மனித உரிமைகளுக்கு முரணானதாக அமைந்துள்ளது. இச்சட்ட மூலம் சிறுபான்மை மக்களின் உரிமைக்கான போராட்டங்களை நசுக்குவதற்கும், இச்சட்ட மூலத்தின் கீழ் கைது செய்யப்படுகின்றவர்களை விசாரணைகளின்றி நீண்ட காலமாக தடுத்து வைப்பதற்கும் முடியுமாக இருந்தது. இச்சட்ட மூலத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பலர் வருடக் கணக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.
இச்சட்டத்தின் கொடூரத்தை கவனத்திற் கொண்டு, பயங்கரவாதச் தடைச் சட்டத்தில் மனித உரிமைகளை பாதுகாக்கக் கூடிய வகையிலும், ஜனநாயகத்தை பேணும் வகையிலும் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டுமென்று உள்நாட்டிலும் குறிப்பாக தமிழர்கள் தரப்பிலும், சர்வதேச மட்டங்களிலும் தெரிவிக்கப்பட்டன.
இதனால், இலங்கை அரசாங்கம், பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட மூலமொன்றினை புதிதாக முன்மொழிந்தது. இதற்கான வர்த்தமானி அறிவித்தல் கடந்த மார்ச் 20ஆம் திகதி வெளியிடப்பட்டது. இச்சட்ட மூலத்தில் உள்ள முன்மொழிவுகள் ஏற்கெனவே உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை விடவும் மோசமான முன்மொழிவுகளைக் கொண்டுள்ளன. அரசாங்கத்தை ஜனநாயக அடிப்படையில் விமர்சனம் செய்கின்றவர்களையும், அரசாங்கத்தைக் கண்டித்து போராட்டங்களை நடத்துகின்றவர்களை கைது செய்வதற்கும், மனித உரிமைகளை மீறும் வகையிலும் அமைந்துள்ளது. பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை அமுல்படுத்தும் போது இலங்கை சர்வதேச நாடுகளுடனான உறவில் விரிசலை ஏற்படுத்தும் என்று ஜனாதிபதி சட்டத்தரணி சுஹைர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கு சட்டத்தரணிகளும், பொது அமைப்புக்களைச் சேர்ந்தவர்களும் தமது எதிர்ப்புக்களை வெளியிட்டனர். ஐ.நா உட்பட சர்வதேச அமைப்புக்களும் இச்சட்டமூல மும்மொழிவுகளை மாற்றியமைக்குமாறும், அந்த மாற்றங்கள் ஜனநாயகத்தையும், மனித உரிமைகளை பேணும் வகையிலும் அமைந்திருக்க வேண்மென்று இலங்கை அரசாங்கத்தை கேட்டுக் கொண்டன.
இவ்வாறான எதிர்ப்புக்களை கவனத்திற் கொண்ட இலங்கை அரசாங்கம் ஏற்கெனவே முன்மொழியப்பட்டவைகளில் திருத்தங்களை மேற்கொண்டு கடந்த செப்டம்பர் 15ஆம் திகதி வர்த்தமானியை வெளியிட்டது.
இவ்வாறு திருத்தியமைக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட முன்மொழிவுகள் குறித்து ஐ.நாவின் நிபுணர்கள் மற்றும் விசேட அறிக்கையாளர்கள் தமது எதிர்ப்புக்களை வெளியிட்டுள்ளனர்.
பயங்கரவாத எதிர்ப்புச்சட மூலமானது ஏற்கெனவே நடைமுறையிலுள்ள மிக மோசமான பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் குறைபாடுகளை நிவர்த்தி செய்யவில்லை. இச்சட்ட மூலத்தின் பெரும்பாலான சரத்துக்கள் சமூகத்தின் மத்தியிலிருந்து பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்குப் பின்பற்றப்பட வேண்டிய சட்டத்தின் ஆட்சியை அடிப்படையாகக் கொண்ட செயன் முறைக்கு முற்றிலும் மாறுபட்டவையாகவே அமைந்திருப்பதாக விமர்சிக்கப்படுகிறது.
ஆட்சியாளர்கள் காலத்திற்கு காலம் சட்ட மூலங்களை கொண்டு வந்துள்ளார்கள். அவ்வாறு கொண்டு வரப்பட்ட பல சட்ட மூலங்கள் ஆட்சியாளர்களை வலுப்படுத்தவும், சிறுபான்மையினரை அடக்கி ஒடுக்கவும், மனித உரிமைகளை மீறும் வகையிலும் அமைந்துள்ளன. பயங்கரவாத தடைச் சட்டத்தினால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் வடக்கு, கிழக்கு தமிழர்கள்.
நாட்டில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக வகைதொகையின்றி தமிழர்கள் பலரும் கைது செய்யப்பட்டனர். இதன்போது தமிழ் அரசியல் கட்சிகளும், அமைப்புக்களும் பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக போராட்டங்களை மேற்கொண்டன. ஆனால், சிங்களவர்களும், முஸ்லிம்களும் பயங்கரவாத தடைச் சட்டம் குறித்து பெரிய அளவில் எதிர்ப்புக்களை காட்டவில்லை.
ஆனால், உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னரும், ‘அரகலய’ போராட்டத்தின் பின்னரும் முஸ்லிம்களும், சிங்களவர்களும் அதிக அளவில் கைது செய்யப்பட்டனர். இதன் போதுதான் இச்சட்ட மூலத்தின் ஆபத்தை சிங்களவர்களும், முஸ்லிம்களும் உணரத் தொடங்கினர். தமது எதிர்ப்புகளையும் வெளியிட்டனர்.
இந்தப் பின்னணியில் சர்வதேச நாடுகளும், அமைப்புக்களும் தங்களின் கவனத்தை பயங்கரவாத தடைச் சட்டத்தின் மீது செலுத்தியது. பயங்கரவாத தடைச் சட்டத்தை மாற்றியமைத்து சர்வதேச தரத்திற்கு அமைவாக அதனை மாற்றியமைக்குமாறு இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தங்களை கொடுத்தன.
இந்நிலையில் பயங்கரவாத தடைச் சட்டத்தை எதிர்ப்போரை ஏமாற்றும் வகையிலும், அரசாங்கத்திற்கு எதிரான போராட்டக்காரர்களை கைது செய்வதற்கும், நீதித்துறையின் அதிகாரத்தை பலவீனப்படுத்தும் வகையிலும், ஆட்சியாளர்களின் கரங்களை வலுப்படுத்தும் வகையிலும், பொலிஸாருக்கு அதிக அதிகாரங்களை வழங்குவதற்கும், ஜனாதிபதிக்கு அதிஉச்ச அதிகாரங்களை கொடுக்கவும் பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு பதிலாக பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட மூல முன்மொழிவுகளை அரசாங்கம் முன் வைத்தது. இதற்கு எதிர்ப்புக்கள் ஏற்பட்ட போது, மீண்டும் திருத்தங்களுடன் அதனை முன் வைத்த போதிலும் அதனை ஏற்றுக் கொள்ள முடியாதென்ற நிலைப்பாட்டை முன்னிறுத்தி இலங்கையில் உள்ள பல அரசியல் கட்சிகளும் , ஐ.நா உள்ளிட்ட சர்வதேச அமைப்புக்களும் அறிக்கைகளை வெளியிட்டுள்ளன.
பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட மூலத்தை வாபஸ் வாங்குமாறும், வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறும் தன்மை மற்றும் சகல தரப்பினருடனான விரிவான கலந்துரையாடல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் தயாரிக்குமாறு மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது.
இதேவேளை, உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட மூலத்தின் பல சரத்துக்கள் அடிப்படை சட்டவாக்கக் கோட்பாடுகளுக்கு முரணான வகையில் அமைந்துள்ளன. எனவே அனைத்துப் பிரஜைகளினதும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதாக அளித்திருக்கும் வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு இலங்கை இச்சட்ட வரைபைத் திருத்தியமைப்பது அவசியமென்று சர்வதேச ஜுரர்கள் ஆணைக்குழு இலங்கையை வலியுறுத்தியுள்ளது.
தடுப்புக்காவல் உத்தரவை பரிசீலனை செய்வதற்கான நீதிவானின் அதிகாரம் மட்டுப்படுத்தப்படுவதுடன், 'பயங்கரவாதம்' எனும் பதத்திற்கான பரந்துபட்ட வரைவிலக்கணமானது அடிப்படை சட்ட ஆட்சிக் கோட்பாடுகளுக்கு முரணான வகையில் அமைந்துள்ளது. எனவே, பிரஜைகளின் மனித உரிமைகளை பாதுகாப்பதாக இலங்கை அளித்துள்ள உறுதிமொழியை நிறைவேற்ற வேண்டுமெனில் இச்சட்டவரைபு மேலும் திருத்தியமைக்கப்பட வேண்டியது அவசியமாகும் என்றும் சர்வதேச ஜுரர்கள் ஆணைக்குழு இலங்கையை கேட்டுள்ளது.
இவ்வாறு அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட மூலத்திற்கு பல திசைகளில் இருந்தும் எதிர்ப்புக்கள் உருவாகியுள்ள போதிலும் அரசாங்கம் தமது திட்டத்திலிருந்து விலகிக் கொண்டதாகத் தெரியவில்லை. கடந்த காலங்களில் கொண்டு வரப்பட்ட சட்ட மூலங்களின் மூலமாக ஆட்சியாளர்களை வலுப்படுத்தவும், சிறுபான்மையினரை பலவீனப்படுத்தவும் பயன்படுத்தப்பட்ட பங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு பதிலாகக் கொண்டு வரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட மூலமானது அமுல்படுத்தப்ப டுமாயின் மூவின மக்களையும் அச்சுறுத்தி ஜனநாயகத்தை அடகு வைத்துவிடும். ஆதலால், இச்சட்ட மூலத்தின் ஆபத்தை, விளைவுகளை கருத்திற் கொண்டு மூவின மக்களின் பிரதிநிதிகளும், கட்சிகளும் சர்வதேசமும், நாட்டு மக்களும் ஏற்றுக் கொள்ளக் கூடியவாறு இச்சட்ட மூலத்தை மாற்றியமைப்பதற்கு அரசு முன்வர வேண்டும்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM