தேசியன்
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர சுழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை கூறும் ‘800’ திரைப்படம் பற்றிய உரையாடல்கள் ஆரம்பித்த காலம் தொடக்கம் தற்போது திரைப்படம் வெளிவந்த பிறகும் கூட அவர் மீதான சர்ச்சைகள் முடிந்தபாடில்லை. முரளியின் வேடத்தில் ஆரம்பத்தில் நடிக்கவிருந்த நடிகர் விஜய் சேதுபதி ‘தமிழ் உணர்வாளர்களின்’ கடும் எதிர்ப்பு காரணமாக அதிலிருந்து விலகிக்கொண்டார்.
அதன் பின்னர் தென்னிந்திய தமிழ் சினிமா நடிகர்கள் எவருமே அந்த வேடத்தில் நடிப்பதற்கு முன்வரவில்லை. இறுதியில் வேற்று மொழி நடிகரான மதூர் மிட்டல் என்பவரே முரளியின் வேடத்தில் நடிப்பதற்கு முன்வந்தார். ஒரு தமிழனின் கதையையும் கிரிக்கெட் சாதனையையும் கூறும் படத்துக்கு தமிழ் நடிகர் ஒருவர் கிடைக்காததே துரதிர்ஷ்டம் தான். ஆனால் இது முரளிதரனை எவ்விதத்திலும் பாதிக்கவில்லை.
ஏனென்றால் அவர் என்றும் தன்னை தமிழன் என்றோ இலங்கையர் என்றோ கூறியது கிடையாது. தான் அனைத்து இனங்களையும் மதங்களையும் கடந்த ‘கிரிக்கட்டர்’ என்றே கூறி வருகின்றார். தனது வாழ்க்கையைக் கூறும் 800 திரைப்பட முன்னோட்ட மற்றும் செயற்பாட்டு நிகழ்வுகளில் பங்கு கொண்ட முரளிதரன் தெரிவித்த சில கருத்துகள் பலரை எரிச்சலடையச் செய்திருந்தன. தான் இன்னும் மாறவில்லையென்பதை அவர் நிரூபித்தார்.
இலங்கையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் மலையக அரசியல்வாதிகளைப் பற்றி தெரிவித்த கருத்துகளை பலர் வரவேற்றிருந்த அதே வேளை அதை சொல்வதற்கு இவருக்கென்ன அருகதை உள்ளது என்று கேள்வியெழுப்பியிருந்தனர். அதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. அவர் கிரிக்கெட் விளையாடிய காலகட்டத்தில் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகவிருந்தார். மகிந்தவுடன் முரளிதரனுக்கு நெருக்கம் இருந்தது. முரளி யுத்தம் பற்றிய சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தமையானது அவரை மகிந்த விசுவாசியாகவே காட்டியிருந்தது.
இரண்டாவது விடயம் கோத்தாபய ராஜபக்ச ஜனாதிபதியானவுடன் அவருடன் நெருக்கத்தை அவர் ஏற்படுத்தினார். இதன் காரணமாக அவருக்கு ஆளுநர் பொறுப்பும் தேடி வந்தது. அதை அவர் நிராகரித்திருந்தார். அவரை பாராளுமன்றத் தேர்தலில் நிற்கும்படியும் ராஜபக்ச சகோதரர்கள் வற்புறுத்தினர்.
ஆனால் அவரது ஊரான கண்டியில் இல்லை, நுவரெலியாவில். நுவரெலியா மாவட்டத்தில் இ.தொ.கா மற்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணியை பிளவுபடுத்தும் எண்ணம் கோத்தாபய ராஜபக்சவுக்கு இருந்தது. அவருக்கு ஆறுமுகன் தொண்டமானின் அரசியல் பிடிக்காததொன்று. ஆனால் அந்த கோரிக்கையையும் முரளி ஏற்கவில்லை.
ஒரு கட்டத்தில் அவரது இளைய சகோதரர் முத்தையா பிரபாகரன் கோத்தபாயவின் வியத்மகவில் இணைய அவரே திடீரென நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக உருவெடுத்தார். 2020 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத்தேர்தலில் அவர் கோத்தபாயவின் நேரடி ஆதரவுடன் நுவரெலியாவில் களமிறங்கினார்.
முரளியின் சகோதரர் பிரபாகரனின் அரசியல் பிரவேசத்துக்குப்பிறகே முரளிதரனின் தந்தையார் முத்தையா, மஸ்கெலியா பிரவுண்ஸ்விக் பகுதியில் பிறந்து வளர்ந்த ஒருவர் என்ற வரலாறு பலருக்கு தெரியவந்தது. ஏனென்றால் அதை பிரதானமாக வைத்தே தனது அரசியல் பிரசாரத்தை பிரபாகரன் ஆரம்பித்திருந்தார். எந்த இடத்திலும் தனது அடையாளம் குறித்து மிகவும் எச்சரிக்கையாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்து வந்த முத்தையா முரளிதரன் தனது தம்பிக்காக தானும் மலையகத்தின் புத்திரன் என்ற ஆடையை முதன் முதலாக அணிந்து கொண்டார்.
தனது சகோதரரின் தேர்தல் பிரசார கூட்டங்களில் அவர் அதிகமாக பேசவில்லை. பல தடவைகள் அட்டன் நகருக்கு வந்தார். ஒரு தடவை இலங்கையணியின் அதிரடி வீரராக கிரிக்கெட் உலகை ஈர்த்த சனத் ஜெயசூரிய பிரபாகரனின் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொள்ள அட்டன் நகருக்கு வருகை தந்த போது முரளியும் அவரோடு வந்து ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றியிருந்தார்.
இறுதியில் 28 ஆயிரம் வாக்குகளைப் பெற்று முத்தையா பிரபாகரன் தோல்வியுற்றார். மறுபக்கம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அட்டன் பகுதி வேட்பாளர் சுமார் ஐந்தாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பாராளுமன்ற பிரவேசத்தை இழந்தார். இந்த சம்பவம் முத்தையா பிரபாகரன் மீது அல்லாது முத்தையா முரளிதரன் மீதே பலருக்கு கோபத்தை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் தற்போது அவரது வாழ்க்கையை கூறும் படமும் வெளியாகியுள்ளது. இது தொடர்பான ஊடகவியலாளர்கள் சந்திப்புகள் தமிழகத்திலும் இலங்கையிலும் இடம்பெற்றிருந்தன. தமிழகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போது இலங்கை அரசியல் தொடர்பான கேள்விக்கு பதில் கூறியிருந்த முரளிதரன், ‘அதை நீங்கள் அரசியல்வாதிகளிடம் கேளுங்கள் நான் அரசியல்வாதி இல்லை கிரிக்கெட்டர்’ என்று பதில் கூறினார். தமிழக ஊடகங்களுக்கு, முரளியின் சகோதரர் கோத்தபாயவின் ஆதரவோடு அரசியலில் குதித்த விடயம் தெரிந்திருக்க நியாயம் இல்லை.
அதே போன்று கொழும்பில் இடம்பெற்ற ஒரு சந்திப்பில் முரளிதரன், மலையக மக்களுக்கு உதவிகள் செய்ய அரசியல்வாதிகள் இடமளிப்பதில்லையென்றும் அவர்கள் தனது செயற்பாடுகளுக்கு இடையூராகவே இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். அவரது இந்த கருத்துக்கு இ.தொ.காவின் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மருதுபாண்டி ராமேஷ்வரன் பதிலடி ஒன்றை கொடுத்திருந்தார்.
பூண்டுலோயா பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றியிருந்த அவர், ‘மலையகத்தில் சேவைகளை முன்னெடுப்பதற்கு இப்பகுதி அரசியல்வாதிகள் தடையாக உள்ளனர் என ஒருவர் கூறியுள்ளார். மக்களுக்கு சேவை செய்ய முன்வாருங்கள், நாங்களே மாலைபோட்டு வரவேற்பளிக்கின்றோம் - ஆனால் தேர்தல் காலங்களில் வாக்குகளுக்காக எவரையாவது அழைத்துக்கொண்டு வராதீர்கள்.
தேர்தல் முடிந்ததும் எங்களையும் கஷ்டத்தில் தள்ளிவிட்டு, காணாமல் போய் விடுகின்றீர்கள். மலையகத்தில் பல அரசசார்பற்ற நிறுவனங்கள் சேவைகளை முன்னெடுக்கின்றன, அவற்றுக்கு எவரும் தடை ஏற்படுத்தவில்லை. மலையகத்துக்கு சேவை செய்ய முன்வருபவர்கள் இருந்தால் நாம் நிச்சயம் வரவேற்போம். ஆனால் எமது சமூகத்தை பிளவுபடுத்தும் நோக்கில் தேர்தல் காலத்தில் மட்டும் வரும் போலிகளை நம்பமுடியாது’ என அவர் கூறியிருந்தார்.
கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் கிரிக்கெட் விளையாடும் காலகட்டங்களில் ஊடகங்களை எச்சரிக்கையாக தவிர்த்து விடுவார். அவரை பெரும்பான்மையின ஊடகங்களே அதிகம் அணுகியுள்ளன. மேலும் ஏதாவது கருத்து தெரிவிப்பதாக இருந்தாலும் அவர் சிங்கள மொழியிலேயே கதைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் பெரும்பான்மையினத்தவர்கள் அதிகம் உச்சரித்த தமிழ்ப்பெயர் ‘முரளி ‘ என்பதாகத்தான் இருக்கும்.
அதே வேளை இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் இருபது வருட காலமாக அணியில் நிரந்தர இடம்பிடித்திருந்தும் மிகவும் குறைவாக தனது தாய்மொழியில் பேசிய ஒரே கிரிக்கெட் வீரரும் இவராகத்தான் இருக்கும். தனது சுய அடையாளத்தை எந்த சந்தர்ப்பத்திலும் வெளியிடாத முரளிதரனின் இந்த செயற்பாடு ஒரு அரசியலாகவே பார்க்கப்படுகின்றது. சிங்கள இரசிகர்களை திருப்திபடுத்த அவர் கையாண்ட ஒரு உத்தியாகவும் நோக்கப்படுகின்றது.
கிரிக்கெட் உலகம் வியந்து நோக்கிய ஒரு மாயாஜால பந்து வீச்சாளராகவும் அதிக விக்கட்டுகளை வீழ்த்திய சாதனை வீரராகவும் வலம் வந்த முரளிதரனுக்கும் இலங்கை வாழ் தமிழ் மக்களுக்குமிடையே ஒரு இடைவெளி நிலவிக்கொண்டே இருக்கின்றது. ‘800’ திரைப்பட முன்னோட்ட நிகழ்வுகளில் இது வெளிப்பட்டது. சமூக ஊடகங்களில் அவரை நிராகரித்தும் அவரை விமர்சித்துமே கருத்துகள் அதிகம் பகிரப்பட்டிருந்தன. அதையும் தனது கருத்தால் சர்ச்சையை ஏற்படுத்தினார் முரளி.
‘நான் பேசுவது சமூக ஊடகங்களில் வரும் து, என்னை தகாத வார்த்தைகளால் திட்டித் தீர்க்கிறார்கள். ஒருவரை பிடித்துவிட்டால் போற்றுவதும், பிடிக்காவிட்டால் குற்றம் கண்டு தகாத வார்த்தைகளால் ஏசும் நிலைமைக்கு சமூக ஊடகங்கள் வந்துவிட்டன ’ என்று அவர் கூறியுள்ளார். ‘800’ திரைப்படத்தில் ஒரு காட்சியில் நாசர் பயன்படுத்திய வார்த்தை பிரயோகம் மலையக சமூகத்தினரை இழிவுபடுத்துவதாக கடும் விமர்சனங்கள் எழுந்தன.
பின்னர் அது மலையகத்தமிழன் என்று மாற்றப்பட்டது. முரளி கிரிக்கெட் விளையாடிய காலத்தில் எந்த ஊடகங்களும் அவரை மலையகத் தமிழன் என்று அழைக்கவே இல்லை. அவரும் தன்னை எந்த இடத்திலும் அவ்வாறு வெளிப்படுத்தவில்லை. அது அவரது அரசியல். முரளி வாழ்க்கையைக் கூறும் சினிமா படத்திலும் அந்த வார்த்தைப் பயன்படுத்தப்பட்டிருப்பதுவும் ஒரு வகை அரசியல் தான்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM