முன்னதாக எல்லை நிர்ணய குழுவின் அறிக்கை உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவிடத்தில் கையளிக்கப்பட்டுள்ள நிலையில் உடனடியாக வர்த்தமானி பிரசுரத்தை வெளியிட்டு புதிய முறையில் தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளமை கடுமையாக கண்டிப்பதாக சிறு மற்றும் சிறுபான்மை அரசியல் கட்சிகள் அறிவித்திருந்தன. 

கடந்த மாதம் 18ஆம் திகதி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமையகமான தாருசலாமில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி, ஈழமக்கள் ஜனநாயக கட்சி, மற்றும் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் ஆகியன விசேட சந்திப்பொன்றை நடத்தியிருந்தன. 

இச்சந்திப்பின் நிறைவில் மேற்கண்டவாறு கண்டனத்தை வெளியிட்டதோடு குறித்த விடயம் தொடர்பாக மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்களுக்கான அமைச்சர்  பைசர் முஸ்தபா சிறு, சிறுபான்மை அரசியல் கட்சிகளுக்கு அநீதி இழைக்கும் ஜனநாயக  விரோதமான செயற்பாட்டை கைவிடவேண்டும் என்பதோடு தமது பரிந்துரைகளையும் கவனத்திற் கொண்டு உள்ளீர்க்கப்பட்ட இறுதி அறிக்கையையே வர்த்தமானி அறிவித்தலில் வெளியிட வேண்டுமென வலியுறுத்தியிருந்தன. 

இதனையடுத்து அமைச்சர் பைசர் முஸ்தபாவும் குறித்த விடயத்தை கருத்திற் கொள்வதாகவும் சிறு, சிறுபான்மை அரசியல் கட்சிகளை பாதிக்கும் வகையில் எந்தவொரு நடவடிக்கைகளும் எடுக்கப்படமாட்டது எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் எல்லை மீள்நிர்ணய அறிக்கையை நாளை(இன்று) வர்த்தமானியில் வெளியிடவுள்ளதாக அமைச்சர் பைசர் முஸ்தபா உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளார்.

அவ்வாறான நிலையிலேயே சிறு மற்றும் சிறுபான்மை அரசியல் கட்சிகள் அவசரமாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்கவுள்ளன. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவுஸ்திரேலியாவிலிருந்து இன்று அதிகாலை நாடு திரும்பவுள்ளமை குறிப்பிடத்தக்கது.