நடிகர் கார்த்தி நடிக்கும் 'ஜப்பான்' பட அப்டேட்

17 Oct, 2023 | 03:51 PM
image

தமிழ் திரையுலகின் பொக்ஸ் ஒபீஸ் சுப்பர் ஸ்டாரில் ஒருவரான நடிகர் கார்த்தி கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'ஜப்பான்' ‌படத்தின் டீசர் நாளை வெளியிடப்படுகிறது.

அத்துடன் தளபதி விஜய் நடிப்பில் ஒக்டோபர் 19 ஆம் திகதியன்று வெளியாகவிருக்கும்  'லியோ' திரையிடப்படும் பட மாளிகைகளில் கார்த்தியின் 'ஜப்பான்' படத்தின் டீசர் திரையிடப்படுகிறது. இதனால் கார்த்தியின் ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.

இயக்குநர் ராஜுமுருகன் இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் 'ஜப்பான்'. இதில் கார்த்தி, அனு இம்மானுவேல், ஜித்தன் ரமேஷ், சுனில், விஜய் மில்டன், வாகை சந்திரசேகர், பவா செல்லதுரை உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். தங்க நகை கொள்ளையை மையப்படுத்திய இந்த திரைப்படத்தை ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். ஆர். பிரபு பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் பிரத்யேக காணொளி வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் நாளை வெளியாகிறது.

அதனுடன் 'லியோ' திரைப்படம் திரையிடப்படும் பட மாளிகைகளிலும் 'ஜப்பான்' படத்தின் டீசர் திரையிடப்படும் என படக்குழுவினர் அறிவித்திருக்கிறார்கள்.

மேலும் 'ஜப்பான்' படத்தின் இசை வெளியீடு இம்மாதம் 28ஆம் திகதியன்று சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ரசிகர்களின் முன்னிலையில் நடைபெறுகிறது. இந்த திரைப்படம் தீபாவளி வெளியீடாக நவம்பர் 10 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகைகளில் வெளியாகிறது.

இதனிடையே தளபதி விஜய் நடிக்கும் 'லியோ' படத்துடன் கார்த்தி நடிக்கும் 'ஜப்பான்' படத்தின் டீசர் வெளியிடப்படுவதால், டீசருக்கு ரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்பும், ஆதரவும் கிடைக்கும் என திரையுலக வணிகர்கள் அவதானித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right