கிளிநொச்சி மாவட்டத்தில் டெங்குக் காய்ச்சலானது மிகத் தீவிரமாகப் பரவக்கூடிய அபாயநிலை அவதானிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.

வீடுவீடாகச் சென்று டெங்கு நுளம்பு வளரும் இடங்களை இனங்கண்டு அழித்தல், விழிப்புணர்வு ஏற்படுத்துதல், பாடசாலைகள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களை சுத்திகரித்தல் ஆகிய நடவடிக்கைள் மாவட்டம் முழுவதும் முன்னெடுக்கப்படுவதால் ஒவ்வொருவரும் உங்களால் இயன்றபங்களிப்பை வழங்கி உயிர்களைக் காக்க உதவிடுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கையில் பல மாவட்டங்களில் வேகமாகப் பரவிவரும் டெங்குக் காய்ச்சலானது தற்போது கிளிநொச்சி மாவட்டத்திலும் கால்பதித்துள்ளது.

2017 ஆம் வருடத்தின் முதல் 43 நாட்களில் கிளிநொச்சியின் நான்கு பிரதேச செயலக பிரிவுகளில் இருந்து 126 நோயாளர்கள் டெங்குக்காய்ச்சல் காரணமாகச் சிகிச்சை பெற்றுள்ளனர்.

இவர்களுள் அநேகர் வெளிமாவட்டங்களில் வேலை, கல்வி நடவடிக்கைகள் மற்றும் பிற தேவைகளுக்காகச் சென்று தங்கியிருந்தவேளையில் நோய்த்தொற்றுக்கு ஆளாகிய நிலையில் கிளிநொச்சி மாவட்டத்திற்குத் திரும்பியிருந்தமை அவதானிக்கப்பட்டுள்ளது.


கண்ணகைபுரம், கிராஞ்சி, கல்மடுநகர், புன்னைநீராவி, தருமபுரம், அம்பாள்குளம், பாரதிபுரம், கோணாவில், மலையாளபுரம், பிரமந்தனாறு, தருமபுரம், ஆனைவிழுந்தான், கிருஸ்ணபுரம், இராமநாதபுரம், சாந்தபுரம், வேரவில், அம்பாள்நகர், கணேசபுரம், கண்டாவளை, கல்லாறு, மாவடியம்மன், மாயவனூர், நாச்சிக்குடா, நல்லூர், பரமன்கிராய், பெரியகுளம், பெரியபரந்தன், செல்வாநகர், ஸ்கந்தபுரம், உருத்திரபுரம் கிழக்கு, உதயநகர் மேற்கு, வட்டக்கச்சி ஆகிய கிராமசேவையாளர் பிரிவுகளில் இருந்தே ஒன்றிற்கு மேற்பட்ட டெங்கு நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர்.

எனவே உயிர்க்கொல்லி டெங்கு நோயிலிருந்து மக்களை பாதுகாப்பதற்காக மாவட்டம் முழுவதும் டெங்கு குடம்பிகள் மற்றும் டெங்கு நுளம்புகள் வாழக்கூடிய இடங்களை இனங்கண்டு அழிக்கும் நோக்குடன் சிரமதான நடவடிக்கைகள் பிரதேச செயலாளர்கள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரிகளது ஒழுங்கமைப்பில் திட்டமிடப்பட்டுள்ளது.


வீடுவீடாகச் சென்று டெங்கு நுளம்பு வளரும் இடங்களை இனங்கண்டு அழித்தல், விழிப்புணர்வு ஏற்படுத்துதல், பாடசாலைகள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களை சுத்திகரித்தல் ஆகிய நடவடிக்கைள் மாவட்டம் முழுவதும் முன்னெடுக்கப்படவுள்ளது. 

இதற்காக நீங்கள் ஒவ்வொருவரும் உங்களால் இயன்றபங்களிப்பை வழங்கி உங்களதும் உங்கள் அன்பிற்கும் பாசத்திற்கும் உரியவர்களதும் உயிர்களைக் காக்க உதவிடுமாறு கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம்  வேண்டுகோள் விடுக்கின்றார்.